வியாழன், 4 ஜனவரி, 2018

நங்கூரம் என்ற சொல்



இன்று நங்கூரம் என்ற சொல்லை  ஆராய்வோம்.

நம் தமிழ்மொழி பன்முகங்கள் காட்டும் ஒரு மொழி.  அதாவது:  சில சொற்களைச் செவிமடுத்தால் அது சீனமொழிச் சொல் போலிருக்கும். எடுத்துக்காட்டாக:  சாய், பாய், நாய்,  வேய் என்று  ஒலிக்கும். இத்தகைய ஒலியுடைய சொற்கள் சீனமொழியில் உண்டு. ஆனால் அவற்றின் பொருள் வேறுபட்டன.  சில இந்தோ ஐரோப்பியச் சொல் போல  ஒலிக்கும். வேறுசில மலாய் போல தோன்றும்.  இவற்றுள் திரிந்து வேற்றுமொழிபோல் தோன்றுவனவும் ஒருதிரிபும் இல்லாமலே அப்படித் தோன்றுவனவும் உண்டு. ஒலியமைப்பை மட்டும் வைத்து இது எம்மொழிச் சொல் என்று தீர்மானிப்பதில்லை.

சில தமிழ்ப் பெயர்களை வால்வெட்டிவிட்டுக் கேட்டால் வெள்ளைக்காரன் பெயர்போல் இருக்கும்.  எடுத்துக்காட்டாக பெரியசாமி என்பவர் தம் பெயரைப் “பெர்ரி” என்று மாற்றிக்கொண்டு தம் நண்பர்களிடையே மிக்க விரும்பப்படுபவராக ஆகியிருந்தார்.  “மிஸ்டர் பெர்ரி”  ஆனார்.

இவற்றை ஏன் கூறுகிறேன் என்றால் தமிழியல்பினை விளக்குவதற்காகவே. பேசும்போது கடினமாகத் தமிழரல்லாதோருக்குத் தோன்றினாலும் தனிச்சொற்கள் பல வேளைகளில் அப்படிக் கேட்பதில்லை. சில தமிழ்ச்சொற்கள் அயற்சொல் போல் தமிழருக்குச் செவியில் ஒலிக்கலாம்.  அத்தகைய சொற்களில் நங்கூரம் என்பதுமொன்று.

இச்சொல்லில் இரு பகுதிகள் உள. ஒன்று நன்மை குறிக்கும் “நன்” என்பது. இன்னொன்று கூர் என்பதிலிருந்து பெயர்ச்சொல்லாக விளைந்த கூரம் என்ற சொல்லாகும்.

மனத்தில் நன்மை கருதியபடி, சொல்லால் மகிழ்வுறுத்தச் செய்யப்படும் நகைச்சுவைப் பேச்சை : " நங்கு " என்று குறித்ததும் கருதவேண்டியதே ஆகும்.  நன்மை+கு = நங்கு.  இங்கு : " ன் " என்பது " ங் "  எனத் திரிந்தது.

கடலில் கப்பல் கவிழாமல் இருக்க நீரடியில் இறக்கப்படும் கூரான இரும்புதான் நங்கூரம்.  கப்பல்கள் அடிக்கடி கவிழ்ந்து உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் விளையாமல் நல்லபடி இருக்கவேண்டும் என்பதை முன் நிறுத்தி “ நன் “ சொல்லின் தொடக்கமாகிறது. வறுமையில் வாட்டமுறுவோருக்கு “ நல்கூர்ந்தார்”  என்று ஒரு சொல் ஏற்படவில்லையா?  வறுமையில் நன்மை ஏதும் இல்லை. இருந்தாலும் நன்மை இனி விளையவேண்டும் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் இச்சொல் இங்கனம் அமைந்தது.  அது கடிக்காமல் இருக்கவேண்டும் என்ற அச்சத்தில்  “ நல்ல பாம்பு”  எனவில்லையோ?  அதைப்போல கவிழாமல் இருக்க அந்தக் கூரமாகிய இரும்பு “  நங்கூரம் “ ஆனது.  அறிவியல் மேம்பாடு அடைந்துவிட்ட இந்த நிலையிலும் :

நாளை நடப்பதை யாரறிவார்?  ஆதலின் நன்மை கருதிய கூரமே நங்கூரம் ஆகும். 

பிழைகள் தோன்றின் திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: