கட்சி அரசியல்
கட்சி அரசியல் என்பது, நாடாளுமன்றம் போலும் பேசித்
தீர்மானிக்கும் இடத்தில், ஆளுங்கட்சி. எதிர்க்கட்சி
என்று பிரிந்து நாட்டு நிறுவாகம்
செயல்படும் நிலையைக்
குறிக்கிறது.
மன்னர்கள் காலத்தில்
இத்தகைய கட்சி அரசியல் தமிழ் நாட்டிலோ துணைக் கண்டத்திலோ நடைபெறவில்லை. இது இங்கிலாந்தில்
தோன்றி வளர்ந்து இப்போது பல நாடுகளிலும் பரவியுள்ளது.
அதிலும் மிகுதியான
அரசியல் கட்சிகள் இயங்கும் நாடு இந்தியாவே என்று தெரிகிறது. புள்ளிவிவரம் எடுக்கவில்லை என்றாலும் மற்ற நாடுகளில்
சற்றுக் குறைவாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
எதிர்க்கட்சிகள்
பல இருந்து அவற்றுக்கு அரசு பதில்சொல்லிக்கொண்டே இருந்தால் அரசு ஆட்சியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும்
என்ற குறைபாடும் உள்ளது.
ஆனால் மக்களாட்சி
அமைப்பில் எதிர்க்கட்சி இருக்கவேண்டும் என்பது ஆட்சிமுறை ஆகும். ஆனால் இத்தனைதாம் இருக்கவேண்டும் என்று கணக்கில்லையாகையால் (limit) , பல உண்டாகிவிடுகின்றன.
அமெரிக்காவில் உள்ளதுபோல இரண்டே இருக்கவேண்டும் என்பது அறிஞர் கருத்து ஆகும். ஒரே பொருளின்மேல் பத்து எதிர்க்கட்சிகள்
பத்து விதமான கருத்துக்களை வெளியிட்டால் மக்களாட்சி முறைப்படி இந்தப் பத்துக் கருத்துக்களையும்
மக்கள் உள்வாங்கி ஆராய்ந்து தமக்கு இவற்றுள் எது பிடித்தமானது என்று முடிவுசெய்யவேண்டும். (அல்லது குழப்பம் அடைவார்கள் )
இதற்கு மக்கள் முழுநேரமாய் அரசியல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கவேண்டும். அப்படி மக்கள்
ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்கும் உள்ள இடைவெளிக்
காலத்தில், இக்கருத்துக்கள் பற்றி மக்கள் எதுவும் செய்தற்கியலாது. நாங்காண்டுக் கொருமுறையோ
ஐந்தாண்டுக் கொருமுறையோ வாக்களிப்பதன்றி, மக்களால் எதுவுமாகாது.
எனவே மக்களுக்குப்
பிடித்தமானது எது என்று அறிந்து செயல்பட, ஆட்சியில் உள்ள கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோதான்
(யாராக இருந்தாலும் உள்ளவர்கள்தாம்) இடைக்காலத்தில் முயற்சி மேற்கொள்ளவேண்டியுள்ளது. மன்னர்காலத்திலும் ஆட்சியில் உள்ள மன்னன் எது மக்களுக்குப்
பிடித்தமானது என்று அறிந்துகொள்ள வழிகள் இருந்திருக்கலாம். அந்த வழிகள் மக்களாட்சியில் தேர்தலுக்கிடைப்பட்ட
காலத்து வழிகளாகவும் மன்னராட்சி முறையில் என்றுமுள்ள முறைகளாகவும் உள என்பது சிந்திப்பார்க்குப் புலப்படும்.
பதில்நிலையர்கள் (பிரதிநிதிகள்) முறையிலேதான் தேர்தலுக்குப்பின்
ஒரு மக்களாட்சி நாட்டில் ஆட்சி நடைபெறமுடியும். நாடாளுமன்றில் பதில்நிலையர்களே உறுப்பினராக
இருந்து கருத்துமொழிதலை நடாத்த இயலும். எல்லா மக்களும் போயிருந்து பேசினால்தான் உண்மையான
மக்களாட்சி, என்ற போதிலும், அது நடைமுறைக்கு ஏலாதது. எல்லாப் படிநிலையரும் பங்குபெறாததை
மக்களாட்சி என்பது, வேறுவழி இல்லாமல்தான். நாட்டில் இரண்டே
கட்சிகள் இருக்கவேண்டுமென்று சட்டமியற்றலாம்.
ஆனால் அது உரிமைப்பறிப்பு என்றும் மக்களாட்சிக்கு முரண் என்றும் தருக்கத்துக்கு
உள்ளாகலாம் ஆகையால், இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது.
தலைப்புள் ஏன் இத்தனை கட்சிகள்?
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக