ஞாயிறு, 21 ஜனவரி, 2018

உருத்திராட்சத்துக்கு இன்னொரு பெயர்



உருத்திராட்சத்துக்கு மற்றொரு பெயரை இன்று அறிந்துகொள்வோம். பெயரை அறிதலுடன்,  அப்பெயரின் அமைப்பையும் அறிதற்கு இன்றே வாய்ப்பும் ஆகும்.

உருத்திராட்சம் என்பது  உருப்போடும் போது அதன் எண்ணிக்கையை அறிவதற்கு ஒரு மாலையாகக் கோத்த  சிறிய உருளைகளை விரல்களால் உருட்டி அல்லது நெருடி ( " நிரடி"  ) எத்தனை சொல்லிவிட்டோம் என்று அறிந்துகொள்வதற்கான கருவியாகும்.  இதைச் சுருக்கியும் இன்னும் நன்றாகவும் வரையறவு செய்யலாம் எனினும் இது விளக்கத்தின்பொருட்டு கூறப்படுவதாதலின் இத்துடன் அமைவோம்.

இங்கு முன் நிற்கும் சொல் உரு என்பதுதான்.  ஆனால் உரு என்பது உருத்தல் என்ற வினைச்சொல்லினின்று மேல்வருவதாதலின், தோன்றுதல் என்று பொருள்கொள்ளலாம்.  ஆனால் உருப்போடுதல் என்ற உலக வழக்குச் சொற்றொடரில்  இது எப்படிப் பொருந்துகிறதென்று சிந்திக்கலாம்.

மண்ணாலோ மாவினாலோ அல்லது உகந்த பிறவாலோ ஓர் உருவை அமைத்து அதற்கு மந்திரங்கள் சொல்லிப்  பூவையோ ஏற்ற பிற பொருளையோ அதன்முன் சொரிந்து ஒரு குறிப்பிட்ட தொகையில் முடிப்பது “ உருப்போடுதல்” என்று கூறலாம்.  ஆனால் இதை உருத்திராட்சம் இன்றியே செய்யக்கூடுமே.

சொல்லும்போது சிற்றுருளைகளைத் திரட்டுதல் என்ற செயலுக்கு உரு என்பதை உருளை என்ற சொல்லின் கடைக்குறையாகக் கொள்வதே சரியாகும்.

அதாவது உருளைத் திரட்சி என்பதிலிருந்து அமைந்ததே உருத்திராட்சம்
திரள் > திரள்+சை > திரட்சை > திரட்சம் > திராட்சம்.
சை :  விகுதி;  அம் :  விகுதி.

(திரள் > திரட்சை > திராட்சை  என்னும் கொடிமுந்திரிப் பழத்தின் பெயரும்  ஈண்டு கவனிக்கத்தக்கது ).
திரளாகக் காய்ப்பது திராட்சை.

ஐ என்ற ஆதி விகுதி/ எழுத்து,  பல்வேறு மெய்களிற் சென்றேறி,  கை, சை, ஞை, டை, தை, பை, மை, யை, ரை,  லை, வை, ழை, றை, 0னை என விகுதியாகவும் சொல்லிறுதியாகவும் வருமென்பதை அறிக.

ஐயீற்றை அம் எதிர்கொள்ளின், ஐ வீழும். மெய் மட்டும் அம்முடன் புணரும்.
வீழாமலும் சொல்லமையும்.  எ-டு:  இணையம்.   இது நிற்க:

உருத்திராட்சத்துக்கு மற்றொரு பெயராவது:  தாவடம் என்பது.

வடம் எனின் ஈண்டு கயிறு என்றோ வட்டம் என்றோ பொருள்தரும். இதன் அடிச்சொல் வள்.  வள் > வடு > வடம்;  வட்டமும் ஆம்.  வடம் என்பது வட்டம் என்பதன் இடைக்குறையாய் வட்டமென்று பொருள்தரும் எனினுமது.

கழுத்தின் பின்பகுதியில் இருந்து நெஞ்சு வரை தாழ்ந்து தொங்குதலை உடைமையால்,  உருத்திராட்சம் தாவடம் ஆயிற்று. இங்கு ழகரம் கெட்டது.

பிறசொற்கள்: ஒப்பிடுக:-

தாழ்வணி >  தாவணி > தாமணி.
அல்லது தாழ் > தா > தா+அணி = தாவணி எனினுமாம்.

தாழ் வரம் >  தாவரம் ( தாழ முளைத்து வளர்வன ஆகிய செடி கொடிகள் .)

தாழ்வாரம் > தாவாரம் ( பேச்சுத்திரிபு)

உருத்திராட்சம் = தாவடம். ஆயின்; வெவ்வேறு அமைப்பின ஆகும்.

ழகர ஒற்றுக்கள் பெரும்பாலும் கெடும்.  எடுத்துக்காட்டுகள்:

வாழ்த்தியம் > வாத்தியம்.
கேழ்வரகு > கேவரகு > கேவர் (பேச்சு வழக்கு).
தாழ்ப்பாள் > தாப்பா. (" )

திரிதல்:

வாழ்நாள் > வாணாள்.

திருத்தம் : மறுபார்வை.

கவனம்: கள்ளமென்பொருள் புகுத்தும் வேண்டாப்புள்ளிகள். 






கருத்துகள் இல்லை: