செவ்வாய், 25 அக்டோபர், 2016

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே!

இனிதான தீபஓளிப் பண்டிகையே
இன்புதரும் பலகாரம் பலவகையே!
கனிவாகப் பெரியோர்முன் பிள்ளைகளும்
களிப்புடனே ஓடியாடி விளையாடும்.

தனியாக இருப்போர்க்கும் பெருமகிழ்வே
தமிழாலே தெய்வத்தை வாழ்த்திடுவீர்
பனியோடும் பகலோனைக் கண்டுவிடில்
பாரினிலே அதுபோலப் பயன்பெறுவீர்.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே
அகிலமெலாம் தீவினையின்  நீங்கிடுக!
மனையாளும் மக்களுடன் மகிழ்நனுடன்
மனம்போலே வாழ்வுபெறும் மங்கலமே

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மரணமும் உடல் விறைப்பும்

ஒரு மனிதனோ அன்றி விலங்கோ இறந்து இயல்பான இயற்கைச் சூழ் நிலைகளில் ஏறத்தாழ நான்கு மணி நேரத்துக்குள் உடல் விறைப்பு ஏற்படுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனை ரிகோர் மார்ட்டிஸ்
 என்று  கூறுவர். பின்பு நேரம் செல்லச் செல்ல, அவ் வுடல் தளர்ந்து, பின்
அழுகிவிடத் தொடங்குகிறது.

இந்த இலத்தீன் தொடர்,மருத்துவத் துறையில் இறப்பு ஆய்வில் பயன்படுகிறது.

ரிக்கோர் மார்ட்டிஸ்:      

இறுகு  >  இறுகு ஊர் >  றுகூர்  >  rigor.


மரி தீர்  >   mortis

மரித்தல்  தீர்ந்ததும்  இறுகுதல்  ஊர்ந்தது .


ரகர  றகர  முதலாய சொற்கள் தம் இகர உகர  முதலெழுத்தை இழப்பவை .

இங்ஙனம் தமிழ்  இலத்தீனுக்குச் சொற்கொடை வழங்கியுள்ளது.

மரித்தல்  மடிதல்  என்பதன் திரிபு . இது முன் தந்த விளக்கம்.

மரணமும்  உடல்  விறைப்பும்

சனி, 22 அக்டோபர், 2016

சொல்: புரட்டாசி

பழைய நலமற்ற நிலைமைகளை மாற்றி, புதிய பற்றுக்கோட்டினைத்
தருவது புரட்டாசி  ஆகும்.

புரட்டிப் போடுவது என்ற பொருளில்  "புரட்டு"  என்ற சொல் வருகிறது.
புரட்டுவது  எனில் முழுதும் மாற்றிவைப்பது.

ஆசு என்பது பற்றுக்கோடு; ஆதரவு; சார்பு தருதல்.

இரண்டு சொற்களும் சேர்ந்து புரட்டாசி ஆயிற்று.  இறுதி இகரம்
விகுதியாகும்.

சகரத்துக்குத் தகரம் போலி யாதலின், புரட்டாதி எனவும் படும்.

இம்மாதம் விரத மாதமும்  ஆகும்.   விரதத்தினால் தீமைகள் விலகி நன்மை
உருவாகும்  என்பதும் மக்கள் நம்பிக்கை,

சொல்:  புரட்டாசி 

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சாறாயம் and arrack.


சாராயம் என்ற சொல்லை ஆய்ந்து முன் எழுதியுள்ளேன். எனினும்
அதற்குரிய இடுகையை இங்குக் காண இயலவில்லை.

அதை மீண்டும் பதிவு செய்வோம்.

சாராயம் என்பது உண்மையில் சாறாயம் ஆகும். பேச்சு வழக்குச்
சொல்லாகிய இதனை எழுத்தால் வரைந்தவர். றா என்ற எழுத்துக்குப்
பதிலாக ரா என்பதை இட்டு எழுதியதே இதில் கோளாறு ஆகும்.

என்றாலும், சார் என்பதிலிருந்தே சாறு என்ற சொல் தோன்றிற்று. ஒரு
காயைச் சார்ந்துள்ளதே அதன் சாறு ஆகும்.

ஆயம் என்பது ஆயது, ஆனது என்று பொருள்படும் ஒரு  பின்னொட்டு
ஆகும்.

சாறாயம் பல பொருள்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அரிசியிலிருந்து
எடுக்கப்படுவது உண்டு.

அராக் என்பதும் அர் : அரிசி;  ஆக் : ஆக்கு என்ற இரு சொற்களின்
சிதைவே ஆகும். இத்  தேறல்  பின் பிற பொருள்களினின்றும்   Molasses பெறப்பட்டது. இச்  சொல்லைப்
புனைந்தோர் திறமைசாலிகள்   ஆவார்.


சாற்றாயம் என்று வருதல் வேண்டுமன்றோ எனின், சொல்லமைப்பில்
இங்ஙனம் வருதல் கட்டாயமில்லை, இது சொற்கள் பல ஆய்ந்தபின்
அடைந்த தெளிவு ஆகும்.  அன்றியும் இடைக்குறை றகர ஒற்று எனினும்
ஆம்.

சாராயம் என்பது இவ்வாதத்தை ஒருவாறு போக்குவது ஆகும்.




புதன், 19 அக்டோபர், 2016

சாரணர் சொல்லமைப்பு

சாரணர்  என்பது நன்கு அமைந்த நற்றமிழ்ச் சொல்.

சார்தல் என்பதனடிப் பிறந்த இச்சொல், இவர்கள் ஒரு இயக்கத்தையோ, தலைவனையோ, ஒரு கூட்டத்தையோ சார்ந்திருப்போர் என்பதைத் தெளியக்காட்டுகிறது.

அணர் என்பது, பொருந்தி நிற்போர் என்பதைத் தெரிவிக்கிறது.

அண் + அர் =  அணர்

அண் > அணவுதல்,
அண் >அண்டுதல்.
அண் > அண்முதல் 
முதலிய சொற்களின் பொருளைக் காண்க.

சார்ந்து அணவுவோர்,  சார்ந்து அண்டி வினைசெய்வோர் என்பது
பொருளாம்.

மணிமேகலையில்  "நக்க சாரணர்  நயமிலர் "  என்ற தொடர்,   கள்ளும்  மனித ஊனும் உண்ணும் தீவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.


நகுதல் பல பொருளொரு சொல்.  சிரித்தல், ஒளிவீசுதல், மிக்க‌
மகிழ்வுடன் பாவச் செயல்களில் ஈடுபடுதலையும் குறிக்கும்.

நகு > நக்க. (பெயரெச்சம்)  தகு > தக்க  என்பதுபோல .

நக்குதல் ( நாவால் நக்குதல் என்பது வேறு)

பள்ளிகளில் சாரணர் இயக்கம்  scouts movement  உள்ளது.  நீங்கள் அறிந்தது இதுவாகும்.

நல்ல தமிழ்ச் சொல் இதுவாம்.

அணம்  விகுதி  பெற்ற  சொற்கள் ,   விகுதியின்  அமைப்பும்  பொருளும்::-

https://sivamaalaa.blogspot.sg/2015/09/suffix-anam.html


மற்றும் :  https://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_52.html  வாரணம் .

செவ்வாய், 18 அக்டோபர், 2016

திரிந்த பின் தம் வழி ஏகும் சொற்கள்

பேச்சு வழக்குத் திரிபுகளையும் எழுத்தில் உள்ள அவற்றுக்கான சொல் வடிவங்களையும் ஒப்பீடு செய்து, அவற்றைப் போலி என்று சொல்வதில்லை. பேச்சு வழக்கில் வருவனவற்றை இழிசனர் வழக்கு
என்று ஒதுக்கிவந்துள்ளனர்.

எழுத்துமொழியில் ஒரு கருத்தைக் குறிக்கச் சரியான சொல்லை அறிய இயலாமல் ஒருவரிருக்க, அவரே பேச்சில் அதைத் தொல்லை ஏதுமின்றி உரிய சொல்லைப் பயன்படுத்திக் கருத்தை அறிவித்துவிடுதலையும் ஊன்றிக் கவனித்தறியலாம்.

ஓவர்சியர் என்ற ஆங்கிலத்துக்குப் படித்தவர்கள் உரிய தமிழை மொழிபெயர்த்துக் கூற கடின முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, பேச்சுத் தமிழ் அதைக் கங்காணி என்று எளிதில் கூறிவிட்டது. பண்டிதன்மார் பின் அதனைக் கண்காணி என்று திருத்திக்கொண்டு ஏற்றுக்கொண்டனர். இப்படிப்பட்ட திருத்தங்கள் தமிழுக்குப் பெரிய‌ ஊதியம் எதையும் கொண்டுவந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை.

பிடித்து என்ற எச்சம், பேச்சில் பிடிச்சு என்றே இதுவரை வழங்கிவருகிறது.  மலையாளமும் பிடிச்சு என்றே வழங்குகிறது.  ஆனால்
த ‍ > ச பரிமாற்றம் எழுத்திலும் உள்ளது.

இன்னும், டகரத்துக்கு ரகரம் வருவது குறைவாகவே உணரப்படுகின்றது.
பிடித்திடுவாள் என்பது பிடிச்சிருவாள் என்று வருகையில் டு> ரு திரிபு
கண்டுகொள்ளப்படாலும் போய்விடும்.

சில உணவுகளை, அல்லது ஊணையே கொஞ்சம் விலக்கிவைப்பது
உண்மையில் விடதம் ஆகும். டு> ரு போல. ட> ர ஆகி, விடதம்
விரதம் ஆனது பலர் அறியார்.

விடு+ அது + அம் = விடதம்.
விடதம் > விரதம்.

மடிதல் சொல்லில் மடி > மரி என்று திரிதலை, புலவர் சிலர் அறிந்துள்ளனர்.  இங்கு டகர ரகரப் பரிமாற்றம்.

விடு >  விடி  >  விரி >  விரித்தல் .  விரிதல்  

ஒன்றானது விடுபட்டு  விரியும்.

சில வேளைகளில்  டகரம் ரகரமாய் மாறிப், பொருளும் சற்று வேறு நிலைக்குத் தாவிவிடும். இடும் பொருள், இருக்கும்.  இட்ட இடத்தில்
இருக்கும். ஒன்று செயல், மற்றொன்று செயலின் விளைவு.  ஆக.
இடு இரு என்பதன் முன் வடிவம் என்று அறிக.

மரி என்பது மடி என்பதன் திரிபு எனினும், மடிதல் மரிதல் என்று ஆகாது.
மரித்தல் என்று த‌கரம் இரட்டித்தே வரும். மரி என்பதனோடு அணம் விகுதி சேர்ந்து, மரணம்  ஆவ‌துபோல், மடி > மடணம் ஆவதில்லை.
சொற்கள் திரிந்தபின் தம் வழிப்  போய்விடுகின்றன. என்பது உணர்க.


புலவு  என்பது இறைச்சி.  எனினும் புலவர் என்பது பெரும்பாலும் இறைச்சி உண்பவரைக் குறிப்பதில்லை. ஒரு விகுதி மட்டும்தானே
மாற்றம். ஏன் இத்துணை பொருள்மாற்றம்?

புலையர் என்போரும் புலவு உண்டவர் என்பர், எனினும் புலவு உண்போர்
பலர், அவர்கள் எல்லோரும் புலையரல்லர். பொருள் பொருத்தமாக‌
இல்லை. இவர்கள் முன் காலத்தில் ஐயர்கள் போலும் சில  மந்திரங்கள் சொல்லி, இறைச்சி முதலியன இட்டுப் படைத்துச் சடங்குகள் செயதனர்
என்று தெரிகிறது.  ஆகவே சிறிய ஐயர்கள். புன்மை = சிறியது.
புல்+ஐயர் >  புல்லையர் > புலையர் (இடைக்குறை)  புல்லையா என்றபெயர் உள்ளோரும் உளர். இவர்கள் வரலாறு ஆய்வுக்குரித்து.








  

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தாமதம்

தாமதம் என்ற சொல் பற்றிப் பத்தாண்டுகட்குமுன்னரே எழுதியிருந்தது
இன்னும் நினைவிலுள்ளது. ஆனால் அது இங்கு கிடைக்கவில்லை. எழுதி வெளியிடும்போதே அதை அழித்துவிடும் ஒட்டு மென்பொருள் கள்ளத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபடியினால், அது அழிந்திருக்கக் கூடும்.

இப்போது அதை மீண்டும் காண்போம்.

செய்ய ஒதுக்கப்படும் நேரத்தை மதிப்பிடும்போது, உரிய அளவிலான நேரத்தை ஒதுக்காமல் தாழ்த்தி மதிப்பிட்டு, குறைந்த நேரத்தையே ஒதுக்குவோமாயின், வேலையைத் தொடங்கிப் பார்க்குங்கால், நேரம்
போதாமையினால், ஒரு தாமதம் ஏற்படுகிறது.  நாலு நாள் வேலைக்கு
இரண்டு நாள் ஒதுக்கினால், இரண்டு நாட்களில் வேலைமுடியாமல்
தாமதம் ஏற்படுகிறது.

இதுவே தாழ்மதித்தல் ஆகும்.  இதிலுள்ள ழகர ஒற்று மறைந்து   தாமதித்தல்
தாமதம் என்றானது.   தாழ் மதி >  தாமதி >  தாமதி + அம்  =  தாமதம் .

நேர அளவீடும்  வேலைச் செயல் அளவீடும்  ஒத்து இயலாமைதான்  தாமதம் என்பது.  இங்கு மதி என்பது அளவிடுதல் குறித்தது.

ஆங்கிலத்தில்  டிலே என்பதற்கு என்ன பொருள் ?  டி  என்பதென்ன?  லே
என்பதென்ன ?  டி =  கீழே?   லே = வைத்தல் ?  இச்சொல்லையும்  ஆய்ந்து
அறிதல்  நலம்.

தாழ  என்பதையே  "டி " -யும் குறிக்கும்.

இதுபின் எவ்வகையான காலத் தாழ்த்தையும் குறிக்கலாயிற்று. 

  



சனி, 15 அக்டோபர், 2016

கடாட்சம்

மனிதனாய்ப் பிறந்தவன் தன் வாணாளில் பல துன்பங்களை அடைகிறான். துன்பம் தாங்கொணாத போது, அவன் இறைவனைப் பலகாலும் வேண்டுகின்றான். இறைவன் உடனே வந்து அருள்புரிதல்
கதைகளில்கூட பெரும்பாலும் வருவதில்லை. இறுதியிலேயே வருகிறான்; துன்பத்தை நீக்கி அருள்கிறான்.

ஒருவர் மலையினின்று விழப்போகுங்காலைதான் அவன் வந்தான்;
இன்னொருவர் கண்ணைப் பெயர்த்து அவன் கண்ணிலப்பினபின் தான்
வந்தான்! இனி வாழேன்; இனித் தாளேன் என்று அலறியபின் தான் வந்து
அஞ்சேல் என்று அருள்புரிந்தான்.

கடைசியில் ஆள்வோன் அவன்!

அது கடாட்சம் எனப்பட்டது.

கடை +  ஆள் + சு +  அம்  =  கடாட்சம்   ஆனது.

கடை  என்பதன்  ஐகாரம் கெட்டது    கட  என்று நின்றது.

எவ்வளவு  தொலைவிலும் கடந்து வருவோன் ;  மலைகளும் காடுகளும்
அவனுக்கு   ஒரு பொருட்டல்ல . கட  என்பதற்கு இப்படிப் பொருள்கூறினும்
அமையும்.

கட  + ஆள் + சு + அம் =  கடாட்சம் . கடந்தும் வந்தாள்வோன் தந்த அருள் .

கடாட்சம் தமிழ்.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

சிகிச்சை


புகழ்ப்பெற்ற முதலமைச்சர் அம்மா அவர்களின் சிகிச்சை பற்றிப் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  காணொளிப் படங்களும்
வெளிவந்துள்ளன.  இதுகாலை,சிகிச்சை என்ற சொல்லைப் பற்றி எழுதியதைத் தேடிப் பார்த்தேன். எழுதியது அழிக்கப்பட்டுவிட வில்லை. இன்னும் உள்ளது.

அதனை இங்குக் காணலாம்.

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_14.html

கள்ள ஊடுருவிகளால் அழிபடாதிருக்கும் அதைப் படித்து இன்புறுங்கள்


வியாழன், 13 அக்டோபர், 2016

பசுமதி மணமுள்ள அரிசி

பசுமதி என்ற  சொல்லை ஆய்வோம்.

இது நல்ல மணமுள்ள அரிசி வகையாதலால் இப்பெயர் பெற்றது என்று
எண்ணுகின்றனர். வாசம் என்ற சொல்லிலிருந்து இது பிறந்ததென்பர்
வாசித்தல் நீண்டு செல்லும் வழி என்று பொருள்படும் வாய் (வாய்க்கால்)
என்பதிலிருந்து அமைந்தது. இது சமஸ்கிருதத்திலும் சென்று தங்கியுள்ள படியால், அம்மொழி அகரவரிசையை மட்டும் தேடிப்பார்த்தவர் அதைச் சமஸ்கிருதம் என்று முடிவுசெய்வது இயல்பு.   வாசம்  அல்லது மணம் ( பலவும் ) என்பவை புறப்பட்ட இடத்திலிருந்து  நீண்டு  பரவும் தன்மை உடையவை தான்.

வாய் >  வாயித்தல்
வாயி  > வாசி > வாசித்தல்.

ஆனால் வாசம் என்ற சொல்லினின்று வாசமதி என்று அமைந்து பின்பு அது வசுமதி ஆகி பின்னர் பசுமதி ‍> பஸ்மதி என்றானது என்பது "இருக்கலாம்" என்று சொல்லத்தக்கது என்றாலும், அது பசுமை+ மதி என்ற இரு சொற்களின் புனைவு என்பதே பொருத்தம் என்று முடிக்கலாம்.

பசுமையானது, புதியது, வாசமுள்ளது.  பசுமை மாறிய பொருட்களே
தீய நாற்றமெடுப்பவை. ஆகையால் பசுமை என்பது  வாசம் என்பதையும் உள்ளடக்கி, புதிது என்றும் பொருள்படுவது.மதி என்பது எங்கும் விரும்பப்படுவது என்றும் மதிக்கப்படுவது என்றும் பொருள்படும்.

எனவே,

பசுமை+ மதி = பசுமதி என்பதே உண்மையான சொல்லமைப்பு ஆகும்,

இது வட இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய இடங்களில் விளைந்தாலும்,
இவர்கள் இதை விற்பனைப் பொருட்டு விளைவிப்பவர்கள். அரிசி இவர்களின்  நிலைத்த உணவன்று. கோதுமையே இவர்கள் உணவு.
இது அங்கிருந்த தமிழர்களால் புகுத்தப்பட்டது.

முருங்கைக்காய்  வேம்பு முதலியவை மலாய்க்காரர்கள் அறிந்துகொண்டது போன்ற நிலையே.  ஒரு மலாய் நண்பர் முருங்கை மரத்தை வெட்டு என்கிறார்.  அதைப்  பற்றிய நன்மைகளைப்  பத்து நிமிடம் யானெடுத்துக் கூறின பின்
இப்போது முருங்கைச் சாறு சாப்பிடுகிறார்.    ( rebus  பண்ணுகிறார். )   இது என் வட்டாரத்தில் பரவி , ஒரு நாள் நான்  வீடு  சென்று சேர்ந்த காலை  முன்புறத்திருந்த  மரத்திலிருந்து சில கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்கள்.  நல்லன பரவும்.

பசுமதி  -   நெல் விளைத்த தமிழர் இட்ட பெயராக வேண்டும். பசுமை மணம்  பரப்பும்  நெல் வகை.

புதன், 12 அக்டோபர், 2016

சளிபிடித்து மூன்றுநாள்

மூக்குச் சளிபிடித்து மூன்றுநாள் யானிளைக்க‌
நாக்கும் சுவையுணவு நாணிற்றே ‍‍‍=== பார்க்குமோர்
தேக்கினைப் போலும் திடத்தினர் என்றாலும்
ஊக்கம் இழப்பரே உண்டு.

திங்கள், 10 அக்டோபர், 2016

பொத்தகம், book

புத்தகம் என்ற சொல்லுக்கு நேரானதாக , ஆங்கிலத்தில் "புக்" எனப்படுகிறது.

புத்தகம் என்பதினும் பொத்தகம் என்பதே சரியானது என்று தமிழ் ஆர்வலர் கூறுவர்.

பொதி + அகம் ‍=  பொத்தகம்  எனின் ஏடுகள் ஒன்றாக சேர்க்கப்பட்ட கட்டு என்று பொருளாகும்.  பொதி என்பது பொதிதல். உள் வைத்துக்
கட்டுதல்.  இதில் ஒரு இகரம்  கெட்டது;  பொதி < பொத்+ இ.
பொதி என்பது கட்டுச்சோறு என்றும்  பொருள்படும்.

பொத் > பொது.  ( பலர் ஒன்று சேர்தல், சேர்ந்திருத்தல்).
பொத் > பொதி.  (கட்டு)

பொத் > பொத்+ அகம் = பொத்தகம்,  ஏட்டுக்கட்டு. கட்டேடு.  கட்டோலை.

பொத்துதல் : இது கட்டுதல் என்றும் பொருள்.

பொத் என்பது ஒரு அடியன்று . விளக்கும்பொருட்டு   , இவ்வடிவு
காட்டப்பட்டது.

புதை என்பது பேச்சில் பொ தை   என்று வடிவு  கொள்ளும்.   புதைப்பதும்  ஒரு துளை  செய்து.  மண்கட்டுக்குள் ஒன்றை இடுவது ஆகும்.   இங்கு வரும் கட்டுப் பொருளைக்  கவனிக்கவும் .

பொத்துதல் = கட்டுதல்.
பொத்து + அகம்  எனினும் அதுவே ஆகும்.   = பொத்தகம் .

புத்தகம் எனின் புதிய அகம்  ஆகும்!!

பொத்தகம்  என்பதைச் சமஸ்கிருதம் புஸ்தகம்  ஆக்கிற்று.  அது பின் தமிழில்
புத்தகம்  ஆனது.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சுட்டடிச் சொற்கள் : உ முதல் துதித்தல் வரை

உகரம் முன்னிருப்பதைக் குறிக்கிறது என்பதைப் பல இடுகைகளில் அவ்வப்போது சுட்டிக் காட்டியுள்ளோம்.

உவன் :  முன் இருப்பவன்.
உன்:   முன் இருப்போனுக்கு உரிய.  (எடுத்துக்காட்டு: உன் புத்தகம். உன் வீடு என்பன ).
உது:  முன் இருப்பது.

உதி:
உது என்ற முன் இருப்பது என்னும் க‌ருத்தினின்று உதி என்ற சொல் தோன்றிற்று என்பதைக் கூர்ந்துணர்க. உதி > உதித்தல்

உது > உதை:  கால் முன் சென்று ( பிறிது ஒன்றை அல்லது ஒருவனைத் )தொடுதல்.

உ > உய் > உய்தல்.    முன் செல்லுதல்  முன்னேறுதல்.
உ > உது > உந்துதல்.   முன்செலவுறுத்துதல்.

உ > உது > உது + அ + அம் =  உதயம்.  முன் தோன்றி அங்கு
செல்லுதல்.  அ = அங்கு. யகரம் : உடம்படுமெய்.  (  எழுதல் .)

உதையம் > உதயம் எனினுமாம். ஐகாரக் குறுக்கம்.

உது >  நுது > நுதல்.  முன்னிருக்கும் நெற்றி.

உயிரின் முன்  ஒரு நகர மெய் தோன்றிற்று.

நுது > நுதி : புகழ்தல்.

--

நுது > நுதல் > நுதலுதல் ,  ஏதேனும் சொல்லும்போது ஒரு கருத்தை
முன் வைத்தல். விடையம் ‍ > விடயம் > விஷயம். விடுக்கும் செய்தி.
நுதலுதல் : விடயம் உரைத்தல்.

நுது > நுந்து > நுந்தல்.  கொட்டுதல், முன் இறைத்தல், பொழிதல்.
 (உது > உந்தல் போல).

உ> நு > நுவலல்  : சொல்லுதல். முன்னாக மொழிதல்.

நுவலம் > நுவனம்:  நூல்.     ஒ நோ: கவல் > கவலம்> கவனம்.

உ > து >  துப்பு:  முன் உமிழும் எச்சில்.

உ > து > துப்பு: முன்மை உடையதாகிய உணவு.
உ > து > தூவு:  முன் தெளித்தல்.

உ >  து  > துய் .  துய்த்தல் .  முன் சென்று அடைந்து அதில்  மகிழ்தல்

உ> து> துதி.   முன்வைத்துப் புகழ்தல்.  துதி > ஸ்துதி.

துதிக்கை .

உ >  ஊ

ஊகம் .  யூகம்   அறியாததை மனத்தால் எண்ணி அறிவது.  நேரடியாய் அறியுமுன்  எண்ணி அறிவது.


ஊங்கு:  விட.

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை. (குறள்.)


உ > ஊ > தூ > தூவு   தூவுதல்.

தூவு > தூவம் > தூபம் :  பொடி தூவிப் புகை கூட்டுதல்.   வ> ப .

எல்லாம் விளக்க நேரம் போதாது. இவற்றினின்று பலவற்றை நீங்கள்
தெரிந்துகொள்ளலாம்.

இவற்றைத் தமிழ்ப்புலவன்மாரும் கூறியுள்ளனர்.

ஆய்ந்து  விரித்துணர்க .



சனி, 8 அக்டோபர், 2016

மதியும் அறிவும்

மதி என்பது அறிவு குறிக்கும் தமிழ்ச்சொல்.  இதற்குரிய வினைச்சொல்
மதித்தல் என்பது. மதித்தல் என்ற வினைச்சொல் தமிழிலிருப்பதனால்
மதி என்பது தமிழ்தான். அறிவு என்பது அறிந்துகொள்ளும் செயல் அல்லது திறன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறளில் உள்ள ஒரு சிறந்த பா இதுவாகும்.

மதியும் அறிவும்  இப்போது ஒப்பாக வழங்கப் படுவதுண்டு;   இது காலப் போக்கில் பொருளிழப்பு  ஆகும்.

முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொல்லி அதை ஒருவன்
நம்பினால் அவனுக்கு அறிதிறன் தேவைப்படுகிறது என்றுதான் கொள்ளவேண்டும். ஒருகாலை இழந்துவிட்ட  முயலானால்   அதுவும்
முயல்தான்;  அதை மாற்றுத் திறனுடை முயல் எனலாமா ?

மதி என்பது ஒப்பிட்டும் அளவிட்டும்  அறியும்  மேலான  திறனைக் குறிக்கிறது.
ஆகவே  அறிவு  மதி ஆகிய சொற்களிடையே  ஒரு சிறு வேறுபாடு உள்ளது.
நிலவு  காலத்தை அளவிடுவதால்  அதற்கு  மதி  என்பது பெயராயிற்று .


மதியைக் கொண்டு அளவிட்ட காலம்  மாதம் எனப்பட்டது. மதி +  அம் = மாதம்.  இது முதனிலை நீண்டு விகுதி பெற்று, இடைநின்ற இகரம் கெட்ட பெயர்.  இதைப் போன்ற இன்னொரு சொல் படி+ அம் =  பாடம் ஆகும்,

சுடு+ அம் = சூடம்  என்ற சொல்லில்  முதனிலை நீண்டு உகரம் கெட்டு விகுதி பெற்றது. அறு >  ஆறு  என்பதில்  முதனிலை நீண்டு பெயரானது,  ஏனை விகாரங்கள் யாவையும் இல்லை .

இவற்றை நன்கு மனத்திலிருத்திக் கொள்க.

நுதி  என்பதும்  அறிவின் கூர்மை குறிக்கும் பழஞ் சொல்லே.




வியாழன், 6 அக்டோபர், 2016

காய்ச்சலென்றால்

காய்ச்சலெனில்  மாத்திரையைப் போட்டுக் கொள்வாய்
கடைகளிலே பலவிதங்கள் கிட்டும் கேட்பாய்!
நாயுறக்கம் கொண்டாலும் தேக நன்மை
நாடுவது கடனன்றோ நாளும் நாளும்.
போய்க்கிடந்து மருந்துண்ண மாட்டே  னென்று
புலம்புவதாற் பயனுண்டோ இன்றேல் சென்றே
நோயகற்று மருத்துவரின் நுட்ப  ஆய்வில்
நுவல்மருந்து பெற்றருந்தி நூறு  காண்பாய் .



நுறு :  நூறாண்டு .







  

புதன், 5 அக்டோபர், 2016

இறந்துகொண் டிருப்பாரை

இறந்துகொண் டிருப்பாரை இறவாமல் பிழைப்பிக்கப்
ப‌றந்துவானில் கோள்தொட்ட பயன்மாந்தன் அறிந்திலனோ?


அறிந்திருந்தால் அன்புடையார் அவ்வுலகு செல்கையிலே
புரிந்துணராத் தான்மாய்தல் புரிவானின் வீண்மையுமேன்?

வீண்மைபல‌ தாம்விலக்கி வெற்றிகண்ட அறிவியலார்
காண்மரணம் பொய்யாக்கிக் கதிஉயர்த்தல் விளையாரோ?

விளைத்தபல விந்தைகளில் நிலைத்தியலா மனிதவுயிர்
பிழைத்திருக்கும் விந்தைதனை  இழைத்துயர்ந்து சிறவாரோ ?


தலைவன் இறக்கத் தொண்டன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் .
மரணம் [இல்லாப்  பெரு வாழ்வினை அறிவியலார் தரமுடியுமானால் 
பாவம், இத்தகு   தொண்டர்களை எல்லாம்  காப்பாற்றிவிடலாம் ,  அவர்களின்  தலைவர்களுடன் !!

இதில்  அந்தாதித் தொடை பயன்படுத்தப் பட்டது.

திங்கள், 3 அக்டோபர், 2016

கண்டதோர் கொள்கை

கண்டதோர் கொள்கை ஒன்றே
கருதுமோர் உண்மைக் கொள்கை
என்பதோர் படியில் நின்றே
எனைத்துமே போற்றிக் கொண்டு
மன்பதை அனைத்தும் பின்னே
மடங்காது வருக வென்பான்
ஒன்பதில் ஒன்று நீங்கின்
உன்கழுத் தறுத்தல் நீங்கான்.

தீயினில் விரைந்து  வீயும்
ஆயவை  அனைத்தும் போலே
தீவிரம் அதனில் மாயும்
ஆய்விலர் கருதும் யாவும்.
தாவுறும் அனைத்தும் நன்மை
தாவில  அனைத்தும் புன்மை
மேவின புரட்டிப் போட்ட
மிகைபடு பிழைக்கும் செல்கை .     

தீவிரம்  விலகிச்  செல்வீர்
தீவினை கடன   கற்றல் ;
நாவினில் பிழைத்த  லின்றி
நல்லன கடைக் கொள்    வீ ரே;
தேவினை  அடைந்தோன்  போலும்
பாவனை  புனைதல்  தீதாம் ;
ஓவமே  பலரும்  கூடி
ஒத்திருந் தகலுள்  போற்றல் .


 குறிப்புகள்:

கண்டது:  கண்ணாற்  கண்டதும்  மனத்தாற்  கண்டதும்  ஆகியவை;
அவன் காணாத  கொள்கைகள் பல உலகில் உள என்பது  கருத்து.

ஓர்  கொள்கை:   வினைத்தொகை;   ஓரும்  கொள்கை .  ஓர்தல் :  மூளையில்  தோன்ற   அறிதல் .

ஒன்றே  :   மட்டுமே.

கருதுமோர்   உண்மை:    அவன்  ஏற்கத்தக்க  ஒரே  உண்மை.

என்பதோர்  படி:   பிடிவாதமாகிய  ஒற்றைப் படி.

எனைத்துமே -   எதையாகிலுமே.    பிற  குப்பைகள்  பலவற்றையும் .

தா  :   குற்றம்.

செல்கை  :  போம் வழி .

கடன  கற்றல்:   கடன்  அகற்றல்  =   அகற்றல்  கடன் .

பிழைத்தல் :  பிழை படுதல் .

தேவினை  =  கடவுளை.

ஓவம் :   ஓவியம்.


சனி, 1 அக்டோபர், 2016

வருந்தா நிலமேல் வாழ்விதுவே !

வீட்டின் நாளைத் தலைவர்யார்
விரிந்த கவலை நாம்கொள்ளோம்!
கூட்டில் கிழடும் இறந்திட்டால்
குருவிகள் கவலை கொள்வதில்லை!
நாட்டின் தலைமை நன்பொருளாம்
நாளும் அதையே சிந்தனையாய்
ஏட்டில் பேச்சில் விரித்திடுதல்
இற்றை உலகின் செய்ம்முறையே.

இற்றை இயற்கை நாளையையே
என்றும் கவலை கொள்வதில்லை.
மற்றைப் பொருளில் மனம்செல்ல‌
மனமாய்ப் பொருளும் அதற்கில்லை
இறந்தான் எனவே நாம்கவல‌
எழுந்தான் பகலோன் முனம்போலே!
வரந்தான் கடவுள் தரவில்லை
வருந்தா நிலமேல் வாழ்விதுவே ! 

சட்டாம்பிள்ளை.

சட்டாம்பிள்ளை.

தமிழறிஞர்கள், இச்சொல்லை ஒரு மரூஉ என்று கருதுவர். அதாவது சட்ட நம்பிப் பிள்ளை என்பதே மருவி  சட்டாம்பிள்ளை என்று வந்தது என்பர்.
சட்டநம்பி(ப்பி)ள்ளை  >  சட்டாம்பிள்ளை.    முதலில் இரு பிகரங்களில்
ஒன்று மறைந்து,  பின் சட்டநம் என்பது சட்டாம் என்று திரிந்தது.  தம்பி என்பது தம்பின் என்பதன் கடைக்குறை;  இதேபோல் நம்பி என்பது நம்பின் என்பதன் கடைக்குறை.

சட்டம் + பிள்ளை =  சட்டாம்பிள்ளை;   இதில்  டகரம்  நீண்டது  ( திரிதல் )  என்பதும்  ஆம் .   குளத்தங்கரை  என்பதைக்    குளத்தாங்கரை  என்று நீட்டினாற் போலும் ,

இத்தகு திரிபுகளால்  தமிழ் புதிய சொல்லுருவங்களைப் பெற்றதுடன் வளமும் அடைந்தது என்று கூறவேண்டும். மொழிகள்  திரிந்தமைவுகளே எனல் அறிக.

எந்தச் சொல்லும் திரியாமல் இருக்குமாயின்  சொற்கள் பல்கியிருத்தல் இயலாமை காண்க.  தோன்றல் திரிதல் கெடுதலும்  குறைப்படுதல்களும்  இவ் வளம் உய்த்தன.

நம்பி என்பதன் பெண்பால் வடிவு  நங்கை என்பது. இச் சொற்களில் போதரும்
நம்,  தம் என்பன தம் அடி நாட் பொருளை  நாளடைவில் இழந்தன. போலும்.

சட்டம்  என்பது ஈண்டு  ஒழுங்கு  குறித்தது.  இதன் மற்ற பொருள்களை முன் இடுகைகளில்  குறித்துள்ளோம். அவை :  

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_85.html

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_28.html

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முப்பது தாண்டுமுன்னே


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_2.html

தொடர்ந்து படியுங்கள்:


முப்பது தாண்டுமுன்னே முழுத்தொப்பை வெளியேள்ள‌
அப்பனுக் கப்பன்போலே அசைந்தாடி நடப்பதென்னே!
கப்பலும் ஆடாதன்றோ இப்படிக் கடலின்மீதே!
செப்பினோம் ஐயேநீரே  சேமமே காத்துக்கொள்வீர்.

அளவின்றி உண்ணோம் யாங்கள்

அளவின்றி உண்ணோம் யாங்கள்;
அடிசிலைச்  சமன்செய் துண்போம்;
களவில்லை நெஞ்சில் ஊணைக்
கருதியே வாழ்வ தில்லை;
இளைஞர்கள்  இதைச்சொன்  னாலும்
இவருடல்  எடையால் வீங்கி
அளிகமும் நலமும்  தேய்தல்
அனைவரும் அறிந்த தொன்றாம் .

பருத்தலோ பயனே இல்லை
பருகிடும்  இன்பம்  நீங்க
ஒருத்தரும் விழைவ தில்லை;
உண்மையும் இதுவே தானோ?
திருத்தம் மேற்கொள்வீர் இன்றே
தின்பதில் கொழுப்பு  சீனி
நிறுத்தியே காணின் யாக்கை
நீங்குமோ நலம்சேர்  வாழ்வே 






வீங்கு  வீக்கு !    

புதன், 28 செப்டம்பர், 2016

ற்று > த்து திரிபுகள்

ஆய அற்றம் > ஆய அத்தம் > ஆயத்தம்.
வெறு வேட்டு > வெற்று வேட்டு > வெத்துவேட்டு.

ற்று > த்து திரிபுகள் எண்ணிறந்தன. இவற்றை முன்பு எழுதியுள்ளோம்.
இவை மீண்டும் மீண்டும் எழுந்து காட்சி தருபவை.

சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம். இப்போது ஊர்ப்பெயர்.

ற்ற > த்த திரிபு.
ல > ர திரிபு.  plentiful in Tamil and other languages. includes SEA languages.

சட்டலாட்டம்

சிலர் ஒரு மாதிரியாக நடந்துகொள்வார்கள். எந்த அதிகாரத்திலும் இல்லை.
வெத்துவேட்டு.  ஒரு படைத் தலைவர் ( தளபதி )  போல பிறருக்கு ஆணை இட்டுக்கொண்டும்,  உத்தரவுகள் கொடுத்துக்கொண்டும் உரத்த குரலில் பேசிக்கொண்டும் பிறரை அதட்டிக்கொண்டும் இருப்பார்கள். எப்போதும் அமைதியாகப் பேசிப்பழகும் நீங்கள் இவர்கள் போலும் ஒருவரிடம் மாட்டிக்கொண்டால் திகைத்துப்போவீர்கள். சிலவேளைகளில்
சொன்னபடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவீர்கள்.


இது ஒரு மன நோய் என்று வல்லுநர் கூறுவர்.  அதிகாரம் ஒன்றும் இல்லை  ஆனால் ஏதோ இருப்பதாக ஓர் ஆணித்தரமான மனவுணர்ச்சி.
அது தவறு பொருத்தமற்றது என்று புரிந்துகொள்ளும் திறம் இல்லை. ஆனால் ஆளைப்பார்த்தால் தெரியாது. இயல்பான நிலையில் உள்ள ஒரு
மனிதன் போலவே தோன்றும்.  ஒரு மன நோய் வல்லுநரே இவரை
ஆய்ந்து நோயறிய இயலும்.

மன நோய் வல்லுநர்கள் நடத்திய ஒரு தொடர் சொற்பொழிவில் கலந்துகொண்டு அதன்மூலம் அறிந்தேன்.  பின் இதன் தொடர்பான சில‌
நூல்களிலும் படித்து இந்த அறிவைத் திறப்படுத்திக்கொண்டேன். மிகவும் சுவை தரும் நேரங்களாக இவற்றை அறிவது அமைந்தது.

சோதிடர்கள் அல்லது கணியர் சிலர்  இதனை முன்னமே அறிந்திருந்தனர். அவர்கள் இதைச் சட்டலாட்டம் என்று கூறினர்.  எனவே மனிதரிடையே இத்தகைய நடத்தையும் ஒருவேளை அதற்கான காரணங்களும் சோதிடமணிகளாலும் உணரப்பட்டிருந்தன.  சோதிடத்தின் மூலம் ஒருவர்
சட்டலாட்டம்  உடையவரா என்று அறிந்துவிடலாம். அந்தமாதிரியான நடத்தை உடையவரின் ஒரு வாழ்கணிப்பினை (ஜாதகத்தை ) ப்  படிக்கவும் அந்த நபரை அறியவும் நேர்ந்தது.  ஆகவே இது மேனாட்டு மருத்துவர்கள் மட்டுமே அறிந்த ஒரு மன நோய்  அன்று என்பதை உணர்ந்தேன்.

இப்போது சொல்லைப் பார்ப்போம்.

அடு > சடு >  சட்டம்
 இது சடு+ அம் = சட்டம்.  இங்கு டகரம் இரட்டித்தது.  அம் விகுதி
 பெற்றது.

அடு >  சடு >  சட்டல்.

 இது  சடு+ அல் =  சட்டல். இங்கும் டகரம் இரட்டித்தது.  ஆனால் அல்
விகுதி பெற்றது.

ஆட்டம் என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பொருட் சாயல்களைக் கொண்டுதரும் ஒரு சொல். "  கோயிலுக்கு வந்த பொம்பளை என்ன இந்த ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறாள்"  என்று பேசும்போது.  ஆட்டம் என்பதற்குக் கலைமுறைப் பட்ட ஆட்டம் என்ற‌

பொருள் கொள்ளப்படாது. திரைவானில் மின்னும் நடனமணியின்
கவின்படு ஆட்டம் வேறு, இது வேறு.  இதுவே ஒரு சட்டலாட்டமாகவும் இருக்கலாம்.

கோயிலில் இவள் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனால் ஆட்டம்
இருக்கிறது.

இவள் தன் வாழ்கணிப்பினை வரைந்து ஆய்ந்து பார்த்தாலோ ஒரு மன நோய் மருத்துவரின் ஆய்வுக்கு அவளை உட்படுத்தினாலோ உண்மை அறியலாம்.

கணியர் பெருமக்கள் கண்ட இந்தச் சட்டலாட்டம் என்ற  பதம்  அக்கரவரிசைகளில்  காணமுடியவில்லை.  எல்லா அகர  வரிசைகளிலும்  தேடி முடித்திட இயலவில்லை.  நீங்களும் தேடிப்பாருங்கள்.  கிடைத்தால் எழுதி உதவுங்கள்.

There is a system problem in editing this post.  The cursor starts jumping about.  Will look into this later.  For the moment read cautiously and read correction as necessary.
















சட்ட லாட்டம்

திங்கள், 26 செப்டம்பர், 2016

சட்டமும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அடுதல் என்பது சுடுதல் என்றும் பொருள்தரும். இந்த அடிப்படையில் எழுந்ததே சட்டி என்ற சொல்.  அடு> சடு > சட்டி இதை முன் எழுதியுள்ளோம்.


அகர அல்லது அதன் வருக்கங்கள் முதலாகிய எழுத்துக்கள் சகர அல்லது அதன் வருக்கங்கள் முதலாயினவாய்த் திரியுமென்பதைப்   பழைய இடுகைகளில் அறிந்து தெரியலாம். இதனை  வேறு ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர்.


சட்டம் என்ற சொல்லும் இதன்படி அமைந்தது.  அடு >  அட்டம் > சட்டம் என்று வரும். அடு >  சடு > சட்டம் எனினுமாம்.  இங்கு டகர இரட்டிப்பு நிகழ்கிறது.

சுடுவதுபோல் அல்லது தண்டிப்பதுபோல் சொல்லப்படுவதே சட்டம்.  இப்படி நடந்தால் உன்னை அதற்கேற்ப இப்படித் தண்டிப்பேன் என்று சொல்வது சட்டம்.  தண்டனை ஒன்றும்  சொல்லப்படாமல் இங்ஙனம் ஒழுகுதல் வேண்டுமென்று அதிகாரத் தோரணையில் தரப்படுவதும்  அதுபோன்ற பிறவும் சட்டமென்றே கொள்ளப்படும்.

In common parlance the tamil term includes legal as well as quasi-legal matters. It can also be
used figuratively as we shall see later/.

Will edit.

சட்டமும் சட்டலாட்டமும்

சட்டலாட்டம் என்பதையும் தொடர்புடையனவற்றையும்  தொடர்வோம்.    

ஆயத்தம் சொல்

ஆயத்தம் என்ற சொல்லைப் பற்றி உங்களுடன் சிந்திக்கலாம் என்று இரண்டு
மாதங்களுக்கு முன்னரே எண்ணியிருந்தாலும் அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிட்டிற்று.

ஆயத்தம் என்பது தயார் நிலை, முன்னேற்பாடு என்று பொருள்படுவது. இச்சொல்லின் முன்னிருப்பது ஆய என்பது. ; மற்ற சொல் அற்றம் ஆகும்.

அற்றம் எனின் தருணம். தகுந்த நேரம்.

அற்றம் என்பது பேச்சு வழக்கில் அத்தம் என்று திரியும்.

இங்ஙனம்  திரிதல் தமிழில் பெருவழக்காகும். பேச்சில் இங்ஙனம் திரிவன‌
பல.  சிற்றம்பலம் >  சித்தம்பலம் >  சிதம்பரம் என்பது காண்க.

ஆய + அத்தம் =  ஆயத்தம்.

இங்ஙனம் சரியான தருணம் எனப் பொருள் தந்தாலும்,  வழக்கில் இது
ஏற்ற தருணங்களை உண்டாக்கிக்கொண்டு இருத்தல் என்று விரியும்.

இஃது இனிதாய் அமைந்த சொல் ஆகும்.

சனி, 24 செப்டம்பர், 2016

இரதிபதிப்பிரியா : " ஜெகத் ஜெனனி "

இரதிபதிப்பிரியா இராகத்தில் அமைந்த இந்த இனிய பாடல், சுத்தானந்த பாரதியாருடையது.  இதன் வரிகள் உங்களிடம் இல்லை யென்றால் இஙுகு
பாடல் உங்களுக்கு வந்து உதவுகிறது:  இதை இசையரசு  M.  M.  தண்டபாணி தேசிகர் பாடியுள்ளார்:.


ஜெகத் ஜெனனி சுகவாணி கல்யாணி  (ஜெகத் ஜெனனி)


சுக சொரூபிணி மதுர வாணி
சொக்க நாதர் மனம் மகிழும் மீனாட்சி

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ‌
பஞ்சமி பரமேஸ்வரி

வேண்டும் வரம் தர‌
இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத சொரூபிணி    (ஜெகத் ஜெனனி )





இறைச்சி how derived?

இறைச்சி  என்பது பாலரும் அறிந்த சொல் ஆகிவிட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் பலர் இறைச்சிக் குழம்பு  உண்ணும் பழக்கம் உடையோராய்
விளங்குகிறார்கள்.

இறைச்சி என்ற சொல் எங்கிருந்து வந்த தென்பதை அறிந்தால் அதுவும் இன்பமே.  உண்பதே இன்பம், சொல் உண்டானது அறிதல் வேண்டா என்பாரும் இருப்பர்.

ஒரு விலங்கு இறந்தபின் கிடைப்பதே அதன் இறைச்சி. உயிர்க்கொலை செய்தாலே ஊன் கிடைக்கிறது.\

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும்  தொழும்     (குறள் )

இறு > இற > இறப்பு.  இறுதல் என்பது முடிதல். கொல்லுதலும் இதில் அடங்கும் .
இறு   >  இறை.   முடிவு.

இறு > இறை >  இறைச்சி.

சி  என்பது விகுதி .    எழு > எழுசசி  என்பது காண்க ,

இறைச்சி  :  இறந்த அல்லது கொல்லப்பட்ட உடலில் கிடைக்கும் அதன் சதை.

இறு என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு.  அவற்றுள் ஒன்றையே
இங்கு கூறினோம்.  அறிந்து மகிழ்க.

இறைச்சி என்பது உயிர் இல்லாமை குறிக்கும் தொழிற்பெயர்.  ஆகுபெயராய்
ஊனைக் குறித்தது.



உபாதை என்ற சொல்லை

உபாதை என்ற சொல்லையும் பொருளையும் கவனிப்போம்,

இதில் உ =  முன்னிருப்பது என்று பொருள்படும்.

பாதை என்பது பதைத்தல்.  

பதை >  பாதை.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

சுடு என்ற சொல், முதனிலை நீண்டு, சூடு என்றாகி,  பெயர்ச்சொல் ஆகும்.
இதற்குத் தொழிற்பெயர் என்று பெயர். இதைப்போலவே, பதை என்பது
பாதை என்று நீண்டு  பெயரானது.

உ+ பாதை = உபாதை.  முன்னிருந்து தொந்தரவு செய்யும் வலி. அல்லது
மற்ற தொல்லை.

வழி என்று பொருள்படும் பாதை வேறு சொல்.

கடக இராசி. சொல்லமைப்பு.

கடகம் என்பது  நண்டு என்று பொருள் படும்.

நண்டு கடிய ஓட்டினுள் வாழ்கிறது.  ஆகவே அதற்கு ஒரு கணிக்கலைச்
சொல் அமைத்தல்  எளிதுதான்.

கடுமையான ஓடு:  " கடு ".

உள்ளிருப்பது:      "அகம்."

கடு+ அகம் ‍  =  "கடகம்."

இங்கு டகரம் இரட்டிக்கவில்லை.

சோதிடம் ஒரு தனிக்கலை ஆதலின், அக்கலைக்குரிய சொற்களைப்
படைப்பதே சரி.  அங்ஙனமே இச்சொல் படைத்துள்ளனர்.


https://sivamaalaa.blogspot.sg/2015/07/crab-and-its-qualities.html

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஜெயலலிதா நம் அன்னை. வாழ்க

தனக்கென வாழ்தல் இன்றிப்
பிறர்க்கென அரசில் வீற்றுக்
குணக்கடல் ஏற்றம் பெற்ற‌
ஜெயலலி தாநம்  அன்னை.
மணப்பெரு பொலிவே உற்ற‌
மாண்புறத் தேறித் தன் தோள்
முணக்குறு சுமைகள் வென்று
முதல்வருள் முதலாய் வாழ்க.

எந்திரன் என்ற சொல்லை,,,,,,,,,,,,,,,,,,,,பாராட்டவே வேண்டும்

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_20.html



மேற்கண்ட இடுகையைத் தொடர்ந்து ===


சாமிநாத ஐயர் தோன்றாமலும் சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பிக்காமலும் இருந்திருந்தால், சங்க இலக்கியங்கள் இரா. அப்படியானால் இது தமிழ் இது அன்று என்று எவ்வாறு கண்டுபிடிப்பீர்,

எந்த இலக்கியமும் கிடைக்காத உலகத்துப் பல மொழிகளில் எப்படி ஒரு
சொல் அம்மொழிக்குரியது என்று கண்டு பிடிக்கிறார்கள்?

சங்கப் புலவன் பயன்படுத்திய ஒரு சொல் பிற மொழியிலிருந்து அவன்  அறிந்தது என்பதை எப்படி மறுப்பீர் அல்லது ஒப்புவீர் ?

இதற்கெல்லாம்  உங்களிடம் விடை  இருக்கவேண்டும்.  இது அறியாத போ து
இது தமிழ் இது அன்று என்பது கடினமே.

யாம் கவனிக்க விரும்பியது  எந்திரன் என்ற சொல்லை.  இந்தப் பெயரை ஒரு படத்துக்கு இட்டவர்களைப்  பாராட்டவே வேண்டும்

இயந்திரம் என்பது பொருள்    எந்திரன் மனிதனைச் சுட்டுகிறது .   அதாவது எந்திரத்தினாலான மனிதனுக்குப் பெயராகிறது.

அன்  விகுதி வந்தால் மனிதனைக் குறிக்கும்.  சில வேளைகளில் குறிக்காது:  எடுத்துக்காட்டு  :  சூரியன்.

எந்திரன் என்பது நல்ல தமிழ்.  இயந்திரம் > இயந்திரன் >  எந்திரன்,  இது திரிபுச் சொல் .

இயலாது என்பது ஏலாது என்று திரியுமே .

ஏலா இடர் ஒருவர் உற்றக்கால்  (நாலடியார் )

இயைய  > ஏய

 ஏய  உணர்விக்கும்  என்னம்மை  (  புலவன்  அம்பிகாபதி )

இவை நினைவில் முந்துபவை  ஆகும் .

இ + அம்   + திறம்  =  இயந்திரம் !!  \\

இ  :  இங்கே.

அம் :  அங்கு.      அ + கு =  அம் +  கு =  அங்கு.  மகரம் ஒரு சாரியை,

திறம் >  திரம்   போலிக் திரிபு.



 இங்கே இருப்பது தானேயோ நகர்ந்தோ சுற்றியோ எப்படியோ போனால் அதுவே  இயந்திரம் .அதாவது  மனிதனும் விலங்கும் இயக்கற்ற பிறவும் அல்லாதது.


The thoughts of ancient Tamils were extremely simple and direct. .

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஐயம் என்ற சொல்லையும்

https://sivamaalaa.blogspot.sg/2016/09/blog-post_69.html


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_14.html



இவற்றைத் தொடர்ந்து :


முன்னிரண்டு இடுகைகளையும் ஊன்றிப் படித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , ஐயம் என்ற சொல்லையும், சேர்த்து ஆய்வு செய்தல் நலம்.

ஒரு பொருளை அங்கு வைத்தோமோ இங்கு வைத்தோமோ என்பது போலும்
இருமுனை எண்ணங்கள் வரின், அதனை ஐயம் என்கிறோம்.

இச்சொல் அங்கு, இங்கு  என்ற இரண்டையும் உள்ளடக்கியது.

அ +  இ  + அம் =  ஐயம்.

அம் என்பது விகுதி.

அ + இ ‍=  அயி ஆகும்.   இது  அம் விகுதி சேர,  அயி என்பதிலுள்ள இகரம் கெடும். கெடவே  அய்  என்றே நிற்கும் ,   அய்  எனினும்  ஐ  எனினும்  வேறுபாடு இல்லை.

அய் + அம் ‍என்பது ஐ + அம் என்றாகும் பின் ஐயம் என்று முடியும்.

அங்கும் இங்கும் அலைந்து பிச்சை எடுத்தலும் ஐயம் எனவே குறிக்கப்பெறும்.  அங்கும் இங்கும் சுட்டு இவண் அலைதலைக் குறிக்க வரும்,

அங்கும் இங்கும் என்ற சுட்டுக்கள் இருமுனையையே விதந்து குறிப்பினும் பன்முனைகளில் எழும் ஐயமும்  இதிலடங்குவது ஆகும். தேவையில்லாமல் அதற்கு இன்னொரு சொல் அமைக்கவேண்டாமையின்,

அய் என்று நின்ற அமைப்பு இர் என்னும் வினையாக்க விகுதி பெற்று
அயிர் ஆகும்.  அயிர்த்தல் எனினும் ஐயம் கொள்ளுதலேயாம், உய்  >  உயிர் > உயிர்த்தல்  என்பது  இன்னோர்   எடுத்துக்காட்டு.

இதன் மூலம்  ஐயம் என்ற சொல் தெளிவுபடுத்தப்பட்டது.




"அயிச்சு" - மலையாள வினைமுற்று

இங்கிருந்து  தொடர்க: :  http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_69.html 


"அங்கு அனுப்பு ‍,  இங்கிருந்து "   என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது
"அயிச்சு"  என்ற மலையாள வினைமுற்று.

அ =  அங்கு;
இ =  இங்கிருந்து.


அ இ  =  அயி. (    ய்   :    யகர உடம்படு மெய்.)

இந்தச் சுட்டடிச் சொல்லை,ஐக்கியம் என்பதனோடு ஒப்பு செய்து ஆய்க.

அனுப்பு  என்பதும்  அகர ச்  சுட்டுத்தான் .   அண் >  அன்  >  அனுப்பு   ( அண்முதல்  கருத்து. )   

புதன், 21 செப்டம்பர், 2016

மார்க்கம் - சொல்லமைப்பு

நீங்கள்  திருச்செந்தூருக்குச் செல்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்  என்று முயல்கிறீர்கள். நீங்கள் கண்டுபிடிக்கும் எந்த வழியும் திருச்செந்தூரில் முடிவதாக இருக்கவேண்டும். அல்லது அங்கிருந்து வெளியேற நினைக்கிறீர்கள்.  நீங்கள் கண்டுபிடிப்பது அங்கிருந்து தொடங்குவதாகவே இருக்கவேண்டும், இங்ஙனம் அங்கு முடிகின்ற அல்லது தொடங்குகின்ற நிலையில் இல்லாத எதுவும் திருச்செந்தூருக்கு மார்க்கமாக ‍ அதாவது வழியாக இருக்க இயலாது.

இதைச் சுருக்கிச் சொன்னால், திருச்செந்தூரை மருவாத எதுவும் திருச்செந்தூருக்கு மார்க்கம் ஆகாது.  நீங்கள் செல்வது வான மார்க்கமாக இருந்தாலும், கடல் மார்க்கமாக இருந்தாலும் தரை மார்க்கமாக இருந்தாலும் அந்நகரை மருவாத, மருவிச்செல்லாத எதுவும் அங்கு செல்ல‌
மார்க்கம் ஆகாது.

ஆகவே மருவுதல்  கருத்திலிருந்து  மார்க்கம் என்ற சொல் பிறந்தது.  கொஞ்சம் சிந்தித்தாலே  தெரிவது  இதுவாகும்.

இந்தத் திரிபுகளை பாருங்கள்:

கரு > கார்      (கார் மேகம் ,  காரத் திகை . கார்  முகில் )
வரு >  வார்.    ( வாரான்,  வாருமே , வாரீர் ,   வாரம்  மீண்டும் மீண்டும் வரும் கிழமைகள் )
இரு >  ஈர்   ( ஈராயிரம் )
இழு > இரு > ஈர் >  ஈரத்தல்  (  ஈரல் )   (இருதயம் என்பதும்  ஈரத்தல் அடிப்படையானது ) 

இதன்படியே  மரு  மார் என்று திரியும்.
 மார் + கு+  அம்   =  மார்க்கம் .

செல்வதற்கு  அல்லது  நீங்குவதற்கு  மருவுதலைச்  செய்வது  மார்க்கம் ( அல்லது வழி )

வழிந்து  செல்வது வழி .  இந்தச் சொல்  நீரினோடு  தொடர்புள்ள சொல்.
மார்க்கம் என்பது  தழுவுதல்  தொடர்புடையது..

சொல்லமைப்பு

ஐக்கியம் என்ற சுட்டடிச் சொல்

அங்கிருப்பாரை இங்கு அழைத்து அவர்களை ஒன்றுபடுத்தினால் அதனை  
ஐக்கியம் என்கிறோம். இது ஐ மற்றும் இங்கு என்ற இருசொற்களைச்
செதுக்கிச் செய்யப்பட்ட சித்திரச் சொல்.

இ >  இங்கு.   இது இகரச்  சுட்டடிச்  சொல்.  இது இடைக் குறைந்து  இகு  ஆகும்.  பின் வினையாகி  இகுத்தல் எனவரும்.   அதாவது  இங்கு அழைத்தல் .

வீட்டுக்குப் போனான் என்ற வாக்கியத்தில் வரும் கு என்னும் வேற்றுமை உருபைக் கவனியுங்கள்.  அந்த கு- ‍விற்கு என்ன பொருளோ அதுவேதான்
இங்கு. இகு என்பனவற்றிலும் கு- விற்குப் பொருளாகும்.

இ + கு =  இங்கு

இ + கு =  இகு.  இதில் ஒரு ஙகரஒற்றுத்  தோன்றவில்லை. அவ்வளவுதான்.


ஐ என்பது  அய் ;   இது அ என்ற சுட்டிலிருந்து வருகிறது.   ய் என்பது

உடம்படுத்தும் ஒற்றெழுத்து.

அய்  + இகு + இய=  ஐக்கு + இய  =  ஐக்கிய .

ஐ + கு =  ஐக்கு  என வலி இரட்டித்து வந்தது/   இகரம்  கெட்டது  அதாவது மறைந்தது.

ஐக்கியம் என்ற சுட்டடிச்  சொல் சரியாக உணரப்படவில்லை .

இயம்  (இய )   விகுதி  (எச்சம் ).

continue at: 

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_14.html


ஐ நா பொதுசெய லாளராய்...

தளபதி யாகவே இருந்துவிட்டால்
தலைவர் ஆவதும்  எப்பொழுது?
தலைவர் ஆகவே இலங்கிவிட்டால்
அமைச்சராய் அமர்வார்  எந்நாளிலே?
அமைச்சர் என்றே அமுங்கி இருப்பினே
அதிபராய் உதிப்பதும்  என்றுசொல்வீர்?
ஐ நா பொதுசெய லாளராய்  ஆகிட
ஆசையும் இல்லை  என்பருண்டோ?

இதைக் கவிதையாக  எழுதவில்லை.  ஆனால் ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. சிறு மாற்றங்கள் செய்தேன்.  அரசியலில் இருப்போருக்கு 
ஆசை இருக்கும்/  முன்னேற்றம்  காண .

திங்கள், 19 செப்டம்பர், 2016

வன்னிலை வாய்ந்த கொசு

கொசுவுக்குக் கூடுதல் கொல்புகை வீசி
இரவுக்குள் இன்பம் இயல ----- நிறுவினும்
எண்ணிய சின்னேரம் எங்கிருந்தோ வந்ததே
வன்னிலை வாய்ந்த கொசு



கூடுதல் = மிகுதியான

கொல்புகை -  கொசுக்களைக் கொல்லும் அல்லது விரட்டும்
ஒரு தணிப்புப் புகை. known as fogging.  spray of  smoky pesticide.

வீசி -  அடித்து.

இரவுக்குள் - இரவு நேரங்களில்.

 இரவு வருமுன்  எனினும் ஆம்.

இன்பம்-  கொசுக்கடி இல்லாத நிலை.

இயல -  வெற்றிகரமாக நடைபெறுமாறு .

நிறுவினும் - நிலைநாட்டினும்   .

எண்ணிய - கொcசுவைக் காணவில்லையே என நினைத்த.

சின்னேரம் - கொஞ்ச நேரத்தில்.

வன்னிலை -  வலிமையான நிலை.  வல்+ நிலை

சனி, 17 செப்டம்பர், 2016

அருந்ததியர் என்பது.........

அருந்ததியர் என்போர்  அதியமானுடன் தொடர்பு கொண்டோர்
என்று சிலர் கூறுவர்.

சில மன்னர்கள் ஒழுக்கத்து மேன்மை கொண்டோராய் விளங்கியிருந்தனர் என்று தெரிகிறது   மன்னருள் பலர்
பல மனைவியரையும்  மாற்றுத் தொடர்பு மகளிரையும் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது.  500 - 600 என்று
விரிந்த குழாம் உடைய மன்னர்களும்  வரலாற்றில் பலராவர்.

அத்துடன் கோயில்கள் பலவும் அவர்களால் நிறுவாகம் செய்யப் பட்டன. அவர்களுக்குத் தடைகள் யாதும் இல்லை.

அருந்ததியர் என்பது அருந்து+ அதியர் என்றும் பிரியும்.

சாப்பாடு அதிகம் உண்டோர் என்று இது பொருள்தரும்.

என்னவென்று தெரியவில்லை. மன்னர் அளித்த உணவு அதிகம்
பெற்று  உண்டவர் என்று கொள்ள, இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

க என்பது ய என்றும் திரியும்.  மகன் என்பதை மயன் என்று
சிலர் சொல்வது கேட்டிருக்கலாம்.