வியாழன், 9 பிப்ரவரி, 2017

அயர்தல்அசதி அசா அசத்துதல் .

அயர்தல் என்பது நல்ல தமிழ். அயர்ந்து உறங்குகிறாள் என்று சொல்வதுண்டு.  பேச்சில், யகரத்துக்குச் சகரம் வரும். அது வாடிக்கையான திரிபு. பல சொற்களில் வரும் என்று முன்பு எழுதியுள்ளோம். பல அழிந்துவிட்டாலும், மறந்திருக்க மாட்டீர்கள்.

அயர்தல் > அசர்தல்.  அசந்து தூங்குகிறான் என்பர்.  அயர் > அசர்.
அசர்ந்து என்பதில் உள்ள ரகர ஒற்று மறைந்து, அசந்து என்று பேச்சில்
வருகிறது.

ஒரே அசதியாக இருக்கிறது என்பார்கள்.  ஆக, அயர்> அசர் > அச > அச+ தி (விகுதி) > அசதி ஆகிறது.  அயர் என்ற முதற்சொல்லினின்று
திரிந்திருப்பினும், அசர்தி என்று வருவதில்லை. ரகரத்துக்கு
வேலையில்லாமல் போய்விடுகிறது.


திரிபுகளே இல்லையென்றால்,  பல சொற்களும் பல இனமொழிகளும்
தோன்றியிரா என்பதைச்  சிந்தித்து உணர்க.

அச என்பது அத்துடன் நின்றதா?

ஓர் ஆகார விகுதி பெற்று,  அசா என்று ஆனது. அச + ஆ = அசா.
ஆ விகுதி வந்த சொற்கள் பல. ஓர் உதாரணம். கல் (படித்தல் )+ ஆ
கலா. (கல்வி).  பல்+ ஆ = பலா (பல சுளைகள் உடைய பழவகை, அது காய்க்கும் மரம்)  என்பதும் இன்னொரு காட்டு ஆகும்.

அயர் > அயா > அசா என்று காட்டினும் அமையும்.

அயர்  >  அயர்த்து  (பிறவினை ) >  அசத்து .

மிகக் சிறந்த ஒன்றைப் பார்த்து  நம்மால் முடியுமா என்று "அயர்வு "  கொள்ளும்படி  செய்தல் .  அசத்துதல் .

கருத்துகள் இல்லை: