திங்கள், 27 டிசம்பர், 2021

நவம் - புதுமை என்ற சொல்

 இன்று நவம் என்ற சொல்லை முன்வைத்து நம் ஆய்வினைத் தொடங்குவோம்.

புதியது எதுவும் நல்லதாகவும் ஏற்கத்தக்கதாகவும் இருக்கும். அதனால் மனமகிழ்வும் உண்டாகும்.  எனவே நல்லது என்ற ஆதிக்கருத்திலிருந்து,  புதுமை என்ற கருத்து தோன்றுவதாயிற்று.

புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு நச்சுத்திரவம்,  நல்லது என்று கூறமுடியுமா என்று நீங்கள் கேட்கலாம். புதுமையில் நல்லதும் கெட்டதும் இருக்குமாயினும், இச்சொல்லினமைப்பில் நல்லதையே புதுமை  எனக்கொண்டு, தீயதை ஒரு புதுமை என்று போற்றிக்கொள்ளவில்லை என்று தெரிகின்றது.  ஆகவே, இது ஒரு காரண இடுகுறிச்சொல்.  நாலுகால் உள்ளதெல்லாம் நாற்காலியாயினும் நாயை நாற்காலி என்ற சொல் குறிப்பதில்லை,  அதனால் அதைக் காரண இடுகுறி என்று இலக்கணம் வகைப்படுத்தும். 

நாறுதல் என்ற  சொல்லும் நல் என்பதினின்று அமைந்தது.  நாற்றத்தில் ( கெட்ட வீச்சத்தில் ) நன்மை எதுவுமில்லை ஆயினும்,  நல் என்பது பொருளிழந்து விட்டது என்பதை உணர்க. இவ்வாறு சொற்கள் அமைந்துள்ளபடியால்,  நல்லது புதுமையானதும் கெட்டதும் ஒரு புதுமையாதல் கூடுமென்பதும்  நன்மை புதுமை என்ற கருத்தை வீழ்த்திவிடாது.

இதுபோலும் சொற்களில் பொருண்மை என்பது ஓர் எல்லைக்குட்பட்டுப் பொருள் உணர்த்துமென்று அறிக. மாவை நீரில் தோய்த்துவைத்துக் கொஞ்சம் புளிக்கவும் வைத்து அப்புறம் சுடுவதுதான் தோசை:   தோய்> தோயை > தோசை ஆனது.  யகர சகரப் போலியால் அவ்வடிவடைந்த சொல்.  ஆனால் தோய்த்து வைத்தவை அனைத்துமே தோசை என்ற பெயர்க்குரியன அல்ல. ஆகவே பொருண்மை ஓர் எல்லைக்குள் நின்றுவிடுகிறது.  ஒம்னிபஸ் என்றால் எல்லார்க்கும் உரியது என்ற ஆங்கிலப் பொருண்மை உடைய சொல்.  ஜிஎஸ்டி என்ற வரி பொருள்வாங்கின எல்லாரும் கட்டவேண்டி உள்ளது  அதனால் ஜிஎஸ்டி என்பது ஒம்னிபஸ் ஆகிவிடாது.   காரண இடுகுறி என்பதைத் தமிழ் இலக்கணம் எடுத்துக்கூறி யிருந்தாலும்,  இது எல்லா மொழிகளிலும் கண்டுணரக் கூடிய ஒரு இலக்கணச் சித்தாந்தமே ஆகும்.

நல் என்ற சொல்லினின்று உருவான ஒரு சொல்,  புதுமை என்பதைக் குறிப்பதாயின் அது தொடர்புள்ள இன்னொரு பொருளில் சென்றுவிட்டது.  இத்தகு பொருள் மாற்றத்தினால் அது திரிசொல் ஆகுமென்று   திரிசொல்லுக்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது.

நல் >  நல்வு > நல்வம் > நவம் என்றாகும்.  இவ்வாறன்றி, இதை,  நல் > ந ( கடைக்குறை),  ந+ அம் =  ந+ வ்+ அம் >  நவம் என்று இலக்கணம் கூறமுடியும்.  இங்கு வந்துற்ற வகர ஒற்று ( மெய்),  விகுதியையும் சொல்லின் பகுதி அல்லது முதனிலையையும் உடம்படுத்துகிறது அல்லது ஒட்டுவிக்கின்றது.  அதனால் அதற்கு உடம்படு மெய் என்று பெயர்.

நல் என்பது கடைக்குறைந்து ந என்று நின்று அதன்பின் விகுதி, உடம்படுமெய் ஏற்றதுபோலவே, பிற சொற்களும் அமைந்துள்ளன.  நீதி என்ற சொல்லும் அத்தகையது.  வாதத்தில். வீழ்ச்சி பெற்றுவிடாமல் இருப்பதே நீதி.  மேலும் சிந்திப்பாரின் எண்ணத்திலும் அது சரியாக நிற்பதாக உணரப்படுதல் வேண்டும். எனவே இச்சொல் நில் என்ற வினையினின்று அமைந்தது.   நில் என்பது கடைக்குறைந்து நி ஆனது.  பின் விகுதி பெற்று நி + தி > ( முதலெழுத்து நீண்டு)  : நீதி ஆனது.  இங்கு தி என்பது விகுதி.  அஃதன்றியும், நீதி சொல்வோன்,   முன்வந்து நிற்கும் இருகட்சியினர்க்கும் இடையில் முரண்பாடு உற்று ஒரு பக்கமும் சாயாமல் இருக்கவேண்டும்.  ஆகவே முரண்படுவோரிடமிருந்து நீங்கி இருக்கவேண்டும்.  அதனாலும் , நீங்குதற் கருத்தில்,  நீ > நீங்கு ( கு என்பது வினையாக்க விகுதி);   நீ  + தி  > நீதி எனினும் அது. ஆதலின் இச்சொல் இருபிறப்பி ஆகும்.  இங்கு நாம் காட்ட விழைந்தது, நில் என்பது கடைக்குறையாகி விகுதி ஏற்றமையே ஆகும்.

நீதி என்ற சொல்லைப் பிற அறிஞரும் உரைத்துள்ளனர்.

நவம் என்பது பலமொழிகளிலும் சென்றேறி வழங்கும் சொல். "நியோ" என்ற ஆங்கில முன்னொட்டும்  ( prefix )  இதனுடன் தொடர்பு கொண்டது. (  For example, the word "neo-colonialism" )

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


 

கருத்துகள் இல்லை: