வியாழன், 20 மார்ச், 2014

வாடகை

வாடகை என்பது அழகிய தமிழ்ச்சொல்.  சிலர்  இது என்ன சொல்லோ என்று ஐயுற்று  இதனைக் குடிக்கூலி என்று மாற்றிச் சொன்னார்கள்.  குடியிருக்கக் கூலி என்று இஃது  விரியும்.

வாடகை என்பது அமைந்த விதம் நோக்குவோம்.

வாழ்>   வாழ் + அ + கை   =  வாழகை  >  வாடகை. (1)

இங்கு ழ என்பது ட என்று திரிந்தது.

இது வழக்கமான திரிபுதான் . பாழை >  < பாடை  என்பதுபோல.

இதில் நடுவில் நிற்கும் அகரம்.ஒரு .சாரியை.  கை என்பது விகுதி.
 ஒரு  வீட்டில் வாழ((குடியிருக்க)க்   கையில்(வீ ட்டுக்காரனிடத்தில்) தரப்படுவது (ஆகிய பணம் ) என்றும் பொருள் கூறலாம்.  இந்தச் சொல்லுக்குக் "கை" பொருத்தமான விகுதி.

சொற்களை  அமைக்கும்போது இப்படிப் பலவகையிலும் பொருந்துதல்  கருதி  அமைப்பது சிறப்பு ஆகும்.

வாழகை என்பதையே ஏன் பயன்படுத்தலாகாது என்று சிந்திக்கலாம்.

வாழகை என்பது வாடகை என்று திரிந்ததும் நன்மையே.  மற்றபடி  அகரச் சாரியை வந்து, வாழ்க்கை என்ற சொல்லுடன் மயங்காமையை நல்கியது.

வாழ என்ற வினை எச்சமே சொல்லின் பகுதி என்று  சில மொழிகளின் இலக்கணியர் கருதியிருப்பர். எ-டு :  பாலி .   தமிழில் ஏவல் வினையே பகுதியாவது மரபு.

======================================================================

(1)  ஞா . தேவநேயப் பாவாணர்.

%"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்,
குடியிருக்க நான் வந்துவிட்டால்
வாடகை என்ன தரவேண்டும் " திரைப்பாடல்.

%%மேற்கண்ட பாடலில் "குடிக்கூலி "  எனற்பாலது மோனையாகியிருக்கும் எனினும் வாடகை என்பதே பொருந்திய சொல்.

கருத்துகள் இல்லை: