சனி, 13 ஜனவரி, 2018

காரணப் பெயர்களும் இடுகுறிகளும்



ஒரு புதிய  பொருளுக்குக் பெயர் வைக்கவேண்டும். பெயர் வைக்கவில்லை என்றால் அதைப்பற்றின எல்லா விவரங்களையும் கேட்போனிடம் முறையாகத் தெரிவித்தாலும்  அவனுக்குப் புரிகிறதோ என்னவோ? புரியவில்லை என்பானாகில் சொல்வோனாகிய என்பாடு தொல்லையாகிவிடும். அந்தப் புதிய பொருளைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு இந்தப் பொருளைப் பார்!  இக் கணத்திலிருந்து  இதற்கு:  “ நாகாய்”  என்று பெயரிட்டு உள்ளேன்;  நான் நாகாய் என்று சொல்லும்போதெல்லாம் நீ இதைத்தான் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.  வேறுபேச்சுக்கே இடமில்லை என்றேன் எனின், கேட்போன் வேறு சிந்தனைகள் ஏதும் செய்யவேண்டியதில்லை. அவனுடைய வேலை எல்லாம் நான் நாகாய் என்று குறிக்கும்போதெல்லாம் அவன் அப்பொருளை நினைக்க வேண்டியதுதான். 

 எந்தமொழி, என்ன அடிச்சொல், என்ன அமைப்பு, என்ன என்ன என்ன என்று வாய்திறக்கவே  வழியின்றி எல்லாம் அடைக்கப்பட்டுவிடுகிறது.  அவனுடைய நாக்கு காயும்வரை கத்தினாலும் அவனுக்கு வேறு விவரங்கள் எதையும் தெரிவிக்க மாட்டேன் என்ற உறுதியுடன் தான் நான் அப்பெயரை அப்பொருளுக்கு இட்டேன். அது என் உறுதி; அவனுக்கு அறியும் பங்கு இல்லை.  அவன் வேலை அப்பொருளை நினைக்க வேண்டியதுதான்; இன்றேல் மடியவேண்டியதுதான். 

இப்படி இடப்பட்ட பெயர்களை இடுகுறி எனலாம்.  சில இடுகுறிகளுக்கு ஏன் அப்பெயர் இடப்பட்டன என்பதை அறிந்தோர் ஒருகாலத்தில் இருந்திருப்பர்.  அவர்கள் அவற்றை எழுதி வைக்கவில்லை யாகையால், நாம் எதையும் அறிய முடியவில்லை.  ஆய்வு செய்யலாம்.   செய்தும் அறிய இயலாதவற்றை, “ காரணம் அறியப்படாதவை” என்று சொல்லிவிட்டுப் பயன்படுத்தவேண்டியதுதான். 

அவையும் இடுகுறிகள் தாம்.  அறவே அறிய முடியாதவற்றோடு இத்தகையவையும் சேர்ந்து நம்மை மகிழ்விக்கின்றன.

காரணம்  அறிந்து பயன்படுத்தினாலும் அறியாமல் பயன்படுத்தினாலும் பொழுதுபோய்விட்டாலும் அந்தப் பொருள் அதுவாகவே இருக்கிறது.  பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதிய பொருள்களுக்கு எப்படிப் பெயரிடுவது என்ற திறமையைப் பெறுவதற்குச் சொல்லறிவும் பொருளறிவும் பயன்படக்கூடுமாகையால்,  சொல்லமைப்புகளை அறிவது நன்மை பயக்கும். சொல்லின் பொருளை அறிந்து அதைப் பயன்படுத்தினால் நம் கருத்துக்களைச் சிறப்பாக வெளிப்படுத்தவும் இத்தகைய அறிவு உதவக்கூடும். சொற்பொருளாய்வு  ஏதேனும் புதிய கதைகளைக் கட்டி விடுவதற்கும் பயன்படக்கூடும். ஆரியர் படையெடுப்பு போன்ற கதைகளைப் பாருங்கள். 

இன்னும் பல நன்மைகள் இருக்கலாம். அவ்வப்போது புதிய நன்மைகளைக் கண்டவிடத்து மகிழ்க. ஒருவனை ஒரு சொல்லால் ஏசினால் ஏசினவனின் உள்ளக்கிடக்கை எத்தகையதாய் இருந்தது என்று நீதிமன்றங்கள் அறிந்துகொண்டு திறமிக்கத் தீர்ப்புகளை வழங்கச் சொல்லாய்வு உதவக்கூடும்.
சொல்லை அமைக்கும்போது சிற்பி செதுக்குவதுபோல் சொற்களில் நாத்தடை கூட்டும் எழுத்துக்களை விலக்கி உருப்படுத்துதல்  ஒரு திறமிக்க்க் கொள்கையே எனலாம்.  

இதற்கு நான் காட்டும் உதாரணங்கள்:

கெடுதல் பெரும்பாலும் செய்யும் ஒரு கோளுக்குப் பெயரிட:
கேடு > கேடு+து > கேடுது >  கேது.
( கேடு உடையது ).

இங்கு டு ஒரு தடைபோல் ஒலிப்பதால்,  டுகரத்தைக் களைதல்.  இதனால் சொல் நலம் அடைந்தது என்றே சொல்லலாம்.   சொற் காரணம் அறிய இயலாமற் போவது ஒரு தடையாகவில்லை.

பீடு > பீடு+ மன்னன் >  பீடுமன் > பீமன் > வீமன்.
பெருமைக்குரிய மன்ன்ன் என்று பொருள்படுவது. டுகரம் விலக்கல். மன்னன் என்பதை மன் என்று வெட்டிப் பொருத்துதல். இதனாலும் சொல்லுக்கு  நன்மையே விளைந்தது.

இராகு:
இருள் <  இர்.
இர்+  ஆகு = இராகு.
மூலத்திலிருந்து புனைந்ததால் பலராலும் கண்டுபிடிக்க இயலாமை.

தெருள் > தெருட்டு > தெருட்டம் > திருஷ்டம். (தெரிதல் ).
தெ என்பது தி என்று மாற்றம் பெற்றது. டகர ஒற்றுக்கு ஒரு ஷ் இடப்பட்டது.

கண்டு மகிழ்வீர்.
  


கருத்துகள் இல்லை: