வியாழன், 25 ஜனவரி, 2018

சொல்: தத்துவம்.


 
தத்துவம் : தன் த தற் தத்

தத்துவங்கள் பற்றிப் பேசுமுன் தத்துவம் என்ற சொல்லை ஆய்ந்து அதன் பொருளைத் தெரிந்துகொள்வோம்.

 இப்படிச் சொல்லினை ஆய்வு செய்து அதிலிருந்து  தொட்டு1 எடுத்து நாமறிகின்ற பொருளோ  நாம் அகரவரிசைகளிலும்  பேரகராதிகளிலும் காணும் பொருளினின்று வேறுபடும்.

வரையறவு: (Definition)

தத்துவம் என்பது பிற கருத்துகளைச் சார்ந்திராமல் தானே நிலைநாட்டப்படும் அளவிற்குத் தனித்தன்மை பெற்ற ஓர் அடைவுக் கருத்து ஆகும்.  இதனை மெய்ப்பிக்கப்பட்ட உண்மை என்றும் கூறுவதுண்டு. An established truth. 

இது தன் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து அமைக்கப்பட்டது.  தன் கடைக்குறைந்து த~  ஆகிறது.  அடுத்தது து.  து என்பது உடையது என்று பொருள்படும் ஒரு சொல். அது  ஒரு அஃறிணை விகுதியாகவும் வரும்.  நரி ஓடுகிறது என்பது இறுதியில் து இருக்கிறது.    திருக்குறளின் முதல் பாவைப் பாருங்கள். அதில் முதற்றே உலகு என்ற தொடர் வரும்.  முதல்+து = முதற்று.  இதன் பொருள் முதலாக உடையது என்பது.  

ஆகவே து என்பது உடையது என்னும் பொருளினது ஆகும்.  

இறுதியில் இருப்பது விகுதி. இது அம்.   ஆகவே த(ன்)+து+ அம் = தத்துவம்.    தன் என்பதின் ~ன்  இறுதியை எடுத்துவிட்டால் பெருந்தொல்லையோ?

செந்தமிழும் கொடுந்தமிழும்:

செந்தமிழ் முறைப்படி அமைந்தால்:  தன்+து + அம் =தன்றுவம் என்று வந்திருக்கும். தற்கொலை என்ற சொல்லில் தற்-  என்று வருகிறது. இது செந்தமிழில் சொற்புணர்வால் அன்றி வருவதில்லை. க ச ட த ப ற என்ற வல்லெழுத்துக்கள் வந்தாலே தன் என்பது  தற் என்று வரும். இல்லாவிட்டால் தற் என்பதற்கு தனிவாழ்வு தமிழில் இல்லை. அது வேறுமொழிக்குச் சென்றால் அதைத்  தத் என்று எழுதலாம். ஏதும் தடையில்லை.  ஏனென்றால் அங்கு இந்த இலக்கணம் இல்லை. இந்தக் கணவனிடம் இருந்து இன்னொருவன் பின்னால் ஓடி அங்கு  சுதந்திரம் (சொம்+தம்+திறம்) பெற்று பிள்ளைகள் பெற்று வாழ்வதில் ஏதும் தடையிருப்பதாக அவள் உணராதது போன்றதே இதுவாம். 

பரிமாணங்கள்:

 பிறழ்பிரிப்பில் தற் என்றாகி, அயல்வாழ்வில் தத் என்று மாறி தனிநிலையாளுமை பெற்றுவிட்டபடியால் அது ஆங்கு, தனிச்சொல். இங்கு அதற்கு அந்த வலிவு இல்லை.

எனவே தன் செந்தமிழ்.  த என்பது னகரம் வீழ்ந்த  கடைக்குறை எனினும் செந்தமிழ். தற் என்பது புணர்விளை.  தத்  என்பது அயல்தோற்றம்.   

செந்தமிழ் அல்லாதவை கொடுந்தமிழ்.  கொடு என்றால் வளைவானது என்று பெருள். கொடுந்தமிழின் பரிமாணங்கள்  ( பரிந்து மாண்புற்றவை ) இன்று பலப்பல. தன் முதல் தற் வரை உள்ளவற்றைத் தமிழாசிரியன் காவல்துறைபோல காத்துக்கொள்ளலாம். ஏனையவற்றைத் தடுக்க அவன் வலிவற்றவன் ஆவான்.  தனித்தமிழ் என்பது ஒரு Rule of Exclusion.
பிற பின்.

அடிக்குறிப்புகள்:

1  தொட்டு = தோண்டி (...எடுத்து)



மறுபார்வையும் திருத்தமும்:  பின்.

கருத்துகள் இல்லை: