செவ்வாய், 16 ஜனவரி, 2018

இராசி வீட்டுக்கும் பாவகம் ....



இன்று பாவகம் என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்.

பாவகம் என்பது பல பொருளுடைய ஒரு சொல். அப்பொருள்களில் வீடு என்பதும் ஒன்றாகும்.

கணியக் கலையில் (சோதிடத்தில் )  பிறப்பினைக் கணிக்கக் கட்டங்கள் வரைவர்.  அக்கட்டங்கள் பன்னிரண்டாயினும் இராசி நாதர்கள் என்னும் கோள்கள் ஒன்பதே ஆகும்.  சில கணியர் ஏழே கோள்களைக் கொண்டு கணித்துக் கூறுதலும் உண்டு. இதற்குக் காரணம் இராகு ( இர்+ஆகு) மற்றும்  கேது (கே(டு)+து)   என்பன பாணிப்புகள் அல்லது ஊகத்தில் விளைந்தவை.  (postulated)

ஆனால் இற்றை  நிலையில் புதிய கிரகங்களும்1 கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ( நெப்தியூன், யூரேனஸ் ). கணிதத்தின் மூலம் இன்னும்* இரண்டு கோள்கள் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்தறிந்தது நுண்மாண் நுழைபுலமே ஆகும்.

இந்த இராசி வீட்டுக்குப் பாவகம் என்றும் சொல்லலாம்.   இதைக் "கோள் பாவிக்கும் அகம்" என்று முடிபுகொண்டு,  பாவி+ அகம் = பாவகம் எனினுமாம்.

பன்னிரண்டாகப் பகுக்கப்பட்டிருத்தலால்,   பகு+ அகம் =  பா + அகம் = பா+வ்(வகர உடம்படு மெய்) + அகம் = பாவகம் ஆகும்.  பகுத்துள்ள வீடுகள் என்பது பொருள்.  பகு என்பது பா என்றும் திரியும்.  பகுதி > பாதி.   இது மிகுதி > மீதி எனல்போலுமாம்.

மனிதன் முதன்முதல் அறிந்துகொள்ள விரும்பியது தான் சாகும் நேரம்,  அதை உடனே அறிய இயலாமல் பல கணிப்புகளுக்குள்ளும் புகுந்து படிப்படியாக கணியக் கலையை வளர்த்துப் பிற பல அறிந்தான்.  

சா+ து + அகம் = சாதகம் எனின் சாவை  அறிவதற்கான (கணிக்கலையின்) உட்பொருள் என்று அர்த்தம். இதுபின் பிறப்பை அல்லது அதிலிருந்து அதை (சாவு நிகழ் நேரத்தை )  அறிய முற்பட்டு அது உடன் அறியா நிலையில் பிறப்பு முதலியவை கணித்து, ஏனைய அறிந்தான். அது    ஜா+து + அகம் = ஜாதகம் ஆயிற்று. (து :  உடையது , உரியது, அஃறிணை விகுதியும் ஆகும்.) ஆனால் மாரகத்தை ( மரணம் அல்லது சாவு நேரத்தை மட்டும்) இன்னும் துல்லியமாக அறிய இயல்வில்லை. பல்வேறு கோணங்களில் சில நாட்களாவது முயன்று அறிய வேண்டுமாதலின் அது கைவிடப்பட்டு,  கண்டங்கள் அல்லது அது (சாவு) நிகழும் வாய்ப்புள்ள காலங்களை மட்டுமே இப்போது கூறுவர்.

பாவகம் - இராசி;  (வீடு) .   

 சொல்லறிந்து மகிழ்வீர்.


அடிக்குறிப்புகள்:
இரு+ அகம் > இரகம் > கிரகம்.  இராசி வீட்டில் இருப்பது.
இரு + ஆசு + இ > இராசி.  (பற்றுக்கோடு கொண்டு இருப்பதான கோளின் வீடு.)
* இன்னும் என்பது சேர்க்கப்பட்டது.  இப்போது  யாம் நினைத்த பொருண்மை நன்'கு வெளிப்படும்.

கருத்துகள் இல்லை: