புதன், 30 ஆகஸ்ட், 2017

உலக வானில் மோடி உயர்ந்தார்.



[H1] புனலிடைப் புகுந்தே அள்ளி
முகிலென எழுந்து துள்ளி
அனலினை அடக்கி வெள்ளி
ஆகுகா யப்பூ  வாக்கி
துணையிணை தேடா நின்று
தொய்விலாத் திண்மை கொண்டே
அணிபெறு பொழிவு கண்டார்
அமைதியே குறியாய்க் கொண்டார்.

மோடியைச் சென்று காண்பாய்
மோதல்கள் தவிர்க்கு மாற்றைத்
தேடியே அலைந்தி டாமல்
திரட்டி,  கை வரவே  காண்பாய்
வீடொடு நாடும் கூடி
விளங்கிடத் தலைமை ஏற்றுப்
பீடுற நின்ற பெற்றி
பேசிடப் பெற்றேம் பேறே.

டோக்லாம் எதிர்ப்பாடு நீங்கி இருநாட்டுப் படைகளும் திரும்ப்ப் பெற்றுக்கொள்ளப்பட்டமை உலக அமைதிக்கு ஒரு மகுடம் சூட்டியதாகும். இதைச் சாதித்து முடித்த தலைமை அமைச்சர் மோடியின் தகைமையைப்  பாராட்டி  மகிழ்கிறது இந்தப் பாடல். நீருண்ட முகில் வானிலிருந்து பூவாகப் பொழிகிறதென்*கிறது பாடல் தொடக்கம்.  அதுதான் அமைதிப் பூ.  அனல் என்பது போர் அனல்.
அதைப் புனலால் தணித்துப் பூவாய்ப் பொழிந்த்து.
அமைதி வேண்டின் மோடியைப் போய்ப் பார் என் கிறது இப்பாடல்.  ஆகவே அமைதிக்கு ஓர்
ஆற்றுப்படையாம் இக்க்விதை.

அரும்பொருள்:

புனல் -   நீர்
முகில் - மேகம்
அனல் -  தீயின் வெப்ப வீச்சு.
வெள்ளி -  வெண்மை
ஆகு காயப் பூ =  ஆகாயப் பூ.
காயம் -  நிலவு செங்கதிர் உடுக்கள் ஒளிவீசுமிடம்.
காய்தல் - ஒளிசெய்தல்  காய்+அம் = காயம்..
 துணை இணை -  எதிரியை முறியடிக்கத் துணையும் உடன்வருதலும் செய்வோர் (இல்லாமல்)
தவிர்க்கும் ஆறு =  நடக்காமல் செய்யும் வழி
திரட்டி கை -  இங்கு  வலிமிகாது தொகுக்கப்பட்டது.
ககர ஒற்று விடப்பட்டது.  வேண்டுழித் தொகுத்தலும் விரித்தலும் கவியின் உரிமை.
கைவரவே -  உண்மையாய்க் கிட்டவே
பீடு - பெருமை
பெற்றி = தன்மை
பெற்றேம் - பெற்றோம்.  ஏம்   ஓம் வினைமுற்று விகுதிகள்.
பேறு ஏ -  பாக்கியமே.  தேற்றேகாரம்.


;



 [H1]

கருத்துகள் இல்லை: