புதன், 5 மார்ச், 2014

பஞ்ச - ஐந்து தொடர்பு

ஐந்து என்ற சொல் நூல் வழக்கில் உள்ள நல்ல தமிழ்.  பேசும்போது இந்தச் சொல்லை யாரும்  இயல்பாகப் பயன்படுத்துவதில்லை.   "அஞ்சு "  என்ற பேச்சு வழக்குச் சொல்தான் நம் நாவில் தவழ்வது.  இது  அச்சமுறுதலைக் குறிக்கும் "அஞ்சு " என்ற சொல்லுடன் மயங்கி எத்தகைய பொருள்தடையும் முளைப்பதில்லை. அதற்குக் காரணம்  நாம் "பயப்படு "  என்பதைப்  புழங்குகிறோம். ஆனால் திரைப்பாடலில் அல்லது திரை தரும் உரையாடல்களில் வரும்போது அதை சுவைக்கத் தொல்லையேதும் குறுக்கிடுவதில்லை.

"அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்"  (கண்ணதாசன் )

என்று பாடலில் வந்தால் நன்கு சுவைத்து மகிழ்வோம்.    அஞ்சிலிருந்து எட்டுவரை அதில் அமைந்துள்ளபடியால்.

ஐந்து என்பதிலிருந்து அஞ்சு வந்ததா அல்லது அஞ்சு என்ற வாய்மொழிச் சொல்தான்  ஐந்து என்று இலக்கிய வழக்காகத் திரிந்ததா /  திருத்தப்பட்டதா என்று கேட்டால் அதற்குப் பதில், திட்ட வட்டமாகத் தெரியவில்லை எனபதாகவே இருக்கும்.  எழுத்து மொழியினும் பேச்சு மொழியே முந்தியது என்றால் அஞ்சு என்பதுதான் முந்தியது என்று கூறவேண்டும்.  ஆனால் :

மூல வடிவம்  "ஐ"  என்று தெரிகிறது.  பழந்தமிழர் (கல்தோன்றி மண் தோன்றி தமிழர்  தோன்றி ) ஓரசை மொழியைப் பேசியகாலை "ஐ" என்றிருப்பர். பின் அது "ஐஞ்சி" "அய்ஞ்சி"  "அஞ்சு" என்றெல்லாம் திரிந்திருக்கலாம்.  தொல்காப்பியனார்  போன்ற பழம்பெரும் பேராசிரியன்மார் அதை மாற்றி "ஐந்து" என்ற "து" இறுதிகொண்ட  சொல்லைப்  படைத்திருக்கலாம். ஐந்து என்பது புலவர் புனைவாகையினால் இதுவரை அது பேச்சு  வழக்கில் வரவில்லை.

அஞ்சு என்பதற்கும் பஞ்சு என்பதற்கும் உள்ள வேறுபாடு ஒரு பகர ஒற்றுதான்.
ப்  + அ  = ப . இந்த ஒரு புள்ளியிட்ட எழுத்தே வேறுபடுகின்ற பஞ்ச் என்ற சொல்  அஞ்சு என்பதன் தலைத் திரிபே ஆகும். பஞ்ச் என்பதிலிருந்து பல சொற்கள் புனைவு பெற்றன.  பஞ்சாமிர்தம்  பஞ்சாயத்து, பஞ்சகபாலம்,   ,பஞ்சதாரை. பஞ்சதீதீ ,    இன்ன பிற   (இத்யாதி இத்யாதி )

அஞ்சு என்ற பேச்சு வழக்கின் திரிபே பஞ்ச் என்பது  . மூலச் சொல் "ஐ " ஆகும். 

 

     

கருத்துகள் இல்லை: