வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கரார் கறார்

பண்டமாற்றுக் காலத்திலிருந்தே பொருளைப் பேரம்பேசி வாங்குவதென்பதே மனநிறைவு அளிக்கத் தக்க நடவடிக்கையாக இருந்திருப்பது தெரிகிறது. பேரம் பேசாமல் வாங்கிவந்த பொருளை நம் தோழியர்களில் ஒருத்தி பார்த்து, குறைத்துக் கேட்கவில்லையா ‍  விலை அதிகம்போல் தோன்றுகிறதே என்றால், நாம் ஏமாந்துவிட்டதுபோன்ற உணர்வன்றோ மேலிடுகின்றது? பேரம்பேசி வாங்குவதே செம்மையான முறை என்று பலர் கருதுவர். செம்மை ‍  1,நேர்மைக்கு உரிய வழி, 2. சிவப்பு என்று இரு பொருளுண்டு. பேரம் இல்லையென்றால் அது கருப்பு, இருட்டுடன் தொடர்புடைய வணிக வழி.........!  -  என்று நினைத்தனர் .

கரு > கருப்பு.
கறு > கறுப்பு.

கரு >   கரார் .   (கரு+ஆர் )

கறு  > கறார் .  (கறு+  ஆர் )

ஆர்  ஈறு பெற்ற சொற்கள் .


கரார்  விலை =    வரையறவு செய்யப்பட்ட விலை.

கருப்பு  கறுப்பு  என்று இருவகையிலும் சொல்லமைதல் போல்  கரார்  
கறார் என்று அமைந்துள்ளன .

வாங்குபவன் பேசி  விலையை நிறுவிக்கொள்ள வழியில்லையென்ால்  நிலைமை கருப்பு நிறம்தான்!

வேண்டலும் வழங்கலுமே (demand and supply)   விலையை நிறுவும் என்பது இற்றைப் பொருளியல் கொள்கை. நம் சொற்கள்  பழைய உலகின் கண்ணாடிகள். 

இவை சந்தைச் சொற்கள். 

 

திராணி .

"எதிர்த்துக் கேட்க  அவனுக்குத் தெம்போ திராணியோ இல்லை" என்பர் பேசும்போது!

"திராணி " என்ற சொல்லைப் பார்க்கலாம்.  திராணி எனவும்  திறாணி எனவும்
 இருவகையிலும்  இது எழுதப்படுவதுண்டு .


tirANiability, capacity, strength, power

tiRANiability



திறம் + அணி  = திற + அணி = திறாணி .>  திராணி .


திறமணி  என்றோ  திறவணி  என்றோ அமையாது.

திறம் என்னும் அழகு என்பதாம், 





வியாழன், 6 பிப்ரவரி, 2014

உரொக்கம் > ரொக்கம்

தமிழில் தலையிழந்த சொற்கள் பல.   "நிரம்ப" என்பது "ரொம்ப" ஆனது ஓர் எடுத்துக்காட்டு, இதில் நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது நிறைதல்,  நிரம்புதல்  என்ற சொற்களின்  பொருள் ஒன்றுபாடும் நிறை ‍‍<> நிர என்பவற்றின் ஒலி அணிமையும் (proximity in sound)  ஆகும்.

இப்போது "ரொக்கம்  " என்பதை ஆராய்வோம்.

ரொக்கம்  என்பதில் உள்ள இரண்டாம் சொல்லை முதலில் எடுத்துகொள்வோம் .

ஒக்குதல் என்பதன் பொருள்களில் ஒன்று, ஒதுக்கி வைத்தல் என்பதாம். ஒக்குதல் என்பதுகூட ஒதுக்குதல் என்பதிலுள்ள துகரம் மறைந்த சொல் என்று கொள்வதும் இழுக்காது. ("இடைக்குறை" ) .

சிறு சிறு தொகைகளைக்  கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்துப்  பின் ஒன்றாக எடுக்கும்போது அதுவே "ரொக்கம்" ஆகிறது.  அதை ஒருத்தியிடம் கொடுத்து "ரொக்கம் " கொடுத்தேன் எனில் அது பொருந்துகிறது. சிறுசிறு தொகைகளாக இல்லாமல் ஒரே தடவையில் மொத்தமாக என்று பொருள்.
இதுவே அதன் தொடக்க காலச்  சொல்லமைப்புப் பொருளென்றாலும் இன்று அது காஷ் (cash or cash-in-hand) என்ற ஆங்கிலச்சொல்லுக்கு ஈடாக நிற்கின்றது. இன்று காசோலையாய் ‍இல்லாமல் "பணமாக"  எ ன்றன்றோ பொருள் தருகிறது! (NOT BY CHEQUE OR ATM ELECTRONIC TRANSFER OR GIRO DEDUCTION).

இனி "உரு"  என்ற  முன்  நிற்கும் சொல்லை அறிந்துகொள்வோம்.  உருத்தல் எனின் முன் தோன்றுதல்.  ஒதுக்கி வைத்த மொத்தமும் உங்கள் முன் இப்போது தோன்றிவிட்டது !  அதுவே உரு+ஒக்கம்  = உரொக்கம் > ரொக்கம் என்பதாகும்.

இந்தச் சொல்லின் பொருளை ஒரு வாக்கியத்தில் எழுதுவதானால், "ஒதுக்கி வைத்த மொத்தமும்  உங்களின் முன்  ஒன்றாகத் தோன்றிவிட்டது " என்று எழுத வேண்டும். எந்தப் பணமானாலும் எங்காவது  ஒதுக்கமாக (பைக்குள்) வைத்திருந்துதானே  உங்கள்முன் காட்டுகிறார்கள்.

நிதி பற்றிய கலை முன்னேற முன்னேறச் சொற்பொருளானது சில சாயல்களில் வேறுபடும்.  சொல்லின் அமைப்புப் பொருள் அதன் இற்றைப் புழக்கப் பொருளினின்று வேறுபடும் என்பதுணர்க.


குறிப்புகள் :

ஒதுக்குதல் >  ஒ(து)க்குதல் - ஒக்குதல்.    "து"    இடைக் குறைந்தது ( ஒத்தல் being equal என்பது வேறு  .)

உருத்தல் : "ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதும்"  - சிலப்பதிகாரம்.

சொல்லாக்கத்தில்  உடம்படு மெய்  வராமலும்  சொல்  அமையும் .  எ-டு  :   ,மகன்   மகள்  என்பவற்றுக்கு  சின்னாட்களுக்கு முன்  கீழே தரப்பட்ட விளக்கம்  கா்ண் க   ஆகவே  உரு  + ஒக்கம்  = உருவொக்கம்  என்று அமையவில்லை.  இது  புலவர்புனைவு ச்  சொல்  அன்ெ ன்பதும்  ஒரு காரணமாகலாம்  போலும் .  ஒக்கம்  என்பது இப்போது  பேச்சு வழக்கில்  இல்லை  என்று  நினைக்கிறேன் .


பிற+அன் =  பிறன் ,  இதில்   பிறன்  என்று  கர  உடம்படு  மெய்  வந்திலது   கா ்ண்க 



செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மகன், மகள், மகார்

மகன், மகள், மகார் என்பன மிகவும் அழகுபெற நம் தமிழில் அமைந்த சொற்கள்.

மக +  அன்  =  மகன் என்று அமைந்தது சரிதான்.
அதுவேபோல்,  மக +  அள் = மகள் என்பதும்  நன்றேயாம்.

இதில் கேள்வி:  மக+ அன் = மகவன் என்றும்  மக +அள் = மகவளென்றும்  உடம்படு மெய் பொருந்தி ஏன் அமையவில்லை?

சிவ + அன் =  சிவன். செம்மைக் கடவுள். முருகனும்தான்.

உடம்படுமெய் இங்கெல்லாம் தேவையில்லை  என்க.

A short dialogue on word formation.


புதன்கிழமை 29.1. 2014ல் வகரம் பகரமாகத் திரியும் என்னும் இடுகையில்

 இது  போன்றவை நம்  பழைய இலக்கணக் கோட்பாடுகட்கு இணங்க அமையவில்லை. இருப்பினும்  தமிழே.  

என்று எழுதியிருந்தேன். இதைப் படித்துவிட்டு, பழைய இலக்கணங்களில் குழறுபடிகள் ஏதும் இல்லை என்று எண்ணிவிடாதீர்கள்.

பழைய இலக்கண விதிகள் ஒத்துவராத இடங்கள் அந்தப் பழைய இலக்கண காலத்திலேயே ஏராளம். அதில் ஒன்று மட்டும் உங்களுக்குச் சொல்கிறேனே.  கேளுங்கள்.

மக்கள் என்ற சொல்லைப் பார்ப்போம்.

மக என்பது அடிச்சொல்.

மக > மகன்
மக > மகள்.  So far, so good.  But:

மக + கள் =  மக்கள்.

இயல்பாகப் பார்த்தால்   "மகக்கள்" என்றல்லவா வரவேண்டும்?  ஏன் மக்கள் என்று வந்தது?

அது போகட்டும்.

"கள்" விகுதி அஃறிணைக் குரியதென்றார் தொல்காப்பியனார். உயர்திணையாகிய "மக்களில்" எப்படி "கள்"  விகுதி   வந்தது?  அதை எப்படித்  தொல்காப்பியனாரே ஏற்றுக்கொண்டார்.

இதிலிருந்து   நாம்  அறிவது:   சொற்களை உருவாக்கும்போது இலக்கணத்தை  முழுவதும்  பின்பற்ற இயலாது என்பதுதான்.





திங்கள், 3 பிப்ரவரி, 2014

கோடி கொடுத்து.......

கோடி கொடுத்துக் கொடுந்தேர்த லில்வென்று
நாடு நடத்துமோர் நாயகனின்--- ‍‍‍‍கேடறிய
ஏடு வெளியிட்டும் ஏதும் தொடர்காணோம்
மூடினவோ ஊடகங்கள் வாய்.

வேறொரு நாட்டின் தலைவர் பற்றி ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால், அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்நிலை பற்றிய பாடல் இது.

 ஏடு = பத்திரிகை,  வெளியிட்டும் =‍‍ செய்தி வெளியிட்டும்.

பணம் "புரண்ட " தேர்தலாதலால் "கொடுந்தேர்தல் " ஆயிற்று.  

 சில சமயங்களில் செய்திக்குப் பிந்திய நிகழ்வுகளை ஊடகங்கள் கவனிப்பதில்லை. பின் நிகழ்வுகள் செய்தித் தகுதியை   (newsworthiness )இழந்துவிடுகின்றன போலும்.

வியாழன், 30 ஜனவரி, 2014

காரசாரம்

காரசாரம் என்பதோர் அழகிய சொல்.

காரம் என்பதற்குப் பல பொருளுண்டு எனினும், மிளகாயின் காரம் நினைவுக்கு வந்துவிடுகிறது.

சாரம்  : சார்ந்தது.  சார்தல், சார்பு, இவை சார் என்னும் அடிச்சொல் கொண்டு அமைந்தவை.

காரசாரமான விவாதம் என்கிறோம்.

விளக்கம் தேவையில்லாத சொல்லாகும்.

புதன், 29 ஜனவரி, 2014

வகரம் பகரமாகத் திரியும்

வகரம் பகரமாகத் திரியும் என்பது :தூபம்" என்ற சொல்லைப் பற்றிய விளக்க இடுகையில்  (கீழே )  எடுத்துச் சொல்லப்பட்டது.

இப்போது  வேறு  சில சொற்களை ஒப்பிடுவோம்.

கூவம் > கூபம்.
*தவி + அம் = தாவம் > தாபம். தாவம் > தாகம்.
அவி + அம் = அவம், அவம்> அப, (அவிதல், அவிந்து கெடுதல், கேடு)
(அப கீர்த்தி, அபகடம், அபகாரம்  அபத்தம் எனப்பல)

அவ என்பது ஒரு சங்கத முன்னொட்டானது )

பாவம் > பாபம்
சாவி(த்தல்), சாவி+ அம் = சாவம் > சாபம்,
கோவம்  > கோபம்.

கா > காவல் ;
கா > காவந்து > காபந்து @
(காவல் > காவல்+து >  காவந்து ) இது பேச்சு வழக்குச் சொல் .
காவல் >காவன் > காவன்  து  > காவந்து.  ல்>ன்  திரிபு  மற்றும் து விகுதிச் சேர்க்கை .

@ இது  போன்றவை நம்  பழைய இலக்கணக் கோட்பாடுகட்கு இணங்க அமையவில்லை. இருப்பினும்  தமிழே.  

...........எனப்  பலவாம்.

குறிப்புகள்

*தாகம்  எடுக்கிறது என்று சிலர் கூறினாலும் " தண்ணீர்  தவிக்கிறது"  என்று 
சிற்றூர்களில் கூ்றுவதுண்டு. எனவே "தவி" அடிச்சொல்..      

புதன், 22 ஜனவரி, 2014

தூபம்.



இப்போது சாம்பிராணி, பல மாதிரிகளில் கிடைக்கிறது. கட்டி, தூள், குப்பி என்பன எனக்குத் தெரிந்த சில  வடிவங்கள். இவற்றுள் கட்டிச் சாம்பிராணியே முந்தியது என்று தெரிகிறது. கட்டியை நொறுக்கித் தூளாக்கித் தான் தூபக்கால் நெருப்பில் இடவேண்டும்.

தூளாக்கித் தூவினால் நறுமணப் புகை வருகிறது.

தூவு  > தூவம் > தூபம்.

ஒப்பீடு :  வசந்த் -  பசந்த்   (வசந்தம்)

வகரம் பகரமாகத் திரியும். 

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பெண் சம நிலை

"தலைமை அமைச்சராய்ப் பெண்ணிருப்பதா?
தாரணியில் நானிங்கே பின்னிருப்பதா?
குலைப்பேன் அரசுதனைக்  கூன்படுத்தியே,
கூடிடுவீர் சென்றவளைப் பின்கிடத்துவீர்....."

என்றகுரல் எங்கேனும் ஞாலம்தன்னில்   
ஒலித்தபடி செல்லுமிந்தக் காலம் தன்னில்!       
இன்றுவரும் நாளைவரும் ஒத்தநிலைஎன்
றிருந்ததன்றிக்  கையில்வரப் பெற்றதிலையே.

புதன், 15 ஜனவரி, 2014

baby, young persons - newcomers

( continue from post dated 7.1.14 below )    புதல்வர், புதல்வி, புதல்வன் என்பன புது (புதியது, புதுவரவு) என்பதிலிருந்து கிளைத்தமைந்த சொல் என்று இங்கு கூறப்பட்டுள்ளது.

இப்போது நாம் சில ஒப்பீடுகளைச் செய்யலாம்.

தமிழில் "பை"  (பைந்தமிழ், பைங்குழவி ) என்ற அடிச்சொல் இளமை, பசுமை முதலிய மூலக்கருத்துக்களை உடையது. பை > பையன். தென்கிழக்காசிய மொழிகளில் பாயோ*, பாயு* என்பன  புதுமைப் பொருளன. மலாய் மொழியில் பாயி என்பது குழந்தை.

பாலன், பால, என்பன இளமைப்பொருள. சில தென்கிழக்காசிய மொழிகளில் பாலோ என்பது புதிது என்றே பொருள்படுகிறது.


---------------------------------------------------------------------------------------------------------
Note: *word collections from Pangasinan and Kapampangan (South East Asian) languages.

The difference between b and p is disregarded..

வியாழன், 9 ஜனவரி, 2014

ஊர்ஜிதம்.

ஊர்ஜிதம்.

இப்போது  இந்த வாக்கியததைப்  பாருங்கள்:

அவர் தம் உறுதியைத் தெரிவித்தார்.

இவ்வாக்கியத்தில்  அழுத்தம்  குறைவாகவே  இருப்பதாகக் கருதுவர் சிலர்.


எப்படி அழுத்தம் கொடுப்பது?


தம்  உறுதி  என்பதை  உறுதிதம்  என்று  மாற்றுக.

அழுத்தம் போதவில்லை.

உறுதிதம்  >  உறுஜிதம்.

இப்போது  அழுத்தம் தென்பட்டுவிட்டது.  ஆனால் இன்னும் போகலாம்.


உறுஜிதம்  >    ஊர்ஜிதம்.

இப்போது அழகிய அழுத்தமான இன்னொரு சொல்  கிடைத்துவிட்டது .

ஊர்ஜிதத்தில்  வரும் தம்,  பிடித்தம் என்பதில் வரும் "தம்" போல ஒரு விகுதியாக  அல்லது சொல்லீறாக இருக்கட்டுமே! அப்படியே கொள்வோம்.  என்ன மோசம் போய்விட்டது.






புதன், 8 ஜனவரி, 2014

பினாமி

பினாமி 


இனி பினாமி என்ற சொல்லினைப் பார்ப்போம்.

இதை,  பின்+ ஆம் + இ என்றும்,  பின் + நாம் + இ என்றம் பிரிக்கலாம்.

இவற்றுள் ஆம் என்பது, ஆகும் என்பதன் சுருக்கம்.

பின்னால் நின்றுகொண்டு ஆகும் அனைத்தும் செய்பவன் (அல்லது செய்பவள்) "பினாமி" ஆவான்(ள்).

பின்னால் இருந்தபடி ஆமாம்சாமி போடுவோன் என்றும் பொருள்படும்.

நாம் என்பது நாமம் என்பதன் "சுருக்கம்".

பின்னால் இருந்தபடி தன் நாமத்தை (பெயரை)த் தந்துதவுபவர் என்பது பொருள்.
செயல்பாடுகளை இயக்குவோனே  முன்னிருப்போன். பின்னால் இருப்பவன் பின்னால்  ஆவன செய்துகொண்டு "நாமத்தைத்" தந்துதவி நிற்பவன்.

சொல்லமைப்பில் ஒற்றுக்கள்  இரட்டிக்காமலும் அமைவது பெருநிகழ்வு.

இச்சொல்  ஓர் இருபிறப்பி.

Note:  The title could not be entered. Error.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

புதல்வர்

புதல்வர் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மக்கள் என்பது. புதல்வர் தமிழன்று என்பர் தமிழாசான்மார்.

புதல்வர் என்பதன் அடிச்சொல் புது என்பதே. முன் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்போரை நோக்க, புதுவரவுகளாகிய புதல்வர் புதியவர்களே ஆவர். இச்சொல்லை இப்படிப் பிரிக்கலாம்.

புது +  அல் + வ்+ அர்  =  புதல்வர்

அல் என்பது பல சொற்களில் விகுதியாய்ப் பயன்படுவதே. மத்தியக் கிழக்கு மொழிகளில் இது சொல்லின் முன் நிற்கும்.  உதாரணம்:   அல் கைதா.  அல் காதிப்.  அல் கிதாப்.  (al is like  "the" in English)

தமிழில்  பெரும்பாலும் தொழிற்பெயர்  விகுதியாய் வரும்.  காட்டாக: காணல், ஆகல்.

புதல்வர்  என்பதற்கு  நேராக,  தாய் தந்தையரைக் குறிக்கப்  "பழல்வர்"  என்ற சொல் அமையவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : -  அல் சொல்லீ்று  ஆங்கிலத்திலும் உள்ளது:  committal, acquittal. நம் விகுதிகள்  அல்லது  சொல்லீறுகள் பல மொழிகளில் புகுந்துள்ளன.  

செவ்வாய், 24 டிசம்பர், 2013

நிர்ணயம்

இன்று நிர்ணயம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இது தமிழன்று என்று வகைப்படுத்தப்படும் சொல்.

 இதன் தொடக்கமாகிய "நிர்" என்பது "நிறு" என்பதன் திரிபு. நிறு என்பதோ நிறுவு என்பதன் அடிச்சொல்.

ணய என்பது "நயம்" என்பதில் வேறன்று.

இதைப்   பின்வருமாறு விளக்கலாம்.

நிறு > நிறுவு > நிறுவுதல்.

நிறு > நிர். > நிர் நயம் > நிர்ணயம்.

எதையும் நிர்ணயம் செய்வதாவது,  அதை நயமாக நிறுவுதலே ஆகும்.

புதன், 11 டிசம்பர், 2013

Nelson Mandela

இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்

இன்னொரு காந்தியென‌
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்ம‌ரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?


நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற‌
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று  நாட்டுவரோ?

மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க‌
நிறைந்துயரந்த தமிழ்ப் பாவால்  
நின்றுபணிந்தேத்திடுவோம்.






செவ்வாய், 10 டிசம்பர், 2013

riots in Singapore Island

சட்டமும் ஒழுங்கும் தலைமேற் கொள்ளும் சிங்கப்  பூரரசு
சாலைகள் சந்துகள் எல்லாம் தூய்மை உலகில் இதுஅரிது
கொட்டம டக்கிக் குறும்பரை வைக்கும் கொள்கை அதுபெரிது
குற்றம் அரிதெனக் கூறும் தீவினில் கலகம் ஒருவியப்பே!

அறிகுழு அமைத்தும் அதன்கா ரணம்தரும் நாளை எதிர்பார்ப்போம்
பிறிதொரு காரணம் உண்டிது பிறந்த திகதி நாள்  நட் சத்திரம்
அறிவது யாதெனின் ஆகுநே ரம்குன்றி ஆகா ததுவிரிந்தால்
பெறுவது தீமையே என்பதும் உண்மையே பேசும் இதுதெளிவே.


சூடு கிளப்பிச்  சூறாவளி தோன்றாமல்
பாடு தவிர்த்த‌பண் பட்டகா வல்துறை.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏகலைவன்

ஏகலைவன் என்ற மகாபாரதச் சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

எய் =  அம்பு எய்தல்.
எய் ‍> ஏ  இது முதனிலை திரிந்த பெயர்ச்சொல். இங்ஙனம் நீட்சி அடைகையில் யகர ஒற்று, கெட்டது. (அதாவது, மறைந்தது). இப்படி மறையவில்லை என்றால், ஏய் என்று ஆகி, விளிச்சொல்லுடன் மயங்கும்.

அடுத்து, கலை என்ற சொல்.  அம்பு எய்வது ஒரு கலை.

வன் என்பதில், வ்+அன் ஆகவே வகர உடம்படு மெய்யும் அன் என்னும் ஆண்பால் விகுதியும்.

வல் > வன் என்றும் திரிந்து, வல்லவன் என்பதையும் குறிக்கும்.

ஆக இது தமிழ் மூலங்களையுடைய ஒரு பெயர்

Ekalavya:  Notes

ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் "ஏகலவ்யா". ஏகலைவன் என்று நேர்புனைவாக  இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்)  என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம்  பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.


வட  பெரு நிலப்பகுதியில் கருப்பு  இனத்தோர் ஆட்சி செய்த  பாகங்களும்  இருந்தன  என்பதும்  அவர்கள் ப‌ற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும்  இதனால் பெறப்பட்டது.




வெள்ளி, 6 டிசம்பர், 2013

நீ வேறு நான் வேறு...

நமக்குள் உள்ள‌
ஒற்றுமைகள் என்ன வென்று
உரைகல்லில் உரசிப் பார்ப்பதைவிட‌
வேற்றுமைகள் யாவை என்று
விரித்துப் பார்ப்பதே
உலக மக்களிடையே ஒரு
கலையாகி விட்டதென்பேன்!

இதனால்
உன்னுடன் நானில்லை,
என்னுடன் நீயில்லை,
நீ வேறு நான் வேறு...

ஒரே மாநிலத்து மக்களேகூட‌
வேறுபாடுகளை விரித்தறிந்து
விலகிவிட வேண்டுகின்றனர்.

நல்லதோ கெட்டதோ  இது!
நானும் நீங்களும் சொல்லமுடியுமோ?

காலமே முடிவினைக் கழறும்.

எது எப்படி ஆனாலும்
எல்லோர்க்கும் எல்லாம் இனிதாய் முடிந்து
இன்பமே பெருக வேண்டும்
இவ்வெண்ணமே
என்னில் தோன்றி
விண்ணைத் தாண்டும்.

வியாழன், 5 டிசம்பர், 2013

அதிகாரக் கோதை மயக்கு

கோடி பொதுமக்கள் கொன்றவன்--  அதிகாரக்
கோதை மயக்குநீர் உண்டவன்!
தேடிப் பதைப்பவை செய்தவன் -- ‍‍‍ இனக்கொலை
தேர்ந்தவன் பாவத்தில் உய்தவன்.

அரியணை நீங்கிடா ஆணவன்-- புவி
அனைத்தும்  சொலக்கே ளாதவன்!
புரிந்துள போர்க்குற்றம் நீதிமுன்-- வைத்துப்
புகலவும் நெஞ்சொப்பி டாதவன்..

குற்ற மனைத்துக்கும் கொள்கலம்--  ‍‍‍‍இது
குழைவின்றிக் கண்டதுஇந்  நன்னிலம்!
இற்றைக் கியான்மட்டும் கண்டதோ!-- ஆக‌
இவன்யார் என்பது விண்டிலேன்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

அயல். > அசல்.

இனி, அயல் என்ற சொல்லுடன் சற்று  விளையாடலாம்.


ஐயம், என்பது ஐயப்பாடு. இதன் பகுதி யாகக் கருதத்தக்கது ஐ ஆகும். ஐ+அம் = ஐயம்.

ஐ = அய்.

அல் என்பது  அல்லாததைக்  குறிக்கும்  அடிச்சொல்.


அய்    + அல்  =  அய்யல்    >  அயல். > அசல்.


அய்யல் என்றுதான்  யகரம் இரட்டிக்க வேண்டுமென்பதில்லை.

பை  >    பையல்   > பயல்  >  பசல் >   பசன் > பசங்க....  





வாசித்தல் & அசல்

வாசித்தல் என்பது வாயினால் ஒலித்துப் படித்தல் என்று பொருள்படும்: இஃது சொல்லின் அமைப்பிலிருந்து வெளீப்படும் பொருளாகும்.

வாய் > வாயித்தல். > வாசித்தல்.
 
யகரம் சகரமாக மாறுவது தமிழியல்பு.

வாசித்து என்பது மலையாள மொழியில் வாயிச்சு என்றே  சொல்லப்படும்.

வாயித்து என்பதெ முந்து வடிவம். இதை முன்பு நான் எழுதியுள்ளேன். எங்கு என்று நினைவில் இல்லை.

அசல் என்பது தமிழ்ச்சொல் அன்று என்பர். நம்பிக்கைக்குரிய நல்ல பொருள்கள் பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்தே வந்தபடியால், அயல்  என்ற சொல் திரிந்து அசல் ஆகி போலியன்மையைக்
குறித்தது. உள் நாட்டுப் பொருள்கள் கலப்படமுள்ளவை என்று நினைத்ததையே இது காட்டுகிறது.

இதில்  யகரம் சகரமானது நோக்குக. அயல் > அசல்.

புதன், 20 நவம்பர், 2013

உற்பத்தி


உற்பத்தி என்பது மிக்க அழகாய் அமைந்த சொல்லாகும். கரு ,  கருப்பையை உள் பற்றிக்கொண்டுதான் வளர்ந்து பெரிதாகிறது.  

மரங்களின் விதைகளும் எங்காவது போய் விழுந்து மண்ணினுள்  பற்றிக்கொண்டுதாம்  வளர்ச்சி பெறுகின்றன . 


உள் பற்றுதல் என்ற கருத்திலிருந்து உண்டாகுதல் என்னும் கருத்து வளர்ச்சி பெற்றது. உண்டாகு என்பதிலும் உண்டு என்னும் சொல், உள்+து என்று அமைந்ததே. உள் என்பதே உற்பத்தி  என்பதிலும் பொதிந்துள்ளது உணரற் பாலது ஆகும்.


உற்பத்தி என்பதில் உள் > உல் என்று திரிந்துள்ளது. பற்றுதல் என்பது பற்றி >பத்தி என்று திரிந்துள்ளது. உள் என்பது பத்தி என்பதனோடு புணர,  உட்பத்தி என்று ஆனாலும், பின் உத் பத்தி எனறு திரிவது மற்றொரு வழியாகும்.


இது தமிழ் மூலச்சொற்களைக் கொண்டு அமைந்தது. இந்த விளக்கம் எல்லாம் கூறிக்கொண்டிராமல், இது தமிழன்று என்பது இன்னும் எளிதாக இருக்கும். 


உள்  என்ற  தமிழ்ச் சொல்  மலாய்  மொழியில்  உலு என்று திரிவது கவனிக்கத்தக்கது.

படிப்பறிவு இல்லாதவர்கள் "உலுப்பத்தி" என்பதும் கருதத்தக்கது.


செவ்வாய், 19 நவம்பர், 2013

நாடு.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 
செல்வரும் சேர்வது நாடு.

ஒரு நாட்டில் வாழும் மக்கள் போதுமான பொருள்வசதி உடையவர்களாக இருக்கவேண்டும். உணவுக்கு ஏங்கும் நிலை இருத்தலாகாது. மேலும் அந்நாட்டில் எல்லா வகையிலும் சிறந்த செல்வர்களும் வாழ்தல் வேண்டும். தீவினை விட்டுப் பொருளீட்டிய செல்வர்களாய் அவர்கள் இருத்தல் வேண்டும் என்று கூறவந்த நாயனார், தாழ்விலா என்ற சொல்லைப் பெய்துவைத்துள்ளார். போதைப்பொருள்களாலும் கொலை களவு முதலியவற்றாலும் உயர்ந்துவிட்டவர்கள் "தாழ்விலாச் செல்வர்" என்னும் கூறுபாட்டினுள் கருதப்படும் தகுதியுடையவரல்லர். பொதுமக்கள் உட்பட அனைவரும் தக்கவர்களாய் இருத்தல் இன்றியமையாதது, உணவு உற்பத்தியுடன் பொருள் உற்பத்தியும் "தள்ளா விளையுள்" என்பதில் அடக்கப்பட வேண்டியவையே. முன்னை உரையாசிரியன்மார் நெல் முதலியவை விளையும் நிலங்கலளை மட்டுமே "விளையுள்" என்று கொண்டாரெனினும் இதுபோது  இக்கருத்து சற்று விரிவுசெய்தற்குரியதே ஆகும். பொருளியல் வளர்ச்சி "தாழ்விலாச் செல்வர்" என்பதுள் அடங்கிவிட்டதென்று கருதுவதும் தவறாகாது. எங்ஙனமாயினும் இக்குறள் விரிவாகச் சிந்திக்கவைக்கும் சொற்புதையலைக் கொண்டதாகும்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி என்ற  பெயர் எவ்வாறு அமைந்தது? இதனை  நாடுவோம்!

 பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும்.  வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து"  என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப்  பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம்.  இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா:  இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.



புதன், 13 நவம்பர், 2013

சீர் > (சீல்) > சீலம்.



சீலம் என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.


சீர் > (சீல்) > சீலம்.

ரகரமும் லகரமும் ஒன்றுக்கொன்று பதிலெழுத்துக்களாக நிற்கவல்லவை.

(பிற மொழிகள் பலவற்றிலும் இத்தகைய நிகழ்வினைக் காணலாம்.)

எடுத்துக்காட்டு:

தமிழில் சீரை > சீலை இதுபின்  சேலை என்றானது. சேலைக்குச் சீலையே முந்து வடிவமாகும்.

தமிழ் மிக்கப் பழமை வாய்ந்த மொழி என்பதை சீரை என்ற சொல்லை ஆய்ந்தறிந்து கொள்ளலாம். சீரை என்பது மரப்பட்டை. காட்டு மாந்தன் மரப்பட்டையை ஆடையாக அணிந்துகொண்டு திரிந்தான். நெயவு அறியாக் காலத்தில் இவ்வித இயற்கைப் பொருட்களைத்தாம் பயன்படுத்தினான். காட்டுவாணர் பலர் இங்ஙனமே இன்னும் வாழ்கின்றனர் அல்லது அண்மைக் காவம் வரை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

அம்பலம் என்ற சொல்லும் அம்பரம் என்று திரிவதுண்டு.

சிற்றம்பலம் > சித்தம்பலம் > சிதம்பரம்.  ற்ற > த்த பேச்சுவழக்குத் திரிபு. ல> ர முன்கூறியபடி ஆனது. இதற்கு வேறு அழகிய முடிபுகளும் கூறப்படுவதுண்டு. அவை சில இறைப்பற்று உரைகளின் வாயிலாக நீங்கள் அறியக்கிடைக்கும்.

.

சனி, 12 அக்டோபர், 2013

முச்சலிக்கை

வெவ்வேறு சார்பினர், ஒன்றுகூடி கலந்துரையாடி ஏதேனும் ஒன்றுபற்றி ஆய்வு நடாத்துதற்கு,  கலந்தாய்வு என்கிறோம். தொழிற்சங்க  வட்டாரங்களில் பெரும்பாலும் "பேச்சுவார்த்தை" என்கிறார்கள். இது மக்களிடையே பயின்று வழங்கி இன்று ஆட்சி பெற்றுவிட்ட வழக்கு. பேசி  முடித்து எதையேனும் வார்த்து எடுக்கவேண்டுமே! இப்படிப் பார்த்தால் நன்றாகவே உள்ளது. இல்லையேல், "பேச்சு" என்பதும் "வார்த்தை" என்பதும்
தொடர்பு உடையவை என்பது சொல்லாமலே புரியும். பேச்சு  (talk)   வார்த்தை, (word).  vaarththal - moulding. Figuratively speaking, all words are moulded.
இது நிற்க!

பேச்சுகளின் முடிவில், அறிக்கை வெளியிடுவார்கள். அறிக்கை வெளியிடப் படாத பேச்சு, பெரும்பாலும் பயனற்றதாக இருக்கலாம். அல்லது
பின்னொரு நாளில் மீண்டும் கூடுவதாக இருக்கலாம்.

பேச்சு முடித்து அறிக்கை > முடித்து அறிக்கை > முடித்தறிக்கை > முடிச்சறிக்கை > முச்சறிக்கை.

முச்சறிக்கை>  முச்சலிக்கை > முச்சலிக்கா

Note:
வாய் > வார் > வார்த்தை என்பதும் கவனிக்கத்தக்கதே ஆகும்.
வாய் இடமென்றும் பொருள். வார்த்தல் ‍ ஓர் அமை‍ப்புள்ள இடத்தில் இடுதல். அமைத்தல்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

chengkOl

chengkOl

மன்னவன் செங்கோலே காரணமாக....
“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)

என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார்.
Cited above: a Question posed.

இந்தக் கருத்தின்வழி சென்றால், மன்னவன் செங்கோலின் வல்லமையே, அந்தணராவாரின் சாதியமைப்பிற்கும் அவர்கள் மக்களிடையே அடைந்த மேனிலைக்கும் காரணம் என்றாகிறது. நேரடியாகக் கூறினால், அந்தணர் என்பாரை அரசர்களே உண்டாக்கி, மன்பதையினுள் நடமாட விட்டனர் என்றாகிறது....

இதைத்தான் வள்ளுவர் கூறினார் என்கிறீர்! So, it was the second jati (kings) who created the first jati (anthaNars), as per this research.

எந்த அரசர் ஆட்சியில் அந்தணர்கள் நிறுவப்பட்டனர் என்று கூறுங்களேன் கேட்டு இன்புறுவோம்....

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............
திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............

இருந்தால் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான்.இது கடைச்சங்கத்தின் இறுதி நிலையில் என்பர் அறிஞர் சிலர்...கடைச்சங்க காலத்தில்தான் சாதிகள் உருப்பெறத் தொடங்கின என்றும் வேறு சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவைபோன்ற சாதிக் குறிப்புகள் சங்க நூல்களில் இருந்தால் அவை இடைச்செருகல்கள் என்பாருமுண்டு. சாதிகளை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு வரலாற்று அடிப்படை மிகமிகத் தேவையாய் இருந்த காரணத்தால், இங்ஙனம் முனைவதும் மனித இயற்கைதான். கற்பாருக்குத்தான் கன மதி தேவை.

சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை நிறுவிய ஞான்று, கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் வந்திருந்தான். அது கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவப்பட்டுள்ளது. கயவாகு என்று பல மன்னர்கள் இருந்ததால், பிற்காலத்துக் கயவாகுவைத்தான் இளங்கோ குறித்தார் என்று சிலர் வாதாடத் தொடங்கினர். எப்படியும் சங்க காலத்தை பல நூற்றாண்டுகள் பின் தள்ளிவிட வேண்டுமென்பது இவர்கள் துடிப்பு.
வள்ளுவர் இளங்கோவுக்கு முந்தியவர். இப்போது குறிக்கப்பெறும் திருவள்ளுவராண்டு, சரியானதென்று தென்கலைப் பெரும்புலவர் சாமிநாத ஐயரும் ஏற்றுக்கொண்டுள்ளார். 
பிற்காலத்துச் சமண சங்கம் வேறு. முன்னிருந்த முச்சங்கம் வேறு



பிராமணத் தன்மை

சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி..........
“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “
சரிதான், மறுக்கமுடியாத உண்மைதான், ஆனால் உம் முன் நிற்பவனொருவன், சொந்தப் பட்டறிவும் பிரம்மம்சார் உணரறிவும் உடையானென்று நீர் எப்படி அளவிட்டறிவீர்? அதனால்தானோ, அப்பன் பிராம்மணன் என்றறியப்பட்டு, இப்போது பூணூலணிந்து கோவிலில் மந்திரமோதுவோனே பிராமணன் என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட்டனர்....

People are just being practical about it.
If you go by certain criteria, even an Imam or a Catholic priest can be a Brahmin, though not a member of the Brahmin caste, as you yourself seem to come to realise. So, as per you, was VaLLuvar adverting to a member of a Brahmin caste (if existed then in present rigid form) or one who is Brahmin by certain qualities? If it is the latter, there is no need to feel so disappointed at kuRaL commentaries that leave out or differently interpret "paarppaan","anthaNar" etc.,
You agree that these words do not have a single meaning. Shall we call them multi-purpose words? Why work so hard on these terms...?

These were replies given to queries. 
.

மன்னவன் கோல் - அந்தணர்



அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாமக்கல் கவிஞர் உரை

அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் 
 செங்கோன்மை

மன்னவனின் செங்கோன்மை என்பது அரசு தரும் பாதுகாப்பு என்று பொருள்படும். ("ஆதரவாக" என்பது ஒருவகையில் சரி என்றாலும், ஆதி என்பது ஆதரவன்று. பொருள் முரண்படுகிறது.)

வேதங்களை ஓதுவது, அவற்றை ஓதுவதனால் உண்டாகும் பலன்களை அடைவதற்காக. மன்னன் எப்படி அதற்கு "ஆதி" (ஆக்கம் தருதல்) ஆவது?

அரசியற் பாதுகாப்பு என்பது நேரல்லாத [indirect ] காரணம். மூல காரணம் ஆகாது.

ஆகவே இங்கு அந்தணர் என்ற சொல், "பிராமின்" என்ற பொருளில் வரவில்லை. நூல் என்பதும் வேதங்களைக் குறிக்கமாட்டா!

வேதங்களுக்கும் அவற்றை ஓதுவதற்கும் ஆதியாய் நிற்பது பிரம்மன். மன்னன் கோல் அன்று.

The mannan is no more than an obedient "consumer" of the Brahmin services in this respect. Wrong interpretation.

திங்கள், 7 அக்டோபர், 2013

உலகம் சுழல்கிறது. references from KuRaL

உலகம் சுழல்கிறது.

உலகம் சுழல்கிறது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் முன் வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த தமிழர், உலகம் உருண்டையானது என்று நம்பினரா, அன்றி அது ஒரு தட்டை என்ற கொள்கை உடையோரா என்பது தெரியவில்லை.

வள்ளுவனாரும் இதுபற்றி நேரடியாகத் தம் குறளில் ஏதும் சொல்லவில்லை.

உலகம் சுழல்கிறதென்பதை அவர் ஒருவாறு உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.

என்கிறார்.

சுழன்றும் எனின், உலகம் பல்வேறு நெறிகளிற் சென்றாலும் என்று பொருள்தருமென்பர். ஆனால் உலகம் சுழல்கிறது என்ற கருத்தும் அங்கு ஒளிந்துகொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

மேலும், உலகம் சுற்றுகிறது என்பதற்கு இன்னொரு குறளையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. 1025.

இங்கு சுற்றும் என்ற சொல்லுக்கு "விரும்பிப் போற்றிக் கொள்ளும்" என்பது பொருள். "சூழ்ந்து நிற்கும்" என்றும் கூறலாம். வேறு சொற்களால் உரை கூறியிருப்பினும், கருத்து இதுவாகவே இருக்கக் காணலாம்.

ஆனால், உலகம் சுற்றுகிறது என்று வள்ளுவர் உணர்ந்திருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு குறிப்பாகக் கூடுமே!
இதைத்தான் "சூட்சுமமாகக்" கூறுதல் என்பர் பிறர். 

சனி, 5 அக்டோபர், 2013

mIn, kiiZkaL meaning

from a dialogue with another writer:


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

இதில் மீன் என்பது எதைக் குறிக்கிறது? குளத்து மீனா? விண்மீனா?

The reference here is to the stars - viN mIIn,


Please note that the word mIIn here is plural, though in singular format. 

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


இதற்கான பொருள் என்ன? இங்கே கீழ்மக்கள் என வள்ளுவர் குறிப்பிடுவது யாரை?

கீழ்கள் = கயவர்.

இந்தக் "கயவர்" என்ற சொல்லை மாற்றாகப் பயன்படுத்தி மீண்டும் குறளைப் படித்தால், தெளிவாகும் என்று எண்ணுகிறேன்.

ஆசாரம் = ஒழுக்கம், செல்லும் நெறி.

கணக்கியல் திட்டவட்டமுடையதுபோல (mathematical precision), "=" என்னும் குறியீடு போட்டுப் பொருள்சொல்வது, அறிஞர் சிலரையாவது வியப்பிலாழ்த்தக்கூடும். என்னைப் பொறுத்தவரை ஐயப்பாடொன்றுமின்றிக் கூறுகிறேன் என்று நீங்கள் கொண்டாலும், தவறொன்றுமில்லை.

"என்பது யாதெனின்" என்ற தொடருக்கு ஈடாக அதனைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதால், அவரெழுதியதைக் கணக்கியல் திட்டவட்டத்துடன் பொருள்விளக்கம் செய்யும் எவரும் இன்றில்லை என்பது உண்மைதான். ஆசிரியர்கள் ஓருவருக்கொருவர் மாறுபடுவதினின்று அது தெளிவாகிறது.

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

கயவர் யார், கீழ் யார், கீழ்மகன் யார் என்பது வள்ளுவரால் ஒரு வரையறவாக (definition) இவ்வதிகாரத்திற் கூறப்படவில்லை (அவர் காலத்தில் அது தெளிவாய் இருந்திருக்கும் ) எனினும், திருக்குறளையும் ஏனைத் தமிழ் நூல்களையும் நுணுகியாய்ந்து அதற்கு ஒருவாறு பொருள்கூறுவது இயலாத ஒன்றன்று. நீதி நூல்கள் மிகப்பல தமிழிலுண்டு ஆதலின், அதற்கு மிக்க இடமும் வசதியும் தமிழில் உண்டு என்பதுண்மை.

"=" என்பதற்குப் பதிலாக "≈" என்ற குறியீட்டை நீங்கள் போட்டு வாசித்தாலும், எனக்கு மறுப்பொன்று மில்லை.

இக்காலத்தவர் "கீழ்" என்பதைக் கீழ்ச்சாதி என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடும். . இதன்பொருள் அதுவன்று.

இன்னொரு கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும், கயவர் யார் என்று கேட்பீர்கள் என்று அல்லது, கீழ் என்பது எப்படிக் கயவரைக் குறிக்கும் என்று!   பொருள் தெளிவாய் உள்ளது . 

வியாழன், 3 அக்டோபர், 2013

அதிராகும் தீர்ப்புகளை,,,,,,,,,,,,


சிதறாத‌ சான்றுகளைக் கண்டு கேட்டார்!
அதிராகும் தீர்ப்புகளை ஒவ்வொன்  றாக‌,
ப‌தறாத தூண் ஒத்தார் பதறிப்  போக‌
கதறாத கட்சியினர் கதறி நிற்க,
உதறாமல் கால்கையை‍ ‍ உச்ச  ரித்தார்!
குதறாத வழியர்க்கோ அச்ச மென்ன?
குதர்க்கமிலார் என்றென்றும் எதற்கு மஞ்சார்,
இதற்குவர லாறிதுவாம் நேரம் தானே!

some explanation of the words used:

With ref to post #494:-

சிதறாத - referring here to evidence ( before a court,) which the judge considered to be reliable and not punctured with holes by the defence attorney in cross-examination etc.,

சான்றுகள் - evidence, oral as well as documentary and exhibits.

கண்டு - seen and examined.

கேட்டார்! - heard in hearing session.

அதிராகு - unprecedented.

பதறாத தூண் ஒத்தார் - refers here to the high stature of the accused person,
  கதறாத கட்சியினர் - the political party to which the accused belongs has been taken aback by the court decision. Previously they had never been in such position.

உதறாமல் கால்கையை*- with unshaken resolve to do justice. disregarding the stature of the accused person,
உச்ச ரித்தார்! - made decisions and passed judgment.


 குதறாத வழியர் -  குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள்.  குதறுதல்    messing  up,

இதற்குவர லாறிதுவாம் -    இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாற 

Note: There is some bug here which prevents proper editing.  This will be reviewed  when it is rectified.`



குதறாத ‍ குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள்.  குதறுதல்  

இதற்கு வரலாறிதுவாம்  இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாறு
ஆகும். இதுவேமுதல் என்பது.


சுபாரு வென்பதற் கெதுகை

என் தோழி ஒருத்தி, ஒரு மகிழுந்து வாங்கினாள். எனை உலவ அழைத்துச் சென்றதோடு, அவள் வாங்கிய வண்டியைப் பற்றி வாயாரப் புகழ் பாடிக்கொண்டே ஓட்டினாள். இப்போது எல்லா வண்டிகளும் நன்றாகவே ஓடுகின்றன என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அவள் சொன்னவை, ஒரு மாறுதலாக இருந்தது. அவள் கருத்துகள், இங்கு கவிதையாக.....


சுபாரு வென்பதற் கெதுகை தேடினால்
அபார  மென்பதே அகத்துள் கூடிடும்!

மேலை உலகில் நீள்பயன் அறிந்தோர்
சாலை உலவிடச் சாற்றினர் நன்றென.

வழவழ‌ வென்று சுழலும் இயந்திரம்,
வாடிக்கை யாளர்க்கு வழங்கும் பயன் திறம்.

ஆடா அசையா அழகுத் தேரிது!
மேடும் பள்ளமும் ஏதெனக்  கூறிட.

சொர்க்கம் இலையெனத் தர்க்கம் புரிவோர்
வர்க்கம் சுபாரு வழங்கிட அறிவார்.

வானில வன்ன வண்ண மணமகள்
தேனில வுகந்து தேடுவள் தினமிதை.

வாங்க நினைப்பின் வண்தமிழ் மாலா
நீங்கா நினைப்பினில் வைத்திடு மேலாய்!




மறைந்து வாழ்வது,............

மறைவாம் வாழ்க்கை மாபெரும் வாழ்வென்
றுறைவோர் உலகிற் பலர்இது   நன்றே.

 கவிதையின் பொருள்:

மறைவாம் வாழ்க்கை = பிறர் அறியாமல்,விளம்பரமற்று, மறைந்து வாழ்வது, மாபெரும் = உன்னதமான, மிக உயரிய. உறைவோர் உலகிற் பலர் (இங்ஙனம் ) வாழ்வோர் உலகில் பலர்; இதுவும் நல்லதே எனபது பொருள்.


இப்பாடல் குறள் வெண்பா அல்ல. 



செவ்வாய், 1 அக்டோபர், 2013

kavimaNi on workers (poem)

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை poem on workers

ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள் முதலியன அளித்து தமிழிலக்கியத்தை மேலும் வளப்படுத்திய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் ஓர் அழகிய பாடல். ஏழை எளிய மக்களையும் தொழிலாள உடன்பிறப்புக்களையும் உள்ளத்தில் கொண்டு அவர் பாடியது:

பாடு படுவோர்க்கே--- இந்தப்
பாரிடம் சொந்தமையா;
காடு திருத்தி நல்ல--- நாடு
காண்பது அவரல்லவோ

மனம் திரியாமல்---காலை
மாலை எப்பொழுதும்
குனிந்து வேலை--- செய்வோர்
கும்பி கொதிக்கலாமோ

கோடி கோடியாக---நீங்கள்
குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள்---உண்ணா
வயிற்றுச் சோறல்லவோ

வாழ வேண்டுமெனில்---தொழில்கள்
வளர வேண்டுமையா
ஏழை என்றொருவன்---உலகில்
இருக்க லாகாதையா ( பாடுபடுவோர்க்கே)

சனி, 28 செப்டம்பர், 2013

Many beautiful poems in Tamiz..

எத்தனை எத்தனை இன்கவிகள்
என்னை வாசியென் றோடிவந்தே
ஒட்டிக் கொள்வன இதழ்களிலே‍‍‍............................
அவற்றை
ஒத்திக் கொள் வேன் நெஞ்சகத்தில்.

எண்ணி இருக்கையில் மணிப்பொறியின்
சின்ன முள்ளும் பெரிதினைப்போல்
தின்னும் முடிக்கும் நேரத்தினை!
பின்னும் இமைகள் உறக்கத்தினால்.

கவிமணி தேசிக வினாயகனார்
கவியை எழுத விழைந்ததுண்டு!
குவியும் பற்பல சோலிகளால்
 அவிய‌ ஒழிந்தன நாட்கள்பல.


வானொடு கொஞ்சும் வண்ண நிலா
வாய்த்த இரவினை வளர்த்திடுமேல்
தேனொடு குலவும் தெளிகவியைத்
தேடிப் பாடிடத் திகட்டிடுமோ?


எழுத = பல சுவைக் கவிதைகள் என்னும் திரியில் பதிய அல்லது இட.
மணிப்பொறி  = ‍  கடிகாரம்,   அவிய‌ -- பயனின்றி,  ஒழிந்தன--- ‍சென்றுவிட்டன. வளர்த்திடுமேல் -  நீளச்செய்யுமானால்.

புதன், 25 செப்டம்பர், 2013

மனோன்மணீயம் சுந்தரனார் பாடலுக்கு விளக்கம்

continued from a post on 23.09.13

மனோன்மணீயம்  சுந்தரனார் பாடலுக்கு விளக்கம் இங்கு தொடர்கிறது,

இப்போது  வருபொருள் உரைக்கும் வல்லபம் என்பதனைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் prophecy என்பதற்கு நேரான பொருளையே ஆசிரியர் வருபொருளுரைத்தல் என்று குறிக்கிறார். தமிழில், வரவுரைஞர், முற்றறிஞர் என்று குறிக்கலாம்.தீர்க்கதரிசி :  தீர்க்கமாக (தீர்மானமாகவும் முடிவாகவும்) யாவற்றையும் தெரிந்த இறைப்பற்றாளர். தீர்க்கம் ‍:  தீர அறிதலைக் குறிக்கின்றது. தரிசி ‍ : தெரிந்தவர். (தெரி+சி ). தீர்தல், இங்கு தீர்ந்தது எதுவெனில் ஐயப்பாடு தீர்ந்தது.

வல்லபம் ‍: வல்லவம், திறன். ஒன்றைச் செய்யமுடிந்த நிலை.

இத்தகு வரவுரை திறனைப்  பெற்றிருந்தால்தான் என்ன?  ‍என்கின்றார் ஆசிரியர்.


மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெரு ரகசியங்கள் யாவையும் உணரும்
பெருமையும் ஞானமும்பெறிலென்;

மண்ணிடை விண்ணிடை = மண்ணிலும் விண்ணிலும், அதாவது இவ்வுலகில் எங்கும் எதிலும்; மறைந்த =  நாம் அல்லது யாரும் அறியாமல் மறைவாக உள்ள;  பெரு ரகசியங்கள் யாவையும்= உணரவேண்டிய உள்ளுறைவுகள் எல்லாவற்றையும்; உணரும் பெருமையும் ஞானமும் = மனத்திலறியும் தகுதியும் தான் யார், உலகு எத்தகையது, இறைவன் யார் என்னும் அறிவும்; பெற்றால்தான் என்ன?

இரகசியம் என்பது, முதற்கண் அகத்தில் இருந்து வெளிப்படாததையே குறிக்க எழுந்த புனைசொல் ஆகும். இச்சொல்லில் முதல் மூன்றெழுத்துக்கள் "இரக" என்பது இரு+அகம் என்று பிரியும். நெஞ்சுக்குள்ளே இருந்து இன்னதென்று வெளியில் பிறர் அறியாத நிலை ஆகும். இரக(ம்)+ சி+அம், இங்கு சி,அம் என்பன விகுதிகள். இரகசியம் என்ற சொல்லின் இரகசியம் அதுதான். அறிந்து
இன்புறுங்கள்.

யார் மனத்திலும் இல்லாமல் யாருக்கும் புரியாமல் இருப்பது கூட ஒருவகையில் இரகசியம்தான். மனிதனின் அகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஒரு பொருளில் உள்ளுறைந்து கிடக்கலாம். அப்பொருளில் உள் என்பது அதன் அகமாகும். ஏவுகணை பாய்ச்சுதற்கான அறிவியல் ஆற்றலின் விதிகள் உலகம் தோன்றியது முதலே அவ்வப் பொருள்களில் அமைந்து கிடந்தாலும் அவற்றை இப்போதுதான் கண்டுபிடித்துப் பயன்பாடு காண்கிறோம். கண்டுபிடிக்கப்படும்வரை அவை உள்ளுறைவுகளாக இருந்தன.

பருவதம் எடுத்துப் பந்தென ஆடும்
பத்தியும் சித்தியும் பெறிலென்
பரவனுகூல திருட்டியென் றுரைக்கும்
பண்புறும் அன்பிலை எனிலே

பருவதம் :  மலை. பருவதம் எடுத்துப் பந்தென ஆடும் ‍  :   உலகை ஆட்டிப் படைக்கும்;  பத்தி  :  இறைப்பற்று.  சித்தி : தவ வலிமையால் அல்லது இறைப்பற்றாண்மையால் பெற்ற இயல்பு கடந்த ஆற்றல்கள். பரவனுகூல திருட்டி:  எங்கும் எதிலும் நன்மையே காண்பது.

எனவே அன்பு இல்லையெனில் மற்ற பேறுகளால் பயனொன்றும் இல்லை என்கிறது பாடல். அன்பு வேண்டும், அதில் பண்பும் கலந்திருக்க வேண்டும்  என்பதை அழுத்தமாகச் சொல்வது "அன்புறும் பண்பு"  என்னும் சொல்லாட்சி. ‍


0-0.0-0

.