சனி, 4 பிப்ரவரி, 2017

உடம்புச் சொற்கள் .....

உடம்பு என்ற சொல் பொருண்மை மிக்குடைய தமிழ்ச் சொல். நம்
ஆன்மா இவ்வுடம்பை உடுத்திக்கொண்டிருக்கிறது என்ற பொருள் இச்சொல்லில் பொதிந்துகிடக்கின்றது. இதில் உள்ள அடிச்சொல் "உடு" என்பது ஆகும். இத்தகைய ஆன்மிகப் பொருளை விரும்பவில்லை
என்றால், உள் உறுப்புகளைப் போர்த்திக்கொண்டு உள்ளது என்று பொருள்
கூறிவிடலாம்.

உடம்புக்கு மெய் என்ற பெயரும் உள்ளது, இது : "மே"  அல்லது மேல்
என்ற அடியிலிருந்து வரும் சொல். சிலர் உடலை மேல் என்றும் சொல்வர். மேலெல்லாம் ஒரே அரிப்பாக இருக்கிறது என்பது கேட்டிருக்கலாம். மேல் > மேலி > மேனி என்ற சொல்லையும் ஆய்ந்து
நோக்கலாம்.லகரம்னகரமாய் மாறுவதுடையது.  மே> மெய்.  இதற்கு
உண்மை என்ற பொருளும் உள்ளபடியால், மரணத்தால் பொய்த்துவிடும் உடலினை எங்ஙனம் மெய் என்பது என்ற தத்துவக்
கேள்வி எழுகின்றது. மலம் என்னும் கேடு ஊறித் ததும்பும் இதனை
எப்படி மெய் என்பது எனத் தாயுமான அடிகள் கேட்கின்றார். மெய் மெய்யன்று; அது பொய்யே ஆகும். உயிர் போன பின் ஒரு நாளில்
புதைக்கவில்லை என்றால் நாறத் தொடங்கிவிடுவதால், பாடம்பண்ணினாலே தாக்குப்பிடிக்க முடியும்.  அழிபொருட்களை
உண்டுவளர்ந்த உடலாதலால் உயிர் நீங்கியபின் அதுவும் அழியத்
தொடங்கிவிடுகிறது.  ஆகவே மெய்யினை மெய் என்று கொள்ளாதீர்.
இது அழிதலை உடையது. இறைவனையே நம்புக என்ற தத்துவத்துக்கு
வந்துவிடுகிறோம்.

தேகம் என்பது, தேய்தல் என்ற சொல்லினின்றும் போந்தது.
தேய்+ கு+ அம் = தேய்கம் > தேகம் ஆகும். பல சொற்களில்போல‌
யகர ஒற்று, மறைகிறது அல்லது கெடுகிறது. தேய்தல் அல்லது
அழிதலை உடையது தேகம்.  நிலையாமையை உணர்த்தும் சொல்
இதுவாகும்.

யாத்தல் என்பதன்  அடியாகத் தோன்றியது  யாக்கை. யாத்தல் என்பது கட்டுதல் . பல உறுப்புகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்டிருப்பது யாக்கை;
அன்றி  ஆன்மாவைக் கட்டி வைத்திருப்பதும் அதுவாம் 

கருத்துகள் இல்லை: