சனி, 18 பிப்ரவரி, 2017

உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான்

கம்ப இராமாயணத்தில் உள்ள எல்லாச் செய்யுள்களையும் கம்பரேதாம்
எழுதினாரா என்ற கேள்விக்கு அறிஞர் சிலர் விடை பகர்ந்தனர்.  சில‌
பாடல்கள் சுவையும் சொல்லழகும் குறைந்தவையாய்க் காணப்படுவதால்
அவற்றைப்  பிறர் எழுதி இராமாயணத்திற் சேர்த்திருக்கிறார்கள் என்ற‌
முடிவுக்கு வந்தனர்.

ஒருவ‌ரே எழுதினாலும் சில மிக நன்றாக அமைந்துவிடுகின்றன. சில சுவை குன்றிவிடுகின்றன.  ஆதலால் இதை அறுதியிட்டுச் சொல்வது
கடினம்.

தொல்காப்பிய இலக்கண நூலிலும் இங்ஙனம் பிறர் எழுதிச் சேர்த்தவை
உளவென்பர்.  காலக் கழிவு காரணமாக ஓர் இலக்கண நூலில் சில‌
பொருந்தாமை ஏற்படுங்கால் முற்றிலும் புதிதாக ஒன்றை எழுதிக்கொள்ளாமல் இருப்பதில் சில மாற்றங்கள் செய்து வைத்துக்கொள்வது ( அதாவது மாணவர்களுக்குப் பயிலத் தருவது )
என்பது ஆசிரியர் சிலர் மேற்கொண்ட நடவடிக்கையாகலாம். இப்படிச்
செய்தாவது அதை வைத்துக்கொண்டார்களே, இல்லாவிட்டால் எல்லாமும் அல்லவா வீசப்பட்டிருக்கும்?  முழுமையும் இழப்பதற்குச்
சில மாற்றங்களுடனாவது அது கிடைத்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். அதேவேளையில் நாம் கவனமாகவும் இருக்கவேண்டுமென்பதே சரியான கொள்கையாகத் தோன்றுகிறது.

அப்போது நடந்தது பற்றி கவலைப் படும் அதேவேளையில் இப்போது
நடக்கும் முறைகேடுகளைப் பற்றி நம்மால் யாதும் செய்ய முடியவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கவே வேண்டியுள்ளது.

ஊரெல்லாம் வெள்ளக்காடு;  கால் நனையாமல்  எப்படி நடப்பது என்று கேட்டாராம் நபிகள் நாயகம். உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான் ,
" ............ஆகுல  நீர பிற  "  என்றான் வள்ளுவன் ,












கருத்துகள் இல்லை: