திங்கள், 23 அக்டோபர், 2017

ஜாதி - சாதி சொல் அமைப்பு.



சாதிகள் என்பன பெrரிதும் தொழிலடிப்படையில் எழுந்தவை. இந்தச்  சாதிகள் அமைந்த காலத்தில் ஒரு சாதியின் முன்னோர்  எத்தொழிலில் ஈடுபட்டிருந்தனரோ  அத்தொழிலில் அச்சாதியின் இற்றை வழித்தோன்றல்கள் பணியாற்றவில்லை. வண்ணான் என்ற சாதித்தொழிலர் இன்று எழுத்தராகப் பணிபுரிகிறார். அவரை இன்றும் வண்ணான் என்று குறிப்பிடுவதில் ஏதும் பொருளில்லை என்றாலும், வழக்கமாகக் கடைப்பிடித்து வந்த குறிப்பீடுகள் தொடர்கின்றன. பல தலைமுறைக்குமுன் அவரின் முன்னோர் துணிதுவைக்கும் தொழில் செய்தனர் என்பதைத் தெரிந்துகொள்ளும் நமக்கும் ஏதும் அதனால் நன்மை இல்லை. துணிகளை அவரிடம் அனுப்பமுடியாதல்லவா?

சாதி என்பது  “சாதி”  என்று தமிழிலும் ஜாதி என்று வேறு இந்திய மொழிகளும் வரும் சொல் ஆகும். ஜாதி  என்பதில் “ஜா” என்பது பிறப்பு என்று பொருள்கொள்ளப்படும் சொல்.  பத்ம ஜா என்றால் தாமரையில் பிற(ந்தவள்)  என்பது.  ஜா என்று பெண்பெயர்களில் வருவது பிறப்பைக் குறிக்கும். ஜலஜா என்றால் ஜலத்தில் (தண்ணீரில்) பிறந்தவள். ஒழுக்கம் குறிக்கும் சீலம் என்ற சொல்  ஷீல என்று வரும். இதில் ஜா என்பதைச் சேர்த்தால் ஷைல+ ஜா  என்று மாறிவிடும். ஷீ > ஷை புணர்ச்சித் திரிபு.

நீரில் பதிந்து நிற்பது தாமரை.   பதி > பத்ம என்று சொல் (பதிம  > பத்ம  )  புனைவுற்றது.  கால்களும் குண்டியும் தரையில் பதியுமாறு அமர்வது பத்ம ஆசனம்.   பதி> பத்ம.  பதிதல் என்பது தமிழ் வினைச்சொல். எனவே இப்புனைவுகள் தமிழ் அடிப்படையில் எழுந்தவை. இது நமக்குப் பெருமையாகும்.

சாதி என்பது பழைய தமிழ்ச்சொல். இது ஜா என்பதிலிருந்து வருவதாகச் சொல்லப்பட்டாலும், சாதிகள் பிறப்பினால் உண்டாகவில்லை. ஆதியில் தொழிலால்தான் உண்டாயின.  ஆகவே பிறப்புக் குறிக்கும் ஜாவிலிருந்து  அமைவதாகக் கூறுவது புரளி. ஒரே தொழிலர் அகமணமுடையாராய் மாறிக்கொண்டது பிற்கால வழக்கம். ஆகவே ஏற்கனவே இருந்த ஒரு சொல்லை எடுத்து அதற்கு மறுமெருகு பூசிக் காட்டியுள்ளனர். இது தவறு ஆகும்.


பல நூற்றாண்டுகட்கு முன் (தொல்காப்பியக் காலத்தில்) தோன்றிய ஒரு சொல்லை எடுத்து, சாகாரத்தில் (“சா”) இருந்ததை “ஜா” என்று மாற்றி அல்லது மாறி விட்டதை அறிந்தோ அறியாமலோ ஆய்வு செய்யாமல் மேற்கொண்டு,  பிறப்பினடிப்படையில் சாதிகள் தோன்றினவாகக் காட்டவேண்டி,  “புளுகுச்" சொல்லாய்வு நிகழ்த்தியே ஜா= பிறப்பு என்று கூறியுள்ளனர்.  தொழிலடிப்படைச் சொல்லை பிற்காலக் கொள்கை அடிப்படையில் பிறப்புச் சார்பினதாகக் காட்டுவது ஒரு காலவழு ஆகும்.  (Anachronism).

சமஸ்கிருதம் பேச்சில் வழங்கவில்லை ஆதலால், ஒரு சொல்லை எடுத்து அதற்குப் பிறப்பே பொருள் என்று சொல்வது எளிதாகும்.  பேச்ச்சுவழக்கை ஒத்துப்பார்க்க வழியில்லை.  ஆகையால் எப்படியும் சொல்ல வழியுண்டு.  நால்வருணங்களும் தொழில் வருணங்களே. பிறக்கிற குழந்தை பின்புதான் தொழில் கற்றுக்கொள்ளவேண்டும். இப்போதும் சரி; அப்போதும் சரி.

சார்பு என்பது பக்கம் குறிக்கும் தமிழ்ச்சொல்.  ஒருவன் எதைச் சார்ந்தவன் என்பது கேள்வி.  அவன் துணிதோய்க்கும் கூட்டத்தைச் சார்ந்தவன்.  ஆகவே சார்தல் என்பது வினைச்சொல்.  சார் > சார்+தி >  சார்தி> சாதி ஆயிற்று.  ரகர ஒற்று மறைந்த சொல். நேர்மித்தல் என்பது நேமித்தல் என்று திரிந்தது போலுமே இதுவாகும்.

சார்தி (சாதி) என்பது தொல்காப்பியத்திலும் “ நீர்வாழ் சாதி” என்று மீன்முதலியவற்றைக் குறிக்கிறது.  சாதிகளின் அமைப்புக்காலத்தில்  அவை நான்குதாம் அல்லவோ?  அவை வருணங்கள் எனப்பட்டதும்,  சாதி (சொல்லை)  என்பதைப் பின்னர் மேற்கொண்டனர் என்பதைத் தெளிவிக்கிறது.  பலதொழிலர்களை நான்கில் அடக்கிவிடச் செய்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றாலும்  அப்பகுப்பும் தொடர்ந்தது என்றே அறியவேண்டும். 

தொழில்கள் முன் தோன்றின; அவைகளைச் சாதிகளாக்கும் முயற்சி பின் தோன்றியது. ஒரே கூட்டத்தினர் ஒரே இடத்தில் வாழ்ந்து தொழிலை மேற்கொண்டது சாதி அமைப்புக்கு வசதி ஆகிவிட்டது. மணப்பெண் தேடுவோர் அதிக தூரம் செல்வதில்லை.  அருகிலே பார்த்து முடித்துக்கொண்டனர்.  செய்தொழிலுக்கு உதவுகிறவளாக இருக்கவேண்டுமென்பதால், கூட்டத்துக்குள் பார்ப்பதே வசதி. அதுவும் உறவுக்குள்ளே பெண் எடுத்தனர். உயர்வு தாழ்வுகள் பின் உட்செலுத்தப்பட்டன. 

சாதிகளால் அரசருக்கு நன்மை. மக்கள் பிரிந்திருந்தால்,  கிளர்ச்சிகள் மிகவும் குறைந்துவிடும்.  உள் நாட்டுக் கலகங்கள் தோன்றமாட்டா. அரசும் யாருக்கும் கல்வியறிவிக்கவோ வேலைதேடிக்கொடுக்கவோ தேவை இல்லை.  எந்த வயதிலும் வேலைக்கு ஈடுபடலாம் ஆகையால் எந்தத் தொல்லையும் அரசுக்கு இல்லை.  ஆட்சியமைதி நிலவியது. அந்தந்தத் தொழிலரிடைத் தோன்றியபெண்கள் அத்தொழில் உடையாரின் இளைஞர்களுக்கே வாழ்க்கைப்பட்டனர்.  இவ்வாழ்க்கைமுறையை அரசர்கள் பாதுகாத்தனர்.  குயவன்மகன் பூசாரியாக ஆசைப்படவில்லை.

இனியொருநாள் தொடர்வோம். 

-----------------------------------


குறிப்பு:  சார்தி என்பதிலிருந்து திரிந்த சாதி ஒரு சொல்லாகவும்  ஜா என்பதிலிருந்து அமைந்த ஜாதி என்பது வேறொரு சொல்லாகவும் ஆனால் இரண்டும் ஒலியொற்றுமை உடையனவாகவும் ஓரளவு பொருளொற்றுமை உடையனவாகவும் முடிபு கொள்வதாயின்,  இங்குக் கூறியவை ஏற்புடையவாகாமை காணலாம்.  தமிழ்ச் சொல்லான சாதி முற்காலத்தில் நீர்வாழ்வன என்னும் பகுதியைக் குறித்தது. மனிதரைக் குறிக்கப் பயன்பட்டிலது.


கருத்துகள் இல்லை: