இவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளுடையவைதாம். சொற்கள் என்ற முறையில் இருவேறு ஆகும்.
அரிமா என்பதை ஆய்வோம்.
அருகுதல் - இது குறைந்து வருதலைக் குறிக்கும் சொல். அருகு என்ற வினையில் கு என்பது வினையாக்க விகுதி. அரு என்பதே அடிச்சொல் ஆகும். அரு என்ற சொல்லிலிருந்தே அரியது ( அதிகம் இல்லாதது ) என்ற சொல்லும் வருகிறது. எனவே,
அரி - அரு+ இ > அதிகமில்லாத;
மா - விலங்கு,
என்ற பெயரைத் தமிழர்கள் இவ்விலங்குக்கு இட்டனர். பார்ப்பதற்கு அழகும் மிடுக்கும் உடைய இந்த விலங்கு, இல்லாமற் போய்விடுமோ என்ற கவலை, தமிழர்களுக்கு அன்று இருந்தது என்று இதன்மூலம் நாம் அறியலாகும்.
சிங்கம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
அடிச்சொற் பொருள்:
சிங்குதல் என்றால் குறைதல்.
சிக்குதல், சிங்குதல் என்ற இரண்டு சொற்களும் தொடர்புடையவை. ஒன்று: எதுவும் சிக்கிக் கொண்டுவிட்டால் அதன் இயக்கம் குறைந்துவிடும், இன்னொன்று : சிங்குதல் அதனுடன் தொடர்புடைய பொருளே. ஒன்று "க்" என்ற கடின ஒலியையும் மற்றது " ங் " என்ற சற்று மென்மையான ஒலியையும் உடையவாக உள்ளன.
சிக்குவதால் ஒன்றன் ஓட்டம் அல்லது இயக்கம் குன்றுகிறது. அதனால் அதன் மெலி வடிவாகிய சிங்குதல் என்பதற்கும் அப்பொருளே ஏற்படுகின்றது.
இவை ஒரே மூலத்தினவாதல் பெரும்பாலும் உண்மை. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:
பகு > பக்கு. ( பகுதி என்பது சொல்லமைப்புப் பொருள்). பக்கு> பாக்கு. (பகுதிகளாக வெட்டப்பட்ட கமுகு விதை அல்லது கொட்டை ).
பகு > பங்கு. ( இதுவும் பகுதிச் சொல்லமைப்புப் பொருளினதே ஆகும்.).
இன்னொன்று:
தகு : > தக்கு > (தக்கவைத்துக்கொள்ளுதல்).
தகு> தங்கு.
இப்போது சிங்கத்துக்கு வருவோம்:
சிங்குதல் To diminish, wane, decrease. ( இது செயப்படுபொருள் குன்றிய வினையாக வரும்.)
சிங்கங்கள் இந்தியாவில் ஒருகாலத்தில் காணப்பட்டுப் பின் அருகி அல்லது குன்றிவிட்டன என்பதை இந்தப் பெயர்கள் காட்டுகின்றன.
ஒரே கருத்தடிப்படையில் எழுந்த இந்த இரண்டும் தமிழ்ச்சொற்கள் என்பதை அவற்றின் பொருளொற்றுமை காட்டவல்லது. இரண்டு சொற்களுக்கும் தமிழிலே வினைசொற்கள் உள்ளன. தமிழ் இதனை ஏனை மொழிகட்குக் கொடைசெய்வதில் மகிழ்ச்சியே எனல்.
சிங்கம் என்ற சொல் தமிழ் என்று முடிவு செய்வதால் சமத்கிருதத்துக்குக் குறைவொன்றுமில்லை. அம்மொழியில் எண்ணிறந்த சிங்கப் பெயர்கள் கிடைக்கின்றன. சிங்கத்தோடு பல்வேறு தொடர்புகள் உடைய சொற்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவை. அதனால் யாரும் கவலை கொள்ளவேண்டாம்.
பொருளொற்றுமை என்பது ஈண்டு ஒரு கவன ஈர்ப்பாகவே முன்வைக்கப்படுகிறது.
பொருளொற்றுமைக்காகச் சிங்கம் என்பதைத் தமிழ் என்று சொல்லவில்லை. அடிச்சொற்கள், வினைச்சொற்கள் முதலிய ஆய்வின் மூலமாகவே கூறுகிறோம்.
இச்சொல் பலவாறு திரிந்து பிற மொழிகளில் வழங்குகிறது. சிம்ஹா, சிங்கா என, இன்ன பிறவும் காண்க.
சிங்குதல் - வினைச்சொல்: சிங்கு ஆசனம் - சிங்காசனம், இது திரிந்து சிம்மாசனம் ஆயிற்று. இது பலவாறு திரியும் சொல். சிங்காசனம் > சிம்காசனம்> சிம்ஹாசனம் ( இது அயல் மெலிவொலி). இது போலவே: சிங்கம்> சிம்ஹம். ககரம் அதற்கு அயலினமான ஹ என்று திரிதல்.
இனி, ஆசு, தமிழ்ச்சொல். ஆசு+ அன் + அம்.= ஆசனம். அன் இடைநிலை. அம் - அமைவு காட்டும் தொழிற்பெயர் விகுதி. அன் என்ற இடைநிலையும் விகுதியாய் வருங்கால் அமைவு காட்டும். ம் - ன், திறம்- திறன் என்பதுபோலும் திரிபு என்பது கண்டுகொள்க. இத்தகு ம்-ன் திரிபு விரிவழக்கினது ( not language specific). சீனமொழியில் கூட வரும் , எ-டு: குவான் இன் > குவான் இம். (பொட்டுடைய சீன அம்மன், வெற்றிலை வைத்துக் கும்பிடுவர்). இவ்வளவு நீங்கள் அறியப் போதுமானது.
சிங்காசனம், சிம்மாசனம் என்பவையும் இவ்வாசனங்கள் அடைதற்கு அரியவை என்பதால் ஏற்பட்ட பெயர்கள் என்ற முடிபு ஏற்புடைத்து. பின்னர் அவை சிங்கவடிவில் உருவாக்கம் பெற்றிருத்தல் தெளிவு. மொகலாயர்களின் "சிம்மாசனம்" உண்மையில் மயிலாசனம் ஆகும். சிங்கம் காட்டுக்கு அரசன் என்பது பொதுவான கருத்து.
வேடர்கள் காட்டையே அரித்தெடுத்தால்தான் ஒன்றிரண்டு சிங்கங்கள் கிட்டுதல் கூடும் என்பதே நிலைமை. அதனாலும் " அரிமா" எனல் பொருத்தமே. ஆனால் மறைமலை அடிகள் சிங்கம் உயிர்களை அரித்தெடுத்துவிட்டதால் அப்பெயர் பெற்றன என்று கருதினார். அவ்வாறாய் எண்ணினால் இதனைக் காரண இடுகுறி எனல் சாலும். வேட்டையாடி உண்டு வாழும் காட்டு விலங்குகள் பலவாதல் உணர்க. சிங்கம் என்பது இருபிறப்பி எனலாம். எனினும் அரிய விலங்கு எனல் முதற்பொருத்தம் உடைத்தென்பது தெளிவு. அரிய விலங்கென்பதில் எமக்கு ஐயமில்லை.
சிங்கு ஆசனம் . - இது இலக்கணநூற்படி வினைத்தொகை, சேர்த்தால் சிங்காசனம் ஆகும். இவ்வாறு மாணவர்க்கு உரைக்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக