கடவுளைத் தொழுபவனுக்குத் துணையாவது, உண்மையில் அவனது நாவே ஆகும். நாவைக் கொண்டுதான் அவன் வணங்கும் இறைவனை அவன் அழைக்கிறான் அல்லது அக்கடவுளை அவன் பாடுகிறான். இறைத்தொழுகை வரலாற்றில் இறைவனைக் குறிக்க அவன் முதலில் நாவையே பயன்படுத்தியதால், கடவுளை அவன்:
நா+ தன் = நாதன்
என்று அறிந்தான். நா+ த் + அன் = நாதன் எனினுமாம். இங்கு த் என்பது இடைநிலையாகக் கொள்ளப்படும். இறைவனைக் குறித்த பெயர்களும் அவன் நாவினின்று வெளிவந்தவைதாம். நாவில் அமைந்தவை ஆகையினால்:
நாமம் ( நா + (அ)ம் + அம் ) ஆயிற்று.
அதாவது, நாவில் அமைந்தது. இங்கு அம் என்ற இடைநிலையில் அகரம் கெட்டது.
அவனது நினைப்பில் உருவான எதுவும், நாவினால்தான் வெளிப்பட்டது. அதனால் அது நாவகம் ஆயிற்று. இதுவே பின்னர் ஞாபகம் ஆயிற்று. ஞாபகம் இல்லை என்றால் அது நாவில் வரவில்லை என்பதே பொருளானாலும், அந்த ஆற்றல் வேறு எங்கோ இருக்கிறது என்று எண்ணி, தலைக்குள் இருப்பதாக உணர்வு கொண்டான். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்பதைத் தற்காலத்தில் அறிவியலாளரே கூறுவாராயினர்.
வேதம் சொல்பவனுக்குச் சொல்லே துணையாதலால், திருமுறை "சொல்துணை வேதியன்" என்றது. அதாவது நாவுதான் துணை. நாவினை நன்றாகப் பயன்படுத்திப் புகழ் எய்தியவர் " நாவுக்கு அரசர்" ஆனார். ( திருநாவுக்கரசர்).
கலைமகள் நாவில் இருந்தால், கலைகளை நன்கு அறிந்து புலமை பெற இயலும் . அதனால் கலைமகளுக்கு நாமகள் என்ற பெயரும் உண்டாயிற்று. காளிதாசனுக்கும் காளி நாவில் எழுதியதாகச் சொல்வதுண்டு. சிறந்த புலவரையும் செந்நாப்புலவர் என்றனர். நாவே முன்மை உடையதாதலினால், நாவலர் என்ற பெயரும் அமைந்தது.
செந்தமிழும் நாப்பழக்கம் என்பர்.
மனிதனாய்ப் பிறந்தால், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, உறவினர் மற்றும் நண்பர் என்று சொல்லிக்கொள்ள யாராவது வேண்டும். நாவினால் சொல்லித் தெரியப்படுத்தும் இதுபோலும் உறவுகளை, "நாதி" என்றனர். இச்சொல்லில் நா என்பது பகுதி; தி என்பது விகுதி.
உண்மையில் தம்மிடம் இல்லாத ஒன்றை நாவினால் மட்டும் சொல்லித் திரிவதுண்டு. அது நாச்சொத்தி ஆயிற்று. ( நா+ சொல் +தி அல்லது நாச் சொத்து இ ). அதுவே திரிந்து நா(ஸ்) தி ஆயிற்று என்பதும் காண்க. இது உயர்த்தி > ஒஸ்தி , மற்றும் குத்தி > குஸ்தி போலும் திரிபு.
இங்குத் துணை என்று குறித்தது கருவித் துணையை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக