இறைகாட்டும் வாழ்நெறியில் நின்று செய்யும்
முறையெல்லாம் மாறாமல் முன்னே செல்லக்
குறையின்றிக் கூறிவரும் கொற்றம் போற்றும்
மறைசார்ந்த மாண்புமொழிக் குரித்தே நன்றி.

கண்காற்றில் தூசிவிழக் கசிந்த போதும்
கண்போற்றி அஃதகற்றிச் செல்லுமாப் போல்
முன்னேற்றப் பாதைபோம் அயர்ச்சி தாண்டி
பின்மாற்றம் ஒப்பாத முயற்சி வேண்டும்.

படியேறிப் படியேறிப் பார்த்த வீட்டில்
குடியேறி வாழகையும் கொடுப்பர் காணீர்!
அடிதொற்றிப் பேருந்தில் படியேறிப் பின்
மடிதொற்றி மாதணைக்கும் குழந்தை யாமே.

தன்வீட்டு வாழ்கூலி தந்து நட்பால்
பின்வீட்டில் முன்வீட்டில் இணக்கம் கண்டு
தன்பாட்டை யார்பிறர்க்கும் இடரே இன்றித்
தான்பாடி வீண்பாடு தவிர்த்து வாழ்வோம்.

சாதணப்பே நேர்ந்தாலும் சார்ந்த வாழ்வே
மாதணைப்பாள் மாதவத்தோன் பாங்கிலுள்ளாள்
நோதணத்தல் அவள்செயலே யாதும் வந்த
போதணைப்பாள் துன்பமெலாம் போம்போம் என்போம்.


நாயன்மார் கண்ணப்பன் நந்தன் பாணன்
நாட்டியதோர் நன்னெறியில் நலிவு நண்ணா,
சேயிருவர்க் காயானாள் சேய்மை செல்லாச்
செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.