செவ்வாய், 19 நவம்பர், 2013

நாடு.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 
செல்வரும் சேர்வது நாடு.

ஒரு நாட்டில் வாழும் மக்கள் போதுமான பொருள்வசதி உடையவர்களாக இருக்கவேண்டும். உணவுக்கு ஏங்கும் நிலை இருத்தலாகாது. மேலும் அந்நாட்டில் எல்லா வகையிலும் சிறந்த செல்வர்களும் வாழ்தல் வேண்டும். தீவினை விட்டுப் பொருளீட்டிய செல்வர்களாய் அவர்கள் இருத்தல் வேண்டும் என்று கூறவந்த நாயனார், தாழ்விலா என்ற சொல்லைப் பெய்துவைத்துள்ளார். போதைப்பொருள்களாலும் கொலை களவு முதலியவற்றாலும் உயர்ந்துவிட்டவர்கள் "தாழ்விலாச் செல்வர்" என்னும் கூறுபாட்டினுள் கருதப்படும் தகுதியுடையவரல்லர். பொதுமக்கள் உட்பட அனைவரும் தக்கவர்களாய் இருத்தல் இன்றியமையாதது, உணவு உற்பத்தியுடன் பொருள் உற்பத்தியும் "தள்ளா விளையுள்" என்பதில் அடக்கப்பட வேண்டியவையே. முன்னை உரையாசிரியன்மார் நெல் முதலியவை விளையும் நிலங்கலளை மட்டுமே "விளையுள்" என்று கொண்டாரெனினும் இதுபோது  இக்கருத்து சற்று விரிவுசெய்தற்குரியதே ஆகும். பொருளியல் வளர்ச்சி "தாழ்விலாச் செல்வர்" என்பதுள் அடங்கிவிட்டதென்று கருதுவதும் தவறாகாது. எங்ஙனமாயினும் இக்குறள் விரிவாகச் சிந்திக்கவைக்கும் சொற்புதையலைக் கொண்டதாகும்.

கருத்துகள் இல்லை: