வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

பகலவன் வணக்கம்

பகலவன் வணக்கம்.

பகலவனின் வெப்பமிங்கு மிகுந்து விட்டால்
பையிலுள்ள எழுதுகோலும் மையி ழக்கும்!
தகத்தவென் றேகிழக்கில் உதிக்கும்காலை
தன்னிழப்பை மறந்துமனம் அதைவணங்கும்.

பகலவன்இல் லா உலகில் பசுமை இல்லை;
பகலவன் இல் லா விடிலோ முதுமை இல்லை;
பகலவனில் லாவிடிலே வளர்ச்சி இல்லை;
பகலவனில் லாவிடிலே தளர்ச்சி இல்லை;
பகலவனால் உண்டெலாமே நன்மை தீமை;
பகல் அவனே இகல் அவனே; நட்புமாமே.

ஒரு பந்துமுள் ((ball-point pen )எழுதுகோல் காய்ந்துவிட்டது.
இதுபோன்றவை காய்ந்துவிடுதற்குக் காரணம்
பகலவனே என்றெண்ணியகாலை மேற்கண்ட
வரிகள் பிறந்தன. பாடி மகிழுங்கள்.

சொற்பொருள்:

இகல் : பகை.

பெரும்பாலும் பகலவனை அவன் என்று சுட்டுவது   பெரும்பான்மை.
இங்கு அதை என்று சுட்டப்பட்டுள்ளது. சூரியதேவன் என்று உயர்திணையாகக் கொள்ளப்படினும்,  (மக்கள், தேவன் உயர்திணை)  அஃறிணையாக வரும்வழக்கும் உளது.    பொழுது புலர்ந்தது என்பதும்
காண்க. பகலவன் என்பதற்கு அன் விகுதி உண்டெனலாம்.  எனினும்
அதை என்றே குறிப்பிட்டுள்ளேம். சோதிடர்கள்   கிரகநாதர்களைப் பற்றி விவரிக்கையில்  அது  இது என்று ஒவ்வொன்றையும் குறிப்பிடுதலும்
கேட்டிருக்கலாம்.


கருத்துகள் இல்லை: