ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மறக்கவொண்ணா வேய்வு.


 வேய்வு.

கூரையை வேய்தல் போல் வேய்வது வேய்வு. ஆனால்
மிக்க எளிதாய் அமைந்த வேய் > வேய்வு என்ற சொல் இப்போது நம்மிடை வழங்கவில்லை.

அதற்குப் பதிலாக அதிலிருந்து திரிந்த வேவு என்ற சொல் இருக்கிறது. பண்டை நாட்களில் எங்கு என்ன நடக்கிறதென்று கண்காணித்தவர்கள் தம்  மேல்அடையாளத்தை மறைக்கும் தலையுறை, சால்வை, மேல்துணி,  பரவாடை (பாவாடை) முதலியவற்றைக் கட்டிக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து மிகுந்தன கண்டறிந்தனர்!!

வேவுபார்த்தல்

அதாவது யாம் சொல்லவருவது:  அவர்கள் வேய்ந்துகொண்டு வேய்வு> வேவு பார்த்தனர்.  நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்   யகர ஒற்றுக்கள் மறையுமென்பதைப் பன்முறை பழ இடுகைகளை நோக்கின்  கூறியுள்ளேமென்பதை ஈண்டும் மீண்டும்  உள்ளவும் சொல்லவும் கடன்பட்டுள்ளேம். நீங்கள் தமிழைச் சுவைத்துப் படிக்கவேண்டுமென்பதே எம் நோக்கமாகும். நம்பாமல் வேறு எதிர்வாதங்களை வைத்தாலும் அப்படியும் தமிழைக் கற்றே அவற்றை முன் வைக்கமுடியுமாதலின்  அவ்வழியிலும் பண்டிதன்மை பெற்றுவிடுவீர். வாழ்க.

ஒற்றுக் கெடுதல்:  ( ஒற்று - மெய்யெழுத்து ).   ய்.

வேய்வு > வேவு.
வாய் > வாய்த்தி > வாய்த்தியார் > வாத்தியார்!!
தாய் > தாய்தி > தாதி.
பொய்ம்மெய் > பொம்மை
நெய்த்தோலி > நெத்திலி

பதிலெழுத்துத் தோன்றுதல்:

வாய்மை> வாய்த்துவம் > வாஸ்தவம்   - யகரம் தொலைந்து ஸகரம் நுழைந்தது.

உயிர்மெய்: யகர சகரத் திரிபு:

இதிகாயது > இதிகாயம் > இதிகாசம் (ய -  ச).    ( இது + இங்கு+ ஆயது = இது+ இகு+ ஆய(ம்) >  இதிகாசம்.  இங்கு = இகு : இடைக்குறை).

ஆகாயம் > ஆகாசம்.  (ய-ச).     ஆ: ஆதல், வினைச்சொல்.  காய்: காய்தல், ஒளிவீசுதல்.

 மெய்யெழுத்துகள் விளைத்த கசப்பு:

புள்ளிவைத்த எழுத்துக்களால் ஓலைகள் கிழிய, புதிய ஓலைகள் ஏற்பாடு செய்யவேண்டியதானது. கல்லில் எழுதும்போதுகூட, சில்லுப் பெயர்ந்து போய்த் தொல்லை விளைந்தது.  ஒற்றுக்களைக் காப்பாற்ற எழுத்தாளர்கள் பட்ட கட்டுத்துயர் கொஞ்சமா நஞ்சமா?  எப்படித் தப்பிப் பிழைத்தோம். சீனாவில்போல தூரிகைகளால் எழுதின், வட்டெழுத்துக்களுக்குப் பதில் கீற்றெழுத்துக்களல்லவோ ஆட்சிசெய்திருக்கும்?

வேய்> வேய்+து+அம் = வேய்தம் > வேதம்.
(தமிழமைப்பு வேதமென்னும் சொல்)
வித் > வெத் > வேதா  (சங்கத அமைப்பு)!!

ஓரே ஒலியில் சொற்களை அமைத்தலும் இயலும்.

வேய் > வேய்ந்தன் > வேந்தன் (முடி வேய்ந்தவன்).

பெண்ணும் ஆடை அணிகளையெல்லாம் அணிந்து கொண்டு நின்றாள்.  வேய்ந்துகொண்டு நின்றாள்.

ஓர் ஆணிக்கு இரண்டு ஆணிகளைக் கூந்தலில் சொருகிக்கொண்டு நின்றாளோ?  இரு+ ஆணி = இராணி ஆகவில்லை. ஈராணியும் ஆகவில்லை.

வேய் > வேயி > வேசி  (ய- ச ) போலி)   ஆனாள்.

ஆதிப்பொருள் - நன்றாக உடுத்துக்கொண்டு அழகாக நின்றவள் என்பதுதான்.
நாற்றம் என்பது மணம் குறித்து இப்போது தீய நாற்றம் குறித்ததுபோல வேயி என்பது தன்னை விற்பவளைப்  பின்னர்க் குறித்தது.  பொருளிழிதல் இதுவாகும்.

இனிய அணிகளும் மினுக்கும் உடைகளும் அணிந்தவள் என்ற காட்சி மறைந்தது. 

பெண்ணுக்குக் குமுகம் அளித்த பரிசு இதுவோ?

பிழை பின் திருத்துவோம்.
பிழைகள் பற்றிய குறிப்பு : முன் இடுகை காண்க.

மேலும் வாசிக்க:

http://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_10.html 





கருத்துகள் இல்லை: