சனி, 27 ஜனவரி, 2018

அருணன் அருணாசலம் அருணோதயம்

அர் என்ற அடிச்சொல் நாம் அறிந்தின்புறத்
தக்க தமிழ் அடி ஆகும்.

இவ்வடியினின்று எழுந்த பழஞ்சொற்களை
முன்னர்க் காண்போம்.

அர் >  அரக்கு. இது கு விகுதி பெற்ற சொல்.அதை நீக்கிவிட்டால் அர் எஞ்சி நிற்கும். அரக்கு செம்மையாதலின் அர் என்பதும் செம்மைப் பொருளினது ஆகும்,

அர் > அரத்தை:  இது இஞ்சி போன்ற வடிவினது.    அர் + அ+தைஅல்லது அர்+ அத்து + ஐ என்ற துண்டுகள் இணைந்த சொல்.  இதுவும் செம்மை நிறத்தினை உடையது.  இதனாலும் அர் என்ற அடி செம்மை குறிப்பதே என்பது தெளிவாகிறது.

அர்+அத்து+ அம்= அரத்தம்.  இது குருதி என்னும் பொருளது. தன் தலையெழுத்தை இழந்து ரத்தம் என்று வழங்குவது. தமிழில் ரகரத்தில் சொல்
தொடங்காது என்று இலக்கணமிருப்பதால், திறம் மிகப்படைத்த நம் தமிழரால் இரத்தம் என்று இகரம் சேர்த்து எழுதப்படுவதுமாகும்.  இதுவும் சிவப்பு என்று நிறம்குறிக்க எழுந்த நல்ல தமிழ் ஆகும். தலையெழுத்தை இழந்து தலைதடுமாறச் செய்விக்கும் சொற்கள் மிகப்பல. முண்டமாக வரும் சொல்லை எந்தமொழி என்றறியாது அலமருவது கண்டு நீங்கள் ஆனந்தமடையலாம்.

அர் :> அரத்தி : செவ்வல்லியைக் குறிப்பது.

அர் > அர+ இன் +தம் =  அரவிந்தம்  : சிவந்த இனிய தாகிய  தாமரை.  தம் என்பது து+ அம். இன் உடமைப் பொருளெனினும் வெற்று இடைநிலை எனினும்
பெரிய வேறுபாடில்லை.

அர் > அரப்பொடி:  சிவப்பாகத் தோன்றும் இரும்புத் தூள்.  துருப்பிடித்தது சற்று செம்மை தோன்றும்.

அர் >   அரன்:  இது சிவனைக் குறிக்கும் சொல் ஆகும்.  சிவ என்பது சிவப்பு நிறம் குறித்தல்போலவே  அர் என்பது, அந்நிறமே குறித்தது. சிவ> சிவன்;  ஒற்றுமை உணர்க.  அரி+அன் என்று புணர்ந்து அரனாகி பாழ்வினைகளை அரித்தெடுப்போன் என்றும் கொளலாகும்.

அர் >  அருணன்:   இது சூரியனைக் குறிக்கும். அர்+ உண்+ அன் என்று பிரிக்க. உண் என்பதற்கு  "உளதாகிய"  என்று பொருள்கூறவேண்டும்.  உண் என்பது துணைவினையாகவும் வழங்கும். எடுத்துக்காட்டு: வெட்டுண்ட.  கட்டுண்ட என்பவை. உள் > உண்.  நாம் உண்பதும்  உள்ளிடுதலே ஆகும். விள் > விண் என்பதுபோல.  விள்> வெள் > வெளி.  சூரியன் செம்மை யாதலின்  அர் என்பதில் அமைந்தது. செங்கதிர் என்பது காண்க. (ஆனால் சூரியன் என்னும்  சொல் செம்மைப்பொருள் உள்ளதன்று. வெம்மை குறிக்கும் சூடு என்னும் சொல்லினின்று வருவது.  சூடு> சூர். சூடியன் > சூரியன்; அதாவது: மடி> மரி என்பது போல. மடிதலே மரித்தல்.  மடி என்பது ம(த்)தி என்று மலாய்
மொழியில் வரும். இவற்றைப் பின் ஆய்வோம்)

அர் > அரிணி.  செந்நிறத்ததான மான்.

அர் > அரிதம் : பொன் நிறம்.

அர் > அரிணம் : பொன். *( செம்மையுடன் உறவுடைய
நிறத்தது )


அருண+ ஆசலம் = அருணாசலம்; அருண+ உதயம் = அருணோதயம். செங்கதி ரோன் தோன்றும் மலை அருணாசலம். இது அருணகிரி அண்ணாமலை என வும் படும்.

அரக்கு என்பது சிவப்பு என்று பொருள்படுவதால், அரக்கர் செம்மை நிறத்தினர் ஆதல் வேண்டுமே, இதை நீங்கள் ஆய்ந்து எனக்கு அறிவியுங்கள்.

அறிக மகிழ்க
 
மெய்ப்பு பின்னர்







கருத்துகள் இல்லை: