வியாழன், 9 அக்டோபர், 2008

Paradise Lost a small part translated.

ஹோமர் முதலாகிய பெருங்கவிகளின் காப்பியம்போல் அல்லது அக்கவிகளை மிஞ்சிய நிலையில் ஒரு காவியத்தைப் படைக்க வேண்டுமென்பது ஜான் மில்டனின் எண்ணமாயிருந்திருக்கக்கூடும். அதுமட்டுமன்று, ஷேக்ஸ்பியர், விவிலிய நூலின் இலக்கிய நயம் முதலியவற்றை மில்டன் கவிதையின் சில கூறுகளில் விஞ்சிவிட்டார் என்றுதான் இலக்கிய அறிஞர்கள் கருதுகின்றனர். சொர்க்கதத்திலிருந்து வீழ்ந்த பேய்கள் தம் புகழுக்கு மில்டனுக்கு நன்றி நவிலக் கடப்பாடுடையவை (The devil owes everything to Milton) என்று ஷெல்லி சற்று நாணத்துடன் குறிப்பிட்டுள்ளார். காரணம் விவிலியத்தில் இல்லாத சில பேய்த் திறமைகளை மில்டன் தன் காவியத்தில் அடுக்கி அணிசெய்திருப்பதுதான். மில்டனின் காப்பியத்திற்கு மூலக்கதை தந்தது விவிலிய நூலே ; ஆயினும் மில்டனின் பெருங்கற்பனை கதையில் புகுத்தப்பட்டுள்ளது. தன்னையறியாமலே ஓர் உண்மைக் கவியாகிய மில்டன் பேய்களின் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்றும் ( A true poet of the Devil's party without knowing it" - William Blake) கூறப்பட்டதுண்டு.

மில்டனின் சமயத்தைப் பற்றிய கொள்கைகள் இயல்பு நிலையிலிருந்து சற்று வேறுபட்டவை என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கருதுவர். ஆன்மீக உள்ளுணர்வுத் திறத்திற்கும் இயற்கை ஆற்றலுக்கும் இடையில் மில்டன் எந்த வேறுபாடும் உள்ளதாக ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இவர் சமயத்தூய்மை கடைப்பிடிப்பவராய் (puritanism) இருந்தார், இவர் பெற்றோரும் இக்கொள்கை உடையோரே.

மில்டன் 1608ல் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மிகுந்த முனைப்புடன் கல்வி கற்று, "இளங்கலை"ப் பட்டமும் (BA) மற்றும் "முதுகலை"ப் (MA) பட்டமும் பெற்றார். பல காவியங்களைக் கற்று அவற்றில் வல்லவரானார். "இழந்த மேலுலகம்" தவிர, இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார். இறுதி நாட்களில் கண்பார்வை இழந்தவர். இழந்தபின், 1655ல் "இழந்த மேலுலகம்" பாடினார். "சொர்க்கத்தின் மறுபேறு" (Paradise Regained) பின் பாடப்பெற்ற நூல். 1674ல் கவி மறைந்தார்.

இக்காவியத்தின் கருப்பொருள்: மனிதன் தன் கீழ்ப்படியாமையினால் இணையற்ற வானுறை வாழ்வினை இழந்தான் என்பது. காவியத் தொடக்கத்தில் மில்டன் இறைக்காப்பினை வேண்டுகின்றார்: உரை நடையிலோ கவிதையிலோ இதுவரை காணாத ஓர் ஈடு இணையற்ற காவியத்தைப் புனைய அருளுமாறு அவர் இறைஞ்சுகின்றார். இது ஓர் மரபுசார்ந்த வேண்டுதலேயாகும். நம் முன்னோர் இறையுலகை இழப்பதற்குக் காரணம் தீயின் திறனார்ந்த பாம்பு வடிவெடுத்த தேவப்பேய்தான் என்கிறார். லூசிபர் மற்றும் அவருடன் நின்று இறைவனை எதிர்த்த தேவதூதர்கள் ஆகியோர் நடத்திய போராட்டம் காவியத்தில் சுருக்கமாக வரணிக்கப்படுகின்றது.

இங்கு நான் மொழிபெயர்த்திருப்பது காவியத்தின் முதல் படலத்திலுள்ள சிறு பகுதியையே!! இக்கூறு, "கட்டவிழ் பேய்கள் முனைவு" (The Pandemoniam) என்பதாகும். (pan = அனைத்து, demoniam = பேயகம் எனலாம் ). இச்சொல் இப்போது பெருங்கூச்சலும் குழப்பமுமான நிகழ்வினைக் குறிக்க வழங்கப்படுகின்றது. நரகம் சென்றபின் அவை முனைந்து நின்று ஒரு பெருமன்றக் கட்டிடத்தைக் கட்டின. எங்ஙனம்? அதையே இக்கவிதைப் பகுதி எடுத்துக்கூறுகின்றது. இதை ஒரு வினயமான காவிய முயற்சி எனக் கருதவேண்டாம். ஒரு குழந்தை விளையாட்டு முயற்சி என்றே கொண்டு குறைகளைக் கருதமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
தருகின்றேன்.

கம்பன்போலும் பெருங்கவிஞன்கூட, கவிதைகளில் வழுக்கள் தோன்றுமாயின், வையகம் ஏசும், மாசு தனக்கு ஏற்படுமே என்று கவலைப்பட்டதாக தன் நூலின் அவையடக்கத்தில் கூறுகின்றான்!! எழுதுகிற எவருக்கும் உள்ள அச்சம் எனக்குமட்டும் இல்லையா என்ன? அதுவும் மில்டன் போல ஒரு பெரும் நல்லிசைப் புலவனின் கவியை தமிழில் கூறுவதென்றால் விளையாட்டல்லவே!! உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டிக்கொள்கின்றேன்.


பாடல்:


மலைசிறிய தாகும·து தொலைவில் இல்லை
மண்டினதீ புகைகொடிய முகடு தன்னில்,
வெளியருகில் பளபளக்கும் பிடர்த்துண் டைப்போல்
வேறிலது கந்தகம்தான் கருக்கொண் டாலே
விளைவிதுவாம்! விரைந்தனதம் சிறகி னோடு
விதவிதமாய் படைப்புலங்கள்! புதுமைத் தொண்டர்
களைபிடுங்க மண்பிளக்கக் கருவி ஏந்தி
கடுகிவரும் காட்சியைப்போல் காண லாகும். (1)


அரண்புகுவார் அகழிக்குள் பதுங்கி நிற்பார்
அருங்கோட்டை தகர்த்திடுவார் அன்ன வேகம்!
பொருட்பூதம் அவர்தம்மை நடத்தும் நாயன்!
பொன்துறக்கம் போய்வீழ்ந்த கொடிய பேயன்.
அருட்பரனின் உலகத்தில் குனிந்து நோக்கி
அங்கிருந்த செல்வங்கள் நயந்த தீயன்!
திரள்தங்கப் புதையல்பொன் னொழுங்கை கண்டு
தெருள்மருவு பேரின்பம் பிறழ்வ தானான். (2)



நிலமகளின் நடுவண்நன்கு மறைவாய் நின்ற
நெடும்புதையல் கொடுங்கரத்தால் துருவித் தேடி
புலம்பெயர்த்துத் திருடிவிட்டார் முன்மாந் தர்தாம்!
பொருட்பூதன் மருட்பேச்சால் குருட்டுக் காட்டால்!
சிலநாளில் குன்றுருவிப் பெரும்புண் தோண்டி
செதுக்கினபொற் செம்பாளம் பதுக்கிக் கொண்டார்.
உலவாதீர் நரகத்தை உயர்வாய் உள்ளி;
உயிரழிக்கும் ஒருநஞ்சு பயிலார் நல்லார். (3)



அழிவனபால் ஆசைகொண்டு புகழ வேண்டாம்
அணிபேபல் கோபுரத்தை எகிப்து மன்னர்
பொழிசெல்வக் கலைதம்மைப் போற்ற வேண்டாம்!
பொய்ப்புகழ்சேர் புன்கலைகள் மாடம் கூடம்
விழைவதுநீர் விடுதல்நேர்! விலக்கித் தேவன்
விட்டுவிட்ட கெட்டொழிந்த பேய்கள் ஒற்றைக்
குழைமணிக்குள் இவைதம்மைக் கூடி நின்று
குறையின்றி நிறைவேற்றி அமைக்க லாகும். (4)



எண்ணிறந்த கைகளுடன் இழுக்க மில்லா
எடுத்ததனை விடுத்திடாத உழைப்பி னாலே
ஒண்ணுதலில் லாததனைப் பண்ணும் ஆற்றல்!
ஒட்டியுள்ள சமவெளிபால் அறைகள் கீழாய்
மண்ணடியில் குழாய்களிலே ஒழுகும் தீயும்
மடைதிறந்து பாயுமங்கே இரண்டாம் கூட்ட
முன்னணியும் பொன்மண்ணை உருக்கிக் கொண்டு
முனைந்துபல வகைப்படுத்திச் சுருட்டிக் கொள்ளும். (5)

தரைப்படிவக் கண்ணறைகள் தம்மில் நின்று
தளர்ந்துருகிக் கொதித்துமுறை உணரா வண்ணம்
உறுப்பிசையின் பேழையினுள் பாய்வ தொக்க
ஒருவீச்சில் காற்றைப்போல் புகுந்து தேங்கி
நிறைப்புறுமே நிரல்நின்ற குழல்கள் உள்ளே;
நேரிசையும் பொருந்திவரும் அவற்றி னின்று !
உரைப்பதிது நடப்பதுவும் அரங்கம் மூன்றில்;
உருகிப்பல வெற்றிடத்துப் பெருகி நிற்கும். (6)


அடுத்து:



ஒரு மூச்சில் கோவிலைப்போல்
பெருமாடக் கட்டிடத்தை
உருவாக்கி அணிசெய்தன:
முனைநான்காய்த் பலதூண்கள்!
வளைந்த பொன்விட்டங்கள்.
நிலைநின்ற கடுந்தூண்கள்!
பூவேலை மச்சின்கீழ்,
நாவுயர்த்தும் சிற்பங்கள்!
கூரையெங்கும் ஆர்பொன்னே!!
இன்குரல்கள் மெல்லிசையோ
டியைந்தோடிக் கலப்பதங்கே.
கெய்ரோவும் பாபிலோனும்
மெய்சிலிர்க்கும் உய்சிறப்பின்
செழிப்பிலும் செல்வத்திலும்
தங்கடவுள் பேலுவுக்கும்
பொங்குசர பீசுக்கும்
அணிவித்துக் கண்டறியா
அழகன்றிப் பிறிதில்லை!!
எகிப்துவும் சிரியாவும்
மிகுபுகழ் தம் மன்னர்க்குப்
போர்த்தி அறியாப்பொன்
ஆர்த்த கவின்குவையாம்!!
குன்றுபெறும் ஏற்றம்போல்
நன்றுயர்ந்த அரசக்குவை!!
இன்றிதற்கே ஈடோ எவை?
கடைதிறந்து புக்குநோக்க
புரைசொர்க்கம்!! விரிநடைகள்,
கோணறியாச் சமன்செய்த
மாணுடையன!! மந்திரத்து
மெல்லழகுப் பதக்கம்போல்
உள்பதிந்து, விளக்கு அணிகள்
உடுக்கள்போல் மினுக்குவன!
மிடுக்குயர்ந்து வெட்டம்தரும்
கருங்காரை, கீலெண்ணெய்
நெடுங்கம்பத் தீவட்டிகள்
வான்வழியாய் வருமொளிபோல்
தாம்நின்று மிக்கொளிர்வன!!
விரைந்தனவாம் பெருங்கூட்டம்
புகுந்ததுமே புகழ்ந்தனசில
சித்திர அழகமைப்பை!!
மெத்தவுமே போற்றினசில
கட்டிடக் கலைஞன் தனை!!
உலகியற்றிய திருவுடையான்
பலகிளைகள் அரசுமுறை
முன்னமைக்கப், பொன்னணைமேல்
தேவர்கள் தேவதைகள்
மேவியே கோலோச்சிய
தாவறியா மேலுலகத்தினில்
வானுயர்ந்த கோட்டைகளை
தானுயர்த்திய கையுடையான்.
கலைஞன் முல்சிபர்தன்
நிலைத்த பெரும்புகழும்
பழங்கிரேக்கம் அச்சோனியம்
அலங்காரம் இந்நாடுகளில்.
சொர்க்கத்தி னின்று வீழ்ந்த
வர்க்கத்தில் இங்குபட்டான்.
வியாழன் விரைந்துவந்து
வெண்பளிங்கு மதில்மேலே
சினங்கொண்டு வீசிவிட்ட
விதங்கண்டால் வியப்புமிகும்!
உச்சியில் நின்ற உடு
எச்சத்தால் வீழ்தல்போல்
நிலைதானும் குலைந்ததனால்
இலுமோசு தீவகத்துள்
கோடையிலே ஒருநாளில்
காலைப்போதில் தொடங்கி
நண்பகல் காறும்பின்
வெண்பனி வீழும்வரை
கதிரவனுடன் சாய்ந்தே
உதிர்ந்து விழுந்துவிட்டான்
பெரும்பிழையின் விளைவெனவே
திறம்படவே இ·துரைப்பர்!!
எதிர்த்தாடிய பேய்க்கூட்டம்
முதுநாளில் முன்வீழ்ந்தது!
இதுபோலும் கோபுரமனை
அடிநாளில் அமருலகில்
முடியாத தொன்றாகுமோ?
இயங்குபொறி எனைத்தொன்றும்
பிணங்கியோட வழிதரவிலை!
அதனால்,
தலைகுப் புறவே நிலையின் இழிந்துதம்
கலைசேர் குழுவுடன் நரகினில் கோபுரம்
மலைவுற யாவரும் மயங்க
நிலையுற நிறுத்தின நெடும்பேய்க் கூட்டமே! (7)


குறிப்புகள்:

பாடல் 1 (வெளி = சமவெளி; plains. பிடர்த்துண்டு = scarf).
பாடல் 2: (பொன் துறக்கம் போய் வீழ்ந்த = பொன்னான சொர்க்கம் கைவிட்டுப் போய் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட. பேயன் - devil. நாயன் = படைத்தலைவன். படைநாயகம். அருட்பரனின் உலகத்தில் = சொர்க்கலோகத்தில். நயந்த = விரும்பிய (கவர்ந்துகொண்ட எனும் பொருட்டு) see usage: piRan manai nayaththal. ஒழுங்கை = சிறியவீதி. பொன்னொழுங்கை = பொன்னால் ஆன ஒழுங்கை. பேரின்பம்: இறைவனுடன் உறையும் சுவர்க்க இன்பம்.)
பாடல் 3: (குருட்டுக் காட்டால்! = குருட்டுத்தனமான எடுத்துக்காட்டால். புண் = தரைக்குப் புண்போன்ற குழி. பொற் செம்பாளம் = ribs of gold. )
படல் 4: (குழைமணிக்குள் = within a soft hour. (the word soft is used here to show 'nothing hard and the job was easily accomplished.'). அணி பேபல் = beautiful Babel tower. எகிப்து மன்னர் பொழிசெல்வக் கலை = எகிப்து மன்னர் தங்கள் செல்வங்களைப் பொழிந்து உருவாக்கிய கட்டிட, இதர வேலைப்பாடுகள் : the works of Memphian kings.)
பாடல் 6: (உறுப்பிசையின்பேழை = organ (a musical instrument). )
பாடல் 7: ஒருமூச்சில் - ஒரே மூச்சில் ( மிக விரைவாக நிறுத்தம், தயக்கம் இன்றி). முனை நான்காய் = square. மச்சின்கீழ் = ceiling. நாவுயர்த்தும் - போற்றும். அரசக்குவை = stately height (heap). அமருலகில் = அமரர் உலகில். in heaven.

கருத்துகள் இல்லை: