ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

யாப்பு: சலிப்பிலா ஒலிமுறை அல்லது சந்தம்.



அரசியலில் பெண்ணொருத்தி ஆழ்ந்து வெற்றி

அடைந்திடிலோ அதைப்பொறுத்துக் கொள்:ளார் பல்லோர்;

மருவறவே நின்றாலும் மாசே கண்டு

மறுபடியும் எழும்பாமல் வீழ்த்தும் நோக்கில்

துருவுறவே  தோன்றியன செய்த ழிப்பார்

துயரினொடு ஓடவலால் யாது  கூடும்?

தெருவினிலே திரண்டவர்கள் முழங்கினாலும்

தெருளுறுவார் மேலில்லை தோற்றார் மக்கள்.

இது முன் ஓர் இடுகையில் வந்த கவிதை.

இதை எழுதும்போது பின்பற்றிய சீர்முறையை இப்போது பகிர்ந்துகொள்கிறோம்.

ஒவ்வொரு மடித்து எழுதப்பட்ட வரியின் தொடக்கத்திலும் கருவிளங்காய்ச் சீர் பயன்படுத்தப்படுகிறது.  வரியின் இரண்டாம் சீரில் கூவிளங்காய்,  கருவிளங்காய்,  தேமாங்காய்,  புளிமாங்காய்,  கூவிளங்காய்,   கூவிளங்காய், கருவிளங்காய், தேமாங்காய் எனக் கலந்து வந்துள்ளன.  இப்படி மாறிமாறி வரின் கவிதையில் சலிப்பு இராது.

வரியின் இறுதி இருசீர்களும் தேமாவிலேயே முடிந்தன, ஈற்றயல்வரி தவிர.  ஈற்றயலில் முழங்கினாலும் என்பதற்குப் பதில் கூவினாலும் என்று போட்டால் தேமா தேமா என்று இறுதி இருசீர்கள் ஓரன்ன வருமென்றாலும் இங்கும்  சலிப்பு ஏற்படாவண்ணம் முழங்கினாலும் என்றே  பாடப்பெற்றது.
ஒரே மாதிரியாகவே தொடுத்தால் ஒலிமாற்றமின்மையின் சலிப்பு ஏற்படுமென்று பெரும்புலவன்மார் கருதுவதை யாமும் பின்பற்றலானோம்.  





கருத்துகள் இல்லை: