{ நேற்றுக் காலை நாலு மணிக்கு வந்த , நான் விளக்கு இட்டவுடன் எனக்குப் பாடும் அந்தப் பறவை, நான் காணாத பாடகி. இது தினமும் அந்த நேரத்துக்கு வந்து என்னை மகிழ வைக்கிறது }
மரக்கிளையில், இலைகளுக்குள் இருக்கை கொண்டு
மறைந்திருந்து மணிநான்கில் உரக்கக் கூவி,
கறங்கிடவும் உறங்குமகார் எழும்பு மாறும்
கானமிதோ பாடுகின்றாய் கானப் புள்ளே!
நிறங்காணேன் நினைக்காணேன் செவிக்குள் வந்து
நேருறுத்தும் ஒலிமட்டும் நீண்ட தன்றோ?
அறங்காணாய் நான்மட்டும் அயில்வ தாலோ!
அடைந்ததொரு காட்சிதனைச் சொல்வாய் நீயே.
விடியலுக்கு முன்வந்தாய், எம்மில் முன்னே,
விளக்கெரிய க் கண்டவுடன் அறிக்கை செய்தாய்,
நடமிடுதல் காண்கின்றாய் காணேன் யானே
நளின இசை ப் பாடகியே குளிரில் லாத
இடமெனதே வந்துவிடே உணவைத் தேடி
இன்னொருவீட் டின்முன்னே இசைக்க வேண்டா
கடமையெனக் காத்திடுவேன் கவலை கூடாக்
கனிந்தொருவா அன்புடனே தருவேன் முத்தம்.
பொருள்
இருக்கை கொண்டு - அமர்ந்திருந்து
கறங்குதல் - சுழலுதல். ( உறக்கம் தெளியா நிலை)
மகார் - பிள்ளைகள்
கானம்: பாடல், கானப் புள்ளே - கானகத்திலிருந்து வந்த பறவையே
நேர் உறுத்தும் - நேராக வந்துசேரும் உறுதல் தன்வினை, உறுத்தல் பிறவினை.
கனிந்த - ஏற்றின்புறத் தக்க
கவலை கூடா - நான் உன்னை வைத்திருப்பேனோ மாட்டேனோ என்ற மாறாட்டம் இல்லாத
அறம் காணாய் - உனக்கு உணவு தராமையினால் முறையில்லை என்று
நினைத்தாய்.
நிறங்காணேண் - உன் நிறம் தெரியவில்லை
நினை - உன்னை
அயில்தல் - உண்ணுதல்
எம்மில் - என் வீடு
அறிக்கை - தெரிவித்தல் ( நீ இருப்பதை)
நளின - அழகிய
இசைக்க - பாட
கனிந்து ஒருவா - கனிந்து விலகாத
இந்த வரி இன்னும் இனிய பொருள் தருவதால் மாற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக