சனி, 12 ஆகஸ்ட், 2017

கடி, கறி, கொறி, இவற்றுள் " கடி" : சொல் வண்ணம்.



-கடி.  கறி,  கொறி

கடி என்ற சொல்லை அணுகி அலசுங்கள்.  இதிலுள்ள இரண்டு எழுத்துக்களுமே வல்லெழுத்துக்கள்.  கடலையைக் கடிக்கும்போது, அதை  பற்களில் வைத்து நெருக்கி உடைத்து மென்று மெதுவாக்கி மனிதன் விழுங்குகிறான். அது சற்று கடுமையான வேலை.  அவன் கடிக்குங்காலை உங்கள் விரல் அங்கே போய்விடுமானால் அது துண்டாகிவிடக்கூடும். தமிழ்மொழியில் கடினமானதைச் செய்யும்போது, கடினமான ஒலிகளை உள்வைத்துச் சொல்லை அமைக்கிறார்கள்.  க என்பது வல்லெழுத்து. டி என்பதும் வல்லெழுத்து.  இந்தச் சொல் கடு (கடுமை) என்ற அடிச்சொல்லிலிருந்து அமைக்கப்படுகிறது.  இதைக் கடு> கடி என்று எழுதிக் காட்டலாம். இப்படி மட்டும் கூறினால் இதில் நான் உங்களிடம் சொன்ன மற்ற விடயங்களையும் நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று என்னால் அறுதியிட முடியவில்லை. ஆகவே கொஞ்சம், நேரம் செலவு செய்து சற்று விளக்கமாகச் சொன்னேன்.
கடின வேலைக்கு ஒரு சொல்லை அமைக்கும்போது அதற்கு உரிய வண்ணம் கொடுக்கவேண்டும். ஒரு மென்மையான உணர்வினை வரணிக்கும் ஒரு கவி, மெல்லெழுத்துக்களை உடைய சொற்களைப் போட்டு வரணிக்கவேண்டும். இதனை மெலிபு வண்ணம் என்றார் தொல்காப்பியனார்.

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்.


என்பது வள்ளுவன் குறள். இதில் லனநீ முதலியன பயின்று வருமாறு பாடப்பெற்றுள்ளது. இவை மெல்லெழுத்துக்கள். லலொலெ வருகின்றன.  இனி ணிமொழிவாயி இடையின எழுத்துக்கள் வருகின்றன.  தாம் எடுத்துக்கொண்ட கருத்தை விளக்கியமை மட்டுமின்றி அதற்கேற்ற வண்ணமும் பயிலும்படி தெய்வப்புலமை நாயனார் அமைத்துள்ளார்.  நயமானவற்றை எடுத்துச் சொல்வோரை நாம் “நாயன்” என்போம். நய + அன் = நாயன்.  முதனிலை நீண்டு அன் விகுதி பெற்ற பெயர்.

சொற்கள் மொழியில் உருவான போதும் கடின வேலையைக் குறிக்கும்போது வல்லெழுத்துக்களைப் போட்டு “வலிபு” வண்ணம் பயிலும்படியாகச் சொல் அமைந்துள்ளது.

இனிக் கறி, கொறி என்பதையும் விளக்கவேண்டும். இப்போது நேரமில்லை. இன்னொரு சந்திப்பின்போது அதை விளக்குவோம்.  அப்போதுதான் தமிழ்மொழியின் இனிமை நன்கு புலப்படும்.

 .





அடுத்து :  நாதன் நாமகள்.

கருத்துகள் இல்லை: