வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தத்து என்ற சொல் அமைந்தது எங்ஙனம்?



இப்போது தத்து என்ற சொல்லைப் பற்றிச் சிந்தித்து அறிவோம்.

 பிறர் பிள்ளை ஒன்றினைத் தன் பிள்ளையாக்கிக் கொண்டு வளர்த்தலையே தத்து என்று சொல்லுவர்.  இப்போது ஆங்கில மொழி மிகப் பரவி விட்டதால் “அடோப்ட்” என்ற சொல்லையே கேட்க முடிகிறது.  ஆங்கிலம் படித்திராவர்களும் அம்மொழிச் சொற்களை நன்கு  பயன்படுத்துகின்றனர்.
தத்து என்பது இரண்டு சிறு துண்டுகளை உடையது.   தன்,  து என்பவை அவை.

தன் என்ற சொல்லில் இரண்டே எழுத்துக்கள் உள்ளனவாகையால்,  தன் என்பது த-  என்று குறையும்போது,  அதை கடைக்குறை என்று இலக்கணத்தில் சொல்வர்.  மேல் என்ற சொல் மே என்று குறைந்து, பின் கறி என்ற சொல்லுடன் இணையும்போது, மேங்கறி என்று வழங்குவதுபோல்,  தன் என்ற சொல், " த " என்று குறைந்து, பின்  "து " என்பதனுடன் இணைகிறது.

து என்பது இப்போது ஒரு விகுதியாகவே பயன்படுகிறது.  விழுது என்ற சொல்லில் அது வருகிறது.  இப்படி இவ்விகுதி வருஞ்சொற்கள் பல.  மேலும் அஃறிணை விகுதியாகவும் வரும்.

உடையது என்பதையும் “து”  குறிக்கும். 

எனவே “த+ து”  என்ற சொல் “தன்னுடையது” என்று பொருள்படும்.
தத்து எடுப்பது எனின் தன்னுடையதாக்கி எடுத்துக்கொள்வது என்பதாகும்.   இனி “எடுப்பு”    “வளர்ப்பு” என்ற வழக்குகளும் உள்ளன என்பது நீங்கள் அறிவீர்கள்.

பிற சார்பு இல்லாமல் தன் சொந்த வலிமையால்  நிற்கும் ஒரு கருத்து “தத்துவம்” எனப்பட்டது என்பதை நீங்கள் இதிலிருந்து சிந்தித்தறியலாம். இங்கு  த+து+அம் என்பன (3 துண்டுகள்)  புனையப்பட்டுள்ளன.  து, அம் விகுதிகள்.
தத்துவம் என்பதில்  வ் வருவது சொல்லிணைப்பின் பொருட்டு. இதைத்தான்
வகர உடம்படு மெய் என்று இலக்கணம் சொல்கிறது.

தத்துவம் என்பது மேற்கண்டவாறே வரையறை செய்யப்பட்டு உணர்ந்து
கொள்ளற்குரித்தான சொல்.

இது 05072020 மெய்ப்பு செய்யப்பட்டது.




கருத்துகள் இல்லை: