திங்கள், 29 ஜனவரி, 2018

ஆண்டாள் அருங்கவிதை


நாச்சியார் திருமொழியில் உள்ள ஓர் அழகிய பாடலைப் பாடி மகிழ்வோம்.  பாடற் பொருள் உணர்வோம்.

பாடல்:
 
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே,
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
பவளவா யன்வரக் கூவாய். (2)



---பாடல் 545 நாச்சியார் திருமொழி.  

ஆழ்ந்த பொருளுடையது இப்பாடல்.
வருமாறு:

"மன்னு  பெரும்புகழ் மாதவன் -   நிலைபெற்ற விரிந்த புகழையுடைய கண்ணன்;
மாமணி வண்ணன் -  பெரியோன்  நீலவண்ணன்;
மணி முடி மைந்தன் -   மணிமுடி தரித்த (என்) இளவரசன்;
தன்னை உகந்தது காரணமாக  -   அவனை விரும்பியது காரணமாக;
என் சங்கு இழக்கும் வழக்குண்டே;-  யான் என் கிடைத்தற்குரியவற்றை   விட்டு விலக  ( துறக்க )   வேண்டும் என்னும் வாதம்  உள்ளபடியால்;
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே - புன்னை மரத்தில் வளரும் குருக்கத்திக் கொடியின்(  மஞ்சள் ) பூக்கள் மலர்ந்த  பொந்தில் குடியிருக்கும் குயிலே;



பன்னி யெப் போது மிருந்து விரைந்தென் பவளவாயன் வரக் கூவாய்-  பலமுறையும் எப்போதும்  மிழற்றிக்கொண்டிருக்கிறாய் ;  என் கண்ணன் உடனே வரும்படியாகக் கூவுவாய்.

"சங்கு என்னும் மேலோட்டினுள் பொருந்தி இருக்கும் உயிரி  (பிராணி ), அவ்வோட்டினால் பாதுகாப்பாக வாழ்கிறது.  உள்ளே இருந்துகொண்டே வேண்டியன அதற்குக் கிடைத்து உயிர் வாழ்கிறது.  யானோ கோவிந்தன்மேல் கொண்ட ஆசையினால் இப்போது  எனது பாதுகாப்பினை  இழக்க நேரிடும் என்ற வாதமும் எதிர்வாதமும் ("வழக்கு")  நடைபெறுகிறது.  புன்னை மரத்தில் வளரும் குருக்கத்தியோ பாதுகாப்பாக மரத்தைச் சுற்றி ஏறிப் படர்ந்து     நிற்கிறது. மஞ்சள்  (காவி)  மலர்களைக் காட்டுகிறது.   கிளியே நீ  உன் புன்னைப் பொந்தில் இருந்துகொண்டு பாதுகாப்பான சூழலில் பலமுறை எப்போதும் கூவிக்கொண்டிருக்கிறாய்.  இத்தகைய பாதுகாப்பு எனக்கும் தேவை ஆயிற்றே. நீ இப்போது நான் காதலிக்கும் மன்னனை இங்கு உடனே வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

"அவன்  சங்கு அவனிடத்து இருக்கிறது; அதை நான் விரும்பினேன்.  அதனால் என் சங்கை (கூட்டை அல்லது வீட்டை ) நான் இழக்கும் நிலையில் உள்ளேன்.  அக் கோவிந்தனை அழை .

நீ கூவினால் போதுமே!    அவன் வந்துவிடுவான். ( அதாவது தூது செல்ல வேண்டியதில்லை ) என்றபடி.

அவனே புன்னை மரம்;  நானோ அம்மரத்தைச் சுற்றி நிற்கத் துடிக்கும் எளிய கொடிதான்.  "

மஞ்சள் மலர்    நாச்சியார்  யாவும் துறந்து நிற்பதைக் காட்டுகிறது.  அம்மையார்  ஒரு  காவி மலர்க்கொடி. கல்வி கேள்வியிலும் அப்படி

ஆண்டாள் பெருங்கவிஞை என்பதற்கு இப்பாடலொன்றே போதுமே.

ஆண்டாளின் பாடல்கள் சங்கப் புலவர்தம் பாடல்கள் போலவே உள்ளன, (இது விருத்தப்பா என்பது தவிர )

வழக்கு உண்டே என்று மட்டும் நம் இறைப்பாவலர் தெரிவிக்கிறார்.  குடும்பத்திலும் உறவினருள்ளும் எல்லோரும் இத்துணை மும்முரமான இறைப்பற்றை ஏற்றுக்கொள்வது உலகியலில் காணற்கரியது.  ஆடவன் அண்டுவதை ஏற்றுக்கொள்ளாத பெண்  ஆண்டாள். இந்த உயர்நிலை காமுகராலும் உலகியலில் அமிழ்ந்துகிடப்போராலும் உணரமுடியாதது ஆகும்.

பட்டினத்தார் வரலாற்றில் அவர் துறவை ஏற்றுக்கொள்ளாத உறவினர் பல தொல்லைகளை விளைவித்ததையும் அவர் பின்னர் : " தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும் "  என்று சபிக்க வீடு பற்றி எரிந்ததையும் அறிக. 

மெய்ப்பு: 07102023 2233

கருத்துகள் இல்லை: