செவ்வாய், 6 ஜனவரி, 2026

குஞ்சு, கிராமம், சமஸ்கிருதத் தொடர்புகள்.

 தலைப்பில் கண்ட ''குஞ்சு''  என்ற சொல்.

ஓரெழுத்து ஒருசொல் என்று யாம் இங்குக் குறிக்க விரும்பும் சொற்கள் பெரும்பாலும் நெடில்  ஆனவை.   வா,  தா , போ முதலிய ஓரெழுத்துச் சொற்கள் இவற்றுள் அடங்கும்.  நாம் குறித்தவை.  நீ என்ற சொல்லும் இத்தகு சொல்லே எனினும், இது வினையன்று.  பதிற்பெயர் ( pronoun )  ஆகும்.  முன்னிலைப் பதிற்பெயர் என்றும் கூறுதற் குரியது இச்சொல். நான் என்பது ஒரு பதிற்பெயர் என்றாலும் இரண்டு எழுத்துக்கள் உண்மையால், அதைத் தனியாகச் சொன்னோம். நான் என்பது இப்போது பேச்சில் மூக்கொலியாக வந்து, ஓரெழுத்துச் சொல் போலவே ஒலிக்கும்.

சங்கதத்தில் பதில் என்பது  தன் இறுதி மெய்யை இழந்து,  பதி என்றாகி,  முதலெழுத்தாகிய ''ப''  என்பது  ''ப்ர''  என்றாகும்.  இறுதியில் ''ப்ரதி''  என்றாகும்.  இதைத் தமிழாக்க விழைந்தால் பிரதி என்னலாம். படி என்பதுதான் ப்ரதி என்றானது என்றும் சொல்வதுண்டு. எனவே ப்ரதி என்ற சங்கதம், சமவொலிச்சொல்.

சங்கதம் அல்லது சமஸ்கிருதம் என்பது சமவொலிச்சொல் என்றால்,  அது ஒரு தனிமொழிச் சொல்  என்பது பொய்மையே. ஆகவே பண்டிருந்தவர்கள், இதை ஒரு வேற்றினத்தவரின் பேச்சு என்று கருதவில்லை. ஒரே இனத்தாரின் வெவ்வேறு வகையான ஒலிப்பு முறை என்று கருதினர் என்பது தெளிவு. ஆகவே சமஸ்கிருதம் எனபது வெளியாரின் மொழி அன்று. அது வெளியாரின் மொழி என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்ட புளுகல். இதை நம்பியே மறைமலையடிகள்,  தேவனேயப் பாவாணர் முதலானோர் தங்கள் வரலாற்று ஓட்டத்து உரைகளை அமைத்திருந்தனர். அப்போது அவர்கள் இருந்த நிலையில் வெள்ளைக்காரன் புளுகிலிருந்து மேலெழுந்து  உரைபகர அவர்களாலும் இயல்வில்லை.  அவர்கள் நிலையில் நாமிருந்திருந்தால் நாமும் அந்தக் கதையில் தான் ஆழ்ந்திருந்திருப்போம்.

ஓரெழுத்து ஒருசொல்,  பல நெடிலானவை.  தனிக்குறில்களும் ஓரெழுத்தாகவே நின்று,  தனிப்பொருள் தரும்.  எடுத்துக்காட்டாக இங்கு கு எனற்பாலதைக் காண்போம்.  கு என்பது குறுக்கம் என்று பொருள்படும்.  கு என்பது சமஒலிச் சொல்லாக ( சங்கதம் அல்லது சமஸ்கிருதம்)  குறுக்கம் என்று கூறினோம் அல்லோமோ?  குக்கிராமம் என்ற சொல்லின் கு என்பது  ஒரு முன்னொட்டாக நின்று '' மிக்கச்சிறிய'' சிற்றூர்  என்று பொருள்படும்.  கிராமம் என்பது பழந்தமிழில் கமம் என்று வரும். கமம் என்பது பல்பொருளொரு சொல். தற்போது கமம் என்பது வேறுசில மொழிகளில் எவ்வாறு வருகிறது என்பதைப் பிற்பாடு கூறுகிறோம்.  கமம் ஒன்றிருந்தால் விளைநிலங்கள் நடந்து சென்றடையும் தொலைவில் அருகிலே இருக்கும். மலாய்மொழியில் கம்-போங் என்ற சொல்லில் கம் - கமம் உள்ளது. கம் என்ற ஆங்கில முன்னொட்டில் கமத்தின் தாக்கம் உள்ளதா?

குன்று என்ற சொல்லிலும் இந்தக் குறுக்கம் உள்ளது.   குன்> குனி என்பதிலும் இந்தக் குறுக்கம் உள்ளது  (குனிதல்).

குன்> குன்+சு >  குஞ்சு  வயதுக் குறுக்கம். உடற்குறுக்கம்.

விரிந்து நில்லாமல் கூடி நின்றாலும் இதுவும் ஒரு குறுக்கம்தான்.  கும் > கும்மி.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.













கருத்துகள் இல்லை: