வெள்ளி, 17 டிசம்பர், 2021

தங்கு , சங்கம், தமிழ்வரைச் சிறப்புற்ற சொற்கள்.

 தங்கு என்ற வினைச்சொல் எவ்வாறு அமைந்தது  என்று அறிந்துகொள்வது ஓர் இன்றியமையாத முயற்சி என்று சொல்லுதல் சரியானதே ஆகும்.  இச்சொல்லில் கு என்பது சேர்ந்திருக்கும் இடத்தைக் குறிக்கும் உள்ளுறைவு .  இதற்கும்  உருபு ஏற்ற "சென்னைக்கு" என்ற சொல்லுக்கும் "கு " என்பதன் பொருண்மையில் வேறுபாடு  பெரிதாக ஒன்றுமில்லை.  இவ்வாறு சிந்திக்கவே,  த என்ற ஓரெழுத்து மொழியே மீதமாய் நிற்கின்றது.  இதனோடு, தான், தன், தம், தாம் என்பவற்றை ஒரு தொடர்புள்ளவை என்று முடிபு கொள்ள, பெரிய இன்னல் எதுவும் வந்து இடையுற்றுத் தொல்லைதரவில்லை. செல்வழி எளிதாகவே உள்ளது.


த என்ற ஓரெழுத்து உள்ளுறைவு,  அசைவின்மை காட்டுகிறது.  ஒரு மனிதன் ஓரிடத்தில் தங்குகிறான் என்றால் அவன் "சில" (சிறிது)  நேரமாவது இயங்குவதை நிறுத்திக்கொள்கிறான் என்று,  பொருள் தெளிவாகவே உள்ளது.  தங்கு என்ற சொல் சங்கு என்று திரியுமென்பதை நாம் முன்பே அறிந்துள்ளதால் ( பழைய இடுகைகளைக் காண்க),  ஒரு கூட்டுக்குள் தங்கி உயிர்வாழும் உயிரியை நாம் அப்பெயரால் அழைத்தமையில் பொருத்தத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.  அடுத்து, சங்கு என்ற  சொல் அம் விகுதி பெற்றுச் சங்கம் என்றாகி,  தங்கி உணவு குடிநீர் முதலிய கொண்டு,  அரசரால் விருந்தோம்பலும் பெற்றுக்கொண்டவர்களாய்,  உரிய நேரத்தில் அவ்வரசரின் முன் தோன்றித் தம் பாடலைச் சமர்ப்பித்துப் பரிசில் பெறும் புலவர்தம் கூட்டத்தினைக் குறித்தது மிகமிகப் பொருத்தமானதே என்பதும் நமக்கு ஒருசிறிதும் வியப்பினை விளைவிக்கவில்லை.  இச் சங்கமென்னும் சொற்கும் அசைவின்மைக்கும் தங்குதற்கும் யாது தொடர்பெனின்,  சங்கப் புலவர் எனப்பட்டோரும் சில நாள் அல்லது சிலமணி நேரமாவது ஆங்குத் தங்கியே விருந்துண்டு பரிசில் பெற்று மகிழ்ந்து  தம்மூர்கட்கு யாத்திரை பெற்றனர்,  ஆதலின் தொடர்பு மிக்குண்மை வெள்ளிடைமலை   ஆகின்றது.

சங்கமென்பது அவ்வாறாயின்,  சனி என்ற கோளும் அல்லது கிரகமும், கோள் எனப்பட்டவை யாவற்றினும் பெரிதும் தனிமதிப்பீடு பெற்று,  அட்டமத்துச் சனி, ஏழரைச் சனி என்றெல்லாம் தன் இயற்றுவினைகளால் உயர்த்திக் கூறப்பட்டு,  ஏழரையாண்டுகள் மானிடர்க்கு தொடர்தொல்லைகளையும் தந்து ஓர் இணையற்ற உலவுதன்மை பெற்றமையால்,  தனிச்சிறப்பினால் ஈசுவரப் பட்டமும் எய்தி,  தனி என்ற சொல் சனி என்று பெயராய் வந்து தன்னை மேடை ஏற்றிக்கொண்டு,  ஞாலத்துப் புகழ் கொண்டமையுடன் அப்பெயராலே நமக்குச் சொல்லின்பமும் பொருளின்பமும் அளித்து நிலவுகிறதென்பதை  நாம் எண்ணிப்பார்த்து இறும்பூதெய்தவே செய்கின்றோம்.

இனி, தான் என்பதும் ஒருவகைத் தங்குதற் கருத்தேயாகி, தனிச்சிறப்புக் கருத்தும் வெளிப்படுத்தி,   ஆப்கானிஸ்தான், தெர்க்மனிஸ்தான் என்றே பல பெயர்களுடன் இணைந்து தோன்றி,  பல மொழிகட்கும் உதவி இருத்தலும் நாம் அறிந்து இன்புறத்தக்கதே  ஆகும்.

இன்னும் பல விரித்தல் கூடுமெனினும்,  த என்ற ஓரெழுத்து மிக்க முதன்மை வாய்ந்த எழுத்து என்பதில் ஐயமில்லை.  நிற்றலுணர்த்தும் தகரத் தொடக்கமாகவே,  தமிழ் என்ற மொழிப்பெயரும் வருதலும் நாம் மகிழற் குரியதே  ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.  

கருத்துகள் இல்லை: