வெள்ளி, 31 அக்டோபர், 2008

பொங்கலும் வேண்டும்!அப் பொங்கலை உண்டற்கு
வெங்காப் புலவரும் வேண்டுமே --- தங்குவீர்!
தங்கிப் புனைபாவில் தண்தமிழ் பொங்கிவர
எங்கும் பொலிவாம் இனி!


போடும் படையலுக்குப் பொங்கும் முறைவேறு;
கூடும் விழவுக்கு வேறுமுறை --- நாடுங்கால்
பொங்கல் பலவிதமே; பொன்னான பண்டிகைப்
பொங்கலுக் கீடில்லை போ!


மூண்ட பொழுதெல்லாம் மும்மூன் றெழுதியிட
ஈண்டு மிகுமே இருமடங்கின் --- பூண்டிலங்கும்
எண்ணிக்கை மட்டோ இனிமையும் ஒத்தியலப்
பண்ணுவம் பற்பல பா.


மூண்ட = ஏதேனும் ஒரு நிகழ்வு மூண்ட அல்லது நிகழ்ந்த.



வெண்பா எழுதுதல் வேலை பெரிதில்லை
கண்பார்த்துக் கையால் எழுதுக! --- முன்பார்த்த
சீருக்குச் சீர்பின் சிதைக்காமல் சேர்த்தபின்
யாருக்கும் ஏற்பாமே யாப்பு.
புரைதீர்ந்த பாட்டென்ற போதும் புரியக்
குறைதீர்ந்த உரையாங்கு வேண்டும் --- வரைதீர்ந்த
ஆர்வத்தோர் பல்லோர் அவர்க்கும் புரிந்தாலே
சீர்வற்றா தோங்குந் தமிழ்.
நாளுக்கு நன்மைசேர் நல்ல சுவைப்பாடல்
வேளைக்கு வேளையாய் வெல்தமிழில் --- பாலுக்குத்
தேன்கலந் தாற்போல் தெளிசொற்கள் பெய்தெழுத
வான்மலர்ந்து வாழ்த்தும் உனை!


தமிழ்ச்செங் கதிரோர்க்கெம் தாழ்மை வணக்கம்
அமிழ்தாம் தமிழாலே நன்றி --- கமழ்பூவாய்
ஓங்கும் உணர்வுகள் ஓவாக் களமிங்கே
நீங்கள் நிலைகொள்மின் நேர்.

நீரூறும் மண்ணதன் நீங்கா வளம்போல
ஆரூரன் வெங்கா அனைவருமே --- சேருணர்வு
துள்ளும் களத்தினில் தூயவெண் பாக்கள்நெஞ்
சள்ளும் படிதந்தார் அன்று.

வெண்டுறை வெண்பாவென் றெப்பாடல் ஆயினும்
கண்டுகேட் டின்புற வொன்றேயாம் --- உண்டக்கால்
நாவுக்கே வேற்றுமை நல்வயிற்றுக் குண்டாமோ
தேவுக்கோ யாவும் படைப்பு.

உண்டால் அடங்கும் உறுபசியே; நற்பாடல்
கொண்டால் அடங்கும் குலைவிலா --- வண்டுதேன்
தேர்வேபோல் தேடும் அறிபசி; தேர்வாரும்
ஆர்வம் உடையார் எனின்.


களம்சேர் கருத்தாளர்் காணுங்கால் தங்கள்
வளம்சேர் கருத்துகளை வைப்பில் --- குளம்போல்
வெளிவிடார் எம்மிடுகை வேகம் படித்தே
களிகொளார் கைவிடு வார்.

இப்பாடலுக்கான பதவுரை வருமாறு:

காணுங்கால -- ஆய்வு செய்யுங்கால்;
களம்சேர் கருத்தாளர் -- இணைய களங்களுக்கு வருகை புரியும் கருத்துடையோர்;
தங்கள் -- தங்களுடைய;
வளம்சேர் கருத்துகளை -- வளமிக்க கருத்துக்களை;
வைப்பில் -- (தாங்களே ) வைத்துக்கொள்வதில்;
குளம்போல் -- தன் நீரைத் தானே வைத்துக்கொள்ளும் குளத்தைப்போல;
வெளிவிடார் -- வெளியே விடமாட்டார்கள்:
எம்மிடுகை வேகம் படித்தே -- யாமிடும் இடுகைகளை வேகமாக (மேலெழுந்தவாரியாகப் ) படித்துவிட்டு;
களிகொளார் -- மகிழ்ச்சியும் கொள்ளமாட்டார்;
கைவிடு வார். -- மேற்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர்.

கருத்துரை: களங்களில் கருத்துப்பரிமாற்றமென்பது மிகவும் அருகியே நடைபெறுவதாகத் தெரிகின்றது.



களம்சேர் கருத்தாளர்் காணுங்கால் தங்கள்
வளம்சேர் கருத்துகளை வைப்பில் --- குளம்போல்
வெளிவிடார் எம்மிடுகை வேகம் படித்தே
களிகொளார் கைவிடு வார்.


கருத்தீடு கண்டு கடிந்தியா தொன்றும்
மறுத்தீடு தந்திட மாட்டார் --- பொறுத்திலார்;
ஓடிச் சிலநாள் ஒளிந்தார்போல் பின்வந்து
நாடினார்் நண்பர் பலர்.


பதவுரை:
கருத்தீடு கண்டு = இடப்பட்ட கருத்தினைக் கண்டு; ஈடு = இடுதல்; முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஒப்பு நோக்குக: வெளியீடு.
கடிந்தியா தொன்றும = கடிந்து யாதொன்றும்; சினங்கொண்டு ஏதும்;்
மறுத்தீடு = மறுப்பு இடுதல்;
தந்திட மாட்டார் --- தரமாட்டார்;
பொறுத்திலார் = பொறுப்பதும் இல்லாதவர்;
ஓடிச் சிலநாள் ஒளிந்தார்போல் = சிலநாள் ஓடி ஒளிந்துகொண்டவர்போல் பாவித்துக்கொண்டு;
பின்வந்து = பிறகு தோன்றி;
நாடினார்் நண்பர் பலர = பழையபடி நட்பு பாராட்டியவர் அல்லது நட்பினர் ஆனவர் பலர் ஆவார்.

கருத்துரை: பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை; நட்பின்காரணமாக மறுத்துரைக்கவும் முடியவில்லை; இந்நிலையில் தற்காலிகமாக ஒளிந்திருந்துவிட்டு மீண்டும் தோன்றும் அருமைமிக்க நண்பர் பலர்.


நலமே நலமறிய ஆவலாய் உள்ளேம்
புலமே பெயர்ந்துவாழ் பொன்னாம் -- குலம்வளர்
நன்னாட்டில் நீங்களும் நற்றமிழ் மக்களும்
எந்நலமும் ஏற்றுவாழ் வீர்.

இன்னிசை வெண்பா

வெங்கா அவர்கள் விரைந்திங்கு வந்துடன்
தங்கள் இருப்பிடத்தில் தானியங்கள் உண்பொருள்
எண்ணெய் இவற்றுக்கே இட்டவிலை செப்பிடுக
உண்மை அறிய உலகு.


இவற்றை அலகிட்டு விளக்குக.

மேலும் முதல் பாட்டில் மூன்றாம் வரியில் "நன்னாட்டில்" என்ற சீரை "நன்னிலத்தில்" என்று மாற்றுவதால் பொருள் வேறுபடுமா , யாது நன்மை என்பதையும் சொல்லுங்கள்.



கருத்துகள் இல்லை: