வெள்ளி, 6 மார்ச், 2026

ரசம் என்பது

 சாப்பிடும் போதெல்லாம்  ரசம் என்பதை மறந்துவிடல் ஆகாது.  இது ஓர் இன்றயமையாத தேறலாக இப்போது இடம்பிடித்துள்ளது.

பலவித மருந்துக் குச்சிகள், இலைகள், இணுக்குகள், கொழுந்துகள், வேர்கள் இன்னும் இவை போல்வனவற்றை வேகவைத்து, இவற்றை இறுத்து, வரும் ரசத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்றி அருந்தும் நீர்க்கலவைக்கு   ''இறசம்'' என்று சொல்வோம்; எனினும் இது ரசம் என்றே வழங்குகிறது.  எழுத்தில் வேண்டுமாயின் இரசம் என்று எழுதலாம்.  இதை இறசம் என்று எழுதினால் இது இறுத்துக் குடித்தலுக்கு ஏற்ற பெயராக  அமைகிறது.

இவ்வாறின்றி,  போட்ட குச்சி முதலியவற்றை நீக்க மீதமாக இருக்கும் நீரின் காரணமாக,  இரு+ சு+ அம் >  இரசம் > ரசம் என்றும் கூறினாலும் பொருந்துவதாகவே தெரிகிறது.

அரைத்து நீருடன் கொதிக்கவைத்து இறக்குவதால்,  அரை+ சு+ அம் >  அரைசம்> அரசம்> ரசம் எனினும் பொருத்தமே  ஆகும்.

அரிய மருந்துப் பொருள்களை வேவித்து இறக்குவதால்  அரு+ சு+ அம்> அரசம் > ரசம் எனினும் பொருத்தமே.

உரைத்து வழித்து நீரிலிட்டுக் கொதிப்பித்து இறக்கி,  அதைக் குடித்தாலும்,உரை+ சு+ அம்>  உரசம்  ( ரை என்பது ர என்றானது ஐகாரக் குறுக்கம்)  உகரம் அகரமான திரிபு வழியாக  ரசம் என்றே  ஆகும்.   உகரம் இகரமாக ஆகும் என்பதை முன்பு நிறுவியுள்ளோம்.  பழைய இடுகைகளில் கண்டு தெளிக.

உரிய மருத்துவம் என்ற பொருளில்,  உரி+ சு+ அம் >  உரிசம்>  உரசம் > ரசம் என்றும்  ஆகும்.

இன்னும் பலவிதமாக வரலாம்.  ஆகவே இதைப்  பல்பிறப்பிச் சொல் என்று முடிக்கவேண்டும்.

நாவில் சற்று உறுத்தலான சுவையுடன் வருவதால்,   உறு+ சு+ அம் > உறசம்>  ரசம் என்றுமாகும்.

உடன் உருப்பட வேண்டின் குடிக்கவேண்டும் என்ற பொருளில்,  உரு+ அ+ சு+ அம் > உரசம் > ரசம் என்றுமாகும்.

சம/ஸ்கிருதம் என்பது தமிழின் இணைமொழியாக வளர்ந்ததே ஆதலின்,  ஆரிய மொழி என்னும்  அயலார் மொழி அன்று.   ஆர் என்ற பணிவுச் சொல் உடையோரான பெரியோர்க்கு உரிய மொழி என்ற கருத்தில்  ஆரிய மொழியாகலாம். இங்கு அனைத்தும் தமிழ் மூலமாகவே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது


புதன், 4 மார்ச், 2026

அருமை என்பதன் உணர்ச்சி எப்போது வந்தது: அருமை, அரு> ஆர்

அருமை என்னும் உணர்வு:

 மனிதனுக்கு அருமையானது ஒன்று என்ற எண்ணம் எப்போது பிறக்கிறது? ஏதேனும் ஒன்று மிக்கத் தொலைவிலிருந்தால்,  அது  அருமை என்ற எண்ணம் எளிதில் வருவதில்லை.  அது அருகில் வந்தபோதே அது அவனைப் பாதிக்கிறது. இதை இன்னும் சிந்தித்து விரிவாக்கலாம்.  ஆனால் இதை விட்டுவிட்டோம். அருகு-  அது குறைந்த போதும் அதன் அருமையை உணர்கிறான்.  எடுத்துக்காட்டாக, குளிருக்குத் தீக்காய்தல் அருமை.  ஆனால் தீ குறைந்துவிட்டால் அதன் அருமை உணரப்படுவதாகிறது. ஒரு மனிதன் மதிக்கத் தக்க பல அருங்குணங்களை உரியவனாகிறான். அதனால் அவன் உணர்ந்து போற்றற் குரியவனாகிறான்.  

அரு என்பது ஆர் என்று திரிதல்:

இப்போது அரு> ஆர் என்று திரிந்து,  வந்தார் (ஆர்), போனார் (ஆர்) என்று அவன்றன் அருமை உணரப்படுகிறது. இதற்கு முன், ஒருவனே அல்லன், பலர் வந்த போது அந்த அருமை உணரப்பட்டது.  நம் வீட்டுக்குப் பலர் வந்தனரே, என்னே அருமை என்று எண்ணிப் பூரித்தான். அரு> ஆர் என்று பலரைக் குறிக்கும் விகுதியாய் அது இருந்தது.  வந்தார்.  (ஆர்).

இதற்கு மாற்றான சிந்தனை என்னவென்றால்,  மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் என்று எண்ணுவது ஒன்று.  கடல், உலகம் என்பன விரிந்தனவாகவும் தொலைவிலும் உள்ளனபோலும்.  மழையும் தொலைவில் பெய்தாலும் அருகில் பெய்தாலும் அன்ன (பன்மையில்).  கலி - மகிழ்வு என்ற உண்டுபண்ணுதற் குறிப்பில்,   ஆர்கலி என்ற சொல் படைப்புறுகின்றது..  ஆர்கலி வாரணம் என்ற தொடரைக் கவனிக்க.  வாரி+அண்+ அம்> வாரணம். இகரம் கெட்டது( தொலைந்தது).

அருணவம்  ( அரு, அண், அவம்).

அருகும்  தொலைவும்

அருணவம்:  அருமை,  அது அருகில் இருந்தாலும்,  (அண்> அண்மை);  அவம் -  அவ் அண்மை கெட்டுத் தொலைவில் இருந்தாலும்.  ஆகவே அருணவம் என்ற சொல் இரண்டையும் உட்படுத்தி அமைந்திருந்தாலும் என்று  அறிக.  அவி+ அம்- அண்மை கெடுதல் அல்லது மாறியமைதல்.

தனிமைச் சுவை உடைய சொற்களைக் கொண்டது தமிழ். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


திங்கள், 2 மார்ச், 2026

பாரியா என்பது

பாரியா என்பது மனைவி என்று பொருள்படும் சொல்.  தமிழில் பெருவழக்கு உடைய சொல்லன்று. அருகியே எழுத்துலகில் பயன்பாடுடையது ஆகும்.

ஆடவனை மணந்துகொண்ட பெண்ணின் உடன்வாழ்வு, கணவனின் உயிர்வாழ்வு முழுவதும்  தொடர்தல் மட்டுமின்றி,  அவனிறந்த பின்னும் தொடர்வதாகும். பிள்ளைகளையும் வளர்த்து மணம் செய்வித்து,  சிறப்புச் செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் உடையவளாகிறாள்.

மணப்பெண் பெரும்பாலும் ஆடவற்கு வயது குறைந்தவளாய் இருப்பாள். அவன் உயிர்வாழ்க்கை முழுவதும் அவனுடன் ''பரவி'' நிற்பதுடன் அவள் கடமைகள் பின்னும் தொடர்வதால்,  ''பர(த்தல்)''  என்ற முதற்பகவு பொருந்துகிறது.  பர(த்தல்) என்பது பார் என்று முதனிலை நீண்டு அமைகிறது.

அவன் வாழ்விடம் இயைந்து செல்வதால்,   இயை - இயா என்ற இரண்டாவது பகவும் மிகப் பொருத்தமுடைய தாகிறது.

இச்சொல் ''பாரியாள்''  என்றும்   -ஆள்  பெண்பால் விகுதி  பெற்றும் வரும்.

பாரியா, பாரியாள், பாரியை என்ற மூன்று வடிவங்களும் ஏற்புடையனவே எனினும்,  பாரியை என்பது சிறந்த சொல்வடிவம் என்பது எம் கருத்தாகும்.

இது மலையாள மொழியில் நல்ல பயன்பாடு காண்கிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 1 மார்ச், 2026

அலங்காரம்

 அலம் புரிதல்  ( அலம்புரிதல்)  என்றால்  அதிகமாகச் செய்தல் என்று பொருள். முகத்தை நன்கு கழுவித் துடைத்தால் அதுவே  அழகு செய்தல் தான்.  அத்துடன் அழகுமாவு அல்லது முகமாவு பூசினால்,  அது இன்னும் அதிகமாகச் செய்தல். ஒவ்வொரு முறையும் சற்று அதிகமாகத் தடவும்போது,  மிகுதி செய்தல் ஆகிறது.  அழகின் எல்லை விரிந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லை கடந்துவிட்டால், தேவைக்கு அதிகம் ஆகிவிடலாம்.  அப்போது அழகின்மை தோன்றவும் கூடும், அன்றி மிக்க அழகு தோன்றினும் தோன்றும். இதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அளவினைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அத்தொழிலில் இல்லாதவனுக்கு இது பற்றித் தெரிந்துகொண்டது ஓரெல்லைக்கு உட்பட்டிருக்கும். நமக்கே யாவும் தெரியும் என்று நினைப்பதும் தவறு  ஆகிவிடக்கூடும்.

இயற்கை அழகு என்பது எல்லார்க்கும் இருப்பதில்லை. சிலர்க்கு அழகின்மை சிலவிடத்து இருத்தல் கூடும்.  அழகுக் கலைஞர்கள் அவ்விடத்தையும் அழகுடைத்தாக மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள்.  ஆளையே வேறு ஒருவராகக் காட்டவும் வல்லவர்கள். நசுங்கிவிட்ட உந்துவண்டியின் மேற்கூட்டினை எவ்விடத்துத் தட்டினால் முன்போல வந்துவிடும் என்ற அறிவை உடையவர்க்கு நல்ல சம்பளம் கிடைப்பதை அறிந்துகொள்வீர்.  

ஆகவே அலம் என்ற சொல்லுக்கு அன்மை கடந்து மேலும் செய்தல் என்று பொருள் கூறுவது நன்றாகும்.

அல் -   அழகு அன்மை.

கு  -  கூட்டிச் சேர்த்தல்.   இது வேற்றுமை உருபாகவும் பயன்பாடு காணும் சொல்.

ஆர்(தல்)  -  நிறைதல். நிறைத்தலுமாம்.

அமை(தல்):   இது அம் என்ற விகுதியால் சுட்டப்படுகிறது.

அலம்+ கு+ ஆர் + அம் =  அலங்காரம் ஆகிறது.   இதன் பொருள்:  அன்மை அல்லது அழகு அன்றான / அல்லதான ஒன்றை  அதனோடு சேர்ப்பிக்கும் முறையினால் நிறைவு செய்து,  அமைவுறுத்துதல்.

தமிழில்,  அலங்கரித்தல் என்பதும் அலங்காரித்தல் என்பதும் காணப்படுகின்றன.  எனவே, அரு என்பதிலிருந்து தோன்றிய அரி,  ஆரி என்ற இரண்டும் கொள்ளற்குரியன. இதை முன்னர் --கரித்தல் என்று பிரித்தனர்.   இது உண்மையில் கு+ அரித்தல் அல்லது கு+ ஆரித்தல் என்பனவின் பிறழ்பிரிப்பே  ஆகும்.. கு என்பதன் உகரம் கெட்டது.  கு என்ற பழஞ்சொல், கெ, கி என்றெல்லாம் கீழை மொழிகளில் வரும். சிலவற்றை இங்கு தவிர்க்கிறோம். கண்டுபிடித்துக் கொள்ளவும். 

அலம்+ கு+ ஆரம்  என்றால் அழகு அல்லாதனவற்றுக்கு நிறைவு செய்தல் என்பது இங்கு கச்சிதமாக வருகிறது.  அதுதான் அழகுறுத்துதல்.  இச்சொல் அலம்+கு+ அரண்+ அம்  > அலங்கரணம் என்றுமாகும் என்பதுணர்க.

பழ > பல என்பதுபோல்,  அழ(கு) >அல என்றுமாவது கண்டுகொள்க.  இதை இங்கு விரிக்கவில்லை.  வேறு இடுகையில் இதை விளக்கலாம்.

புரியாதவிடத்து எழுதிக் கேட்கவும்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

அனுமான், அனுமானம்

 அனு என்ற முன்னொட்டு,  அணுகுதல் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு திரிபு  ஆகும். இதில் ணுகரம்  மாறி,  னுகரம் ஆயிற்று.  இது எதையும் மறைப்பதற்காகச் செய்யப்பட்ட திருட்டுத்தனம் என்று நினைக்கவேண்டாம்.  அப்படி நினைப்பதால் சொல்லியல் ஏதும் சிகரத்தில் ஏறிவிடுவதில்லை.  அணுகு என்பது மற்ற வடிவங்களுடன் இணைந்து சொல்லாகும்போது,  முன்னொட்டு வடிவத்தில் நின்று, இருசுழியுடன் திரிவதால், சற்று இலகு  நிலைபெறுகிறது.  அணு என்ற சொல்லின் பொருளையும் அணுகு என்ற சொல்லின் பொருளையும் நினைவுக்குக் கொணர்ந்து மூளைக்குச் சுமை ஏற்றாமல்,  புதிய சொல்லாக்கத்தின் புதுப்பொருளை முழுமையாகப் பெறுவதற்கு நல்ல வழியை வகுக்கின்றது என்பதை உணரவேண்டும்.  

அனுமான் என்ற சொல்லில்,    அணுகு> அனு- (முன்னொட்டு).  இது கூறினோம்.  மான் என்பதில் மகன் என்ற சொல்லானது, மான் என்று திரிந்தது.  இதற்குரிய சொற்பொருள்:   அணுக்கமான மகன் என்பது.  பிறப்பு என்ற பொருளுடைய மக என்ற அடிச்சொல்லிலிருந்து உண்டாவதால்,   அணுக்கப் பிறப்பு என்று பொருள்.  பழங்காலத்திலே, இவர் மனிதனுக்கு மிக்க நெருங்கிய உருவமைப்புடன் சிறக்கப் பிறந்தவர் என்ற நற்பொருள் கிடைக்கிறது.  அனுமான் என்பது உயர்வுப் பன்மை பெற்று,  அனுமார் என்றபடி வந்திடினும்,  இச்சொல்லை இழிவாக நோக்குவதற்கு எந்தச் சரியான காரணமுமில்லை. இராமபிரானுக்கு மிக நெருக்கமான அவர்,  மனிதருடன் நெருக்கமான உறவுடையார் என்க. இராமருக்கு நெருக்கமுடையார் ஆதலின், இறைப்பற்றினால் எந்த மனிதருக்கும் முன்னே உள்ளவர்.

மான் என்னாமல் மன் எனினும், மனிதன் என்பதன் அடிச்சொல் அதுவாகும். மனிதப் பிறவிக்கு நெருங்கியவர்.

அனுமானம் என்ற சொல்லிலும், அனு என்பது அணுக்கமே பொருளாகக் கொண்டது.   மானம்  என்பது அளவு என்ற பொருள் உடையது எனினும் ஒருவன் ஒன்றை அணுகி உள்ள தகவல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பொருண்மை அல்லது கருத்தளவு ஆகும்.  அனு என்பது அணுகுவதே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


புதன், 25 பிப்ரவரி, 2026

விகிதம் வீதம்

 இந்தச் சொற்கள் ஆய்வுக்குரியவை.

பரிவற்சனம் என்பதற்கு பொருள்கூறுகையில்,  அகரவரிசை ஆசிரியர் கதிர்வேற்பிள்ளை அவர்கள்,  1. கொலை, 2 விகுதல் என்ற இருசொற்களைப் பதிவிட்டுள்ளார். விகுதல் என்பது அருகிவழங்கிய ஒரு சொல்வடிவம் என்று தெரிகிறது.  விகுதல் என்ற சொல் சில அகரவரிசைகளில் பதிவுபெறவில்லை என்று தெரிகிறது.

விகுதல் என்ற வினைவடிவம்:

மிகுதல் > விகுதல் என்ற மகர - வகரத் திரிபாகவும்,

விழுதல் > விகுதல் என்ற வழித் திரிபாகவும்

வரும்.

எடுத்துக்காட்டு:

மிஞ்சு >  விஞ்சு;

தொழுதி -  தொகுதி.  ( திரட்சிக் கருத்து).

மிகு> விகு> விகுதி  ( மிகுதி - விகுதி).

தொகு> தொழு - திரிபு.

புழுதி என்பது பூதி என்றும் திரியும்.

பகுதி என்பது பாதி என்றும்  மிகுதி என்பது மீதி என்றும் திரிவதால்,  விகிதம் என்பது வீதம் என்று திரிவது படியமைந்ததே ஆகும்.  அகலமாகப் பரவி நிற்கும் மரம் ஆலமரம் என்று பெயரிடப்பட்டதையும் நோக்குதல் வேண்டும்.

விழுக்காடு  (விழு)

விகிதம்  ( விகு< விழு)

இவற்றின் தொடர்பும் அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.



ஆதிபத்தியம்

 இந்த இருசொற் புனைவை இப்போது அறிவோம்.

ஆதி என்ற சொல் திருக்குறளில் முதல் பாட்டிலே வந்துவிடுகிறது.  ஆதி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதனை வெளியாரியர் சொல் என்று இருபதாம் நூற்றாண்டின்  தமிழ்ப்புலவர் எவ்வாறு நம்பினர் என்று எண்ணிப்பார்க்கையில் விந்தையாக உள்ளது.  அந்நாட்களிலே,  புலவர்கள் சிலர் சற்றுத் தயக்கத்துடனே அது ஆதல் என்ற வினையிலிருந்து தி என்னும் விகுதி புணர்த்து எழுந்த சொல் என்று சுட்டிக்காட்டினர். இதற்கு முன்னரே இங்கு,  சொல்லாக்கத்தில் அல்லது புனைவின்போது, சொல்லின் பகவுகள் ( உள்ளுறுப்புகள்) தமிழ் அடிச்சொற்களாய் இருந்தால், அஃது தமிழ்ச்சொல்தான் என்று எழுதியிருந்தேம்.1

( அஸ்தி ,  ஆஸ்தி என்ற என்ற சொற்கள்  ஆதி என்பதனோடு தொடர்பு பட்டவைபோல் ஒலிப்பின் காரணமாகத் தோன்றினாலும்,  கருவில் அஸ்தி (எலும்பு)  முந்தித் தோன்றியதாய்  எண்ண ஆதாரமில்லை.  விந்து என்னும் நீர்ப்பொருளிலிருந்தே  தோற்றம் ஏற்படுகிறது.  )

ஆதி என்னும் சொல்  ஆதல் என்னும் வினையடியாய்த் தோன்றியது.  இச்சொல்லுக்கும் இந்தோ ஐரோப்பியத்துக்கும் தொடர்பு கிட்டவில்லை.

பத்தியம் என்ற சொல்லில், பற்றி இயலுதல் என்பதே பொருள். கூடுமானவரை, சொல்லிலுள்ள அடிகளை வைத்தே சொல்லை விளக்கவேண்டும் என்பது எமது கொள்கையாகும்.  ஆகவே ஆதிபத்தியம் என்பது உண்மையில் ஆதி பற்று இயமே ஆகும்.  இச்சொல் தமிழுடன் மிகுந்த தொடர்பு உடையதே  ஆகுமாறு உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


---------------------------------------------------------------------------------------------------------

இருந்தேம் - இது இருந்தேன் என்பதன் தன்மைப் பன்மையாக இங்கு கையாளப்படுகிறது. 

செனக்ஸ்  என்ற இலத்தீன் சொல்,  பழைமை,  பயின்ற முதுமையுடையது என்பது சொல்லப்படுகிறது.   செந்தமிழ் என்ற சொல், இந்தச் சொல், தமிழ் என்பதனுடன் தொடர்பு பட்டபின் பழமை குறிக்கக்கூடும்.  சென்-, சென்றது என்பனவும் பழமை குறிக்கலாம்.  நீங்கள் எழுதி தெரிவிக்கவும்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

கிழமை ( மற்றும் கிழவன், கிழவி என்பவும்)

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று சிறிது காண்போம்.

கிழங்கு என்ற சொல்லை  ஆய்ந்தால்,  அது கீழ் என்ற அடிச்சொல்லினின்று பிறந்தது எனற்பாலது நன்கு புலப்படும். கீழ் + அம்+ கு > கிழங்கு என்றாகும்.  கீழ் என்ற சொல்லில் கீழ் என்பது (கீ)  நெடிலில் தொடங்கினாலும்,  சொல்லாக்கத்தில் நெடிலான கீ,  குறிலாகிவிடுகிறது.(கி). இப்படிப் பெயர்ச்சொல் ஆனவுடன் முதலெழுத்து குறிலாகிவிடும் பல.

கிழங்கு என்பது கீழ் என்பதிலிருந்து தோன்றியது போலவே,  கிழமை என்ற சொல்லும் கீழ் என்பதிலிருந்து வருகிறது.  கிழங்கு என்பது வேர்.  கிழவி கிழவன் என்போரும் குடும்பத்தின் வேர் போன்றவர்களே. செடியின்  இலை, இணுக்கு என அனைத்தும் மண்ணுக்கு மேலிருப்பவை. இது மரம் கொடி அனைத்துக்கும் ஒக்கும்.  பிள்ளைகளும் பின் தோன்றல்களும் அப்படியே.  வேரானது செடிக்கு உரிமை, உரிமையும் அவ்வாறே. இதனால் கிழமை என்பது உரிமை குறித்தது.

கிழவன், கிழவி என்போரும் உரிமையானவர்கள் என்றே பொருள்தரும்.  பிற்காலத்து இதை மறந்து, இச்சொற்களுக்கு  முதியோன், முதியோள் என்ற பொருள் ஏற்பட்டுவிட்டன.

கிழத்தி என்பதும் உரிமை உடையாள் என்ற  பொருள் உடைய சொல்லே. இல்லக் கிழத்தி,  காதற்கிழத்தி  என்று வருவனவுக்கும் அவ்வாறே பொருள் கொள்க.

வெள்ளிக்கிழமை என்றால் வெள்ளிக்கு உரிய நாள்.  இவ்வாறே பிறவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.





புதன், 18 பிப்ரவரி, 2026

கானம் என்ற சொல்.

 கானம் என்ற சொல்லினை இங்கு ஆய்ந்து காண்போம்.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குகிறது,   சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது. கன்னல் என்ற சொல் கரும்பைக் குறிக்கிறது.  கன் என்பதே இதன் அடிச்சொல்.

கன் > கனி   ( விகுதி இ ).  பழம்,  இனிமையானது என்பது பொருள்.

கனைவரிவண்டு  என்பது  கேட்பதற்கு இனிய ஒலியினை எழுப்பிக்கொண்டு பறந்து திரியும் வண்டு. வரிகளும் உடையது.

கன் > கனி.

கன் > கனை.  இனிய ஒலி எழுப்பு.  ந ந என்பது இசை ஒலி,

கா என்றால் தொடர்வரவாதல். கா, மற்றும் ந இரண்டும் இசை ஒலிகளும் ஆம்..

கா-  காத்தல் என்றால்  தேவையான அளவில் இடர் இன்றிப் பாதுகாத்தல். இனிய ஒலி காக்கப்பட்டுத் தொடர்வரவாதலே  இசை.

கா -  நா >  கானம்  ( அம் விகுதி வந்து) கானம் ஆகிறது.  காத்து நாவில் வைக்கப்படுவது. நா என்பதற்குப் பதில் கா+ இன்+ அம் என்பன,  இன் குன்றி ன் என்றே நின்று,  கானம் என்று வரின்,  இன் என்பது  இனிமை என்று கொண்டு,  காத்து இனிமையினால் வைக்கப்பெறுவது என்று முடிக்கலாம்.  இதுவும் பொருத்தமே ஆகும்.

கனத்த இருள்,    கனை  இருள்.  இது முழுமை குறிக்கும்.  முழுமையும் இனிமையே.  திணிந்த இருள்.  திண்> திண்மை.

இனி குறில் நெடில்  பற்றிக் கூறின்,  வா என்ற ஏவல்,  குறுகி வந்தான் என்றாகிறது.    தா என்பது தந்தான் என்றாதல் காண்க. தாள் என்ற சொல்லிற் பிறந்த  சொல்  தளம் என்று குறுகும். குப்பை சேர்ந்திருத்தல் குள் > கூளம் ஆகிறது. தண்ணீர் சேர்ந்திருத்தல்  குள்> குளம் ஆகிறது. இது போதும்.  பழைய இடுகைகளையும் படிக்கவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை



திங்கள், 16 பிப்ரவரி, 2026

சுதர்சன் என்பதன் பொருள் தமிழ் மூலம்

 சுதர்சன் என்ற சொல், தொன்றுதொட்டுத் தமிழிலும் வழக்குடைய  சொல். பெரும்பாலும் விட்ணுவையும் குறிக்கக்கூடும்.  அழகுடையது,  தோற்றப்பொலிவு கொண்டது என்பர். இதில்  சு, தர்ஷன் என்ற இரண்டு சொற்கள் உள.  

தெய்வ தெரிசனம் என்ற தொடரில் தெரிசனம் ( தெரி+ சன்+ அம்) என்றால் தெய்வம், தெய்வச்சிலை முதலானவை கண்ணுக்குத் தெரிவது அல்லது காட்சி தருவது.  தெரிதல் என்ற வினை தமிழ். இது தர்ஷன் என்று தமிழல்லாத இந்திய மொழிகளில் திரியும்.  சன் என்பது  சு விகுதியும் அன் விகுதியும் இணைந்த இணைப்பு.  சு என்பது சுற்றிலும் அல்லது சூழவும் என்ற பொருளது. அதன் ஒரு சொற்குறுக்கம்:  இங்கு கடைக்குறை போல்வது,  முன்னொட்டாக நின்றது. சு என்பது நாளடைவில் சுபம் அல்லது தீங்கற்றது, மேலானது என்று பொருள்வரத் திரிந்தது. இரண்டும் இந்திய மொழிகள் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது.

இங்கு கண்டவற்றை  விரித்து உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வியாழன், 12 பிப்ரவரி, 2026

சர்வம் என்பது

 இதைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு எழுதியுள்ளோம்.

https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_8.html

ஒரு சரிவில் கொட்டிய நீரனைத்தும் சரிவினடிக்குச் சென்றுவிடுவதால், அடியிற் சென்று மீட்டாலன்றி, எல்லாம் ஓடிவிட்டது என்றுதான் சொல்வர். சரிவிலிருந்து மீட்டல் அரிய ஒன்றே ஆகும்.  இதன் அடிச்சொல் சரு என்பதுதான்.  அரு> சரு> சருவு> சருவம்> சர்வம் என்றானதுதான் இச்சொல். சரு என்பதற்கு முந்திய அடி அரு என்பது கூறினோம். மீட்டல் அரிது  என்பதை அரு என்ற அடி காட்டுகிறது. சரிதல் என்பது  சொன்னவன் பக்கம் சாய்ந்துகொள்வது என்ற பொருண்மையால் ஒத்துக்கொள்ளுதலும் உணர்த்துகிறது.

சர்வம் என்பது சமஸ்கிருதம் என்று வைத்துக்கொள்வோம்.  அப்படியானால் அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லா நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம் என்றாகும்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஜீவன் என்ற சொல்.

 ஜீவன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது சீவித்தல் என்று வினையாகவும் வரும். இதற்குப் பல சொல் தோற்றங்கள் சொல்லப்பட்டிருந்தாலும்,  இதைத் தமிழ் மூலத்தது என்று  ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.

மனிதன் இறந்தபின் மீண்டும் மறுபிறவி கொள்கிறான் என்பது ஒரு கொள்கையாகும். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதார் பலராயினும், நம்புவோரும் பலராவர்.  Lobsang Rampa முதல் பலர் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மறுபிறவி உண்டென்று கூறுவர்.  தமிழ்ச் சங்க காலத்திலும் மறுபிறவி நம்பிக்கை உடையோர் பலர் இருந்தனர்.

உயிர் >  யிர் >  ஜிவ் > ஜீவன்,  ஜீவித்தல் என்று வருதல் கூடுமென்பர். இது இலங்கை ஆய்வாளரின் கருத்து. (1)

சீர் வருந்ந >  சீவன்ன  > சீவன் என்று வருதலும் கூடுமென்க.

சீர் மிக்கது என்பது புவி வாழ்வே என்பது இதன் கருத்தாக,  உயிர்> உசிர்> சீர்> சீர்வன்ன >  சீவன் என்றாகுமென்ப.

சிர் > சீர்,  வருந்ந என்பது வருகின்ற  என்பது. இன்று என்ற சொல் இன்னு, இன்னக்கி என்றெல்லாம் பேச்சுமொழியில் வருகிறது. ஆகவே வருகின்ற என்பது வருகின்ன -  வருன்ன ,  இதில் வரு என்பது வ  என்று குறுகும்.  வரு என்ற மூலவடி,  வந்த என்ற இறந்தகால வடிவத்தில், தன் ருகரமிழந்து, வந்த  எனவாதல் அறிக. சீவன் என்பதில் இந்த வன் மட்டும் உள்ளது.  வந்> வன். இதில் அன் விகுதிபோலும் அழகு வந்துவிட்டபடியால், அதையே இறுதிநிலை ஆக்கிவிட்டனர்.

வரு என்ற வினைப்பகுதியும்  வருந்து என்ற வினைப்பகுதியும் இவற்றின் காலவினைத் திரிபுகளுடன் கலந்து மயங்குமாறு விளைதல்,  தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

உயிர் என்ற சொல்லே ஜீவன் என்று வந்தது என்று பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

தலைச்சொல் இழக்கை (தலை எழுத்து இழக்கை) பல சொற்களில் வந்துள்ள காட்சி ஆகும். எ-டு:  அரங்கன் - ரங்கன். இனி ரங்கா என்பது விளிவடிவம்.  பண்டை நாட்களில் கீழே நெடுஞ்சாண்கிடையாக  விழுந்தோ, நின்று முன்வாட்டாகச் சாய்ந்தோ வணங்கிய கடவுள், ''சாய்மி''   என்பது சாமி  ஆயிற்று.

சமஸ்கிருத மொழிச்சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திலும் கலந்துள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

[இலங்கைப் பன்மொழிப் புலவர்,  ஞானப்பிரகாச அடிகள், SJ  அவர்களின்

ஆய்வும்  கவனத்தில் கொள்ளப்பட்டது. (1) ]   எம் முன்னோர் சிங்கையில் 

பதிப்பித்த புதிய உலகம் மாத இதழ் இவர்தம் மாணவர் பணடித  

சேகரம்பிள்ளை அவர்களால் பதித்து வெளியிடப்பட்டது.



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சந்தா வாய்தா

 இப்போது சந்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

இந்தச் சொல்லில் இரண்டு பகவுகள் உள்ளன.  ஒரு சொல்லின் பகுதிச் சொற்களைத் தாம் பகவுகள் என்று குறிக்கின்றோம். பகவுகள் ஆவன:

அண்> சண்> சண்+தா> சண்தா > சந்தா  ஆகும்.  இதைச்

சண்> சம்>  சந்தா  என்று குறிக்க, இன்னும் தெளிவாகும்.

முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்கையில்  சண்+தா> ச ண்டா என்று வல்லொலி மிக்குப் புணரும்.  சொல்லாக்கத்திலும் கூட இவ்வாறும் வருவதுண்டு. எடுத்துக்காட்டாக,  அண்> சண்>  சண்டை.  இறுதியில் வந்த ''தை'' விகுதி: சொல்லாக்கப் புணர்வில், டை என்று மாறிவிட்டது. தை என்பது இதில் விகுதி யன்று, விகுதி டை தான் என்று வாதிட்டாலும்,  இந்த வாதத்தினால் எந்தப் பெரும்பயனும் விளையப்போவதில்லை. இருவழிகளிலும் இதனை விளக்குதல் கூடுமென்று வைத்துக்கொள்வதில் ஒன்றும் இழுக்காது என்றுணர்க. மொழியில் போதுமான சொற்களின் தொகுதி வேண்டுமென்று முயற்சி செய்யும்போது, இதை எல்லாம் நுணுகி  ஆய்தலினால் பயன் இல்லை. 

''நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் 

பயனில  சொல்லாமை நன்று''

என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கினை சிரமேற் கொள்க.

சண்+தை,  சண்+டை என்ற இரண்டு சொற்களிலும், ஒரே அடியிலிருந்து இரண்டு சொற்களைப் படைத்தளித்தல்  திறனே என்று கொள்க.  விகுதிகள்தாம் மாறின.   அடுத்துச்செல்லாமல் சந்தையு மில்லை,  சண்டையும் இல்லை.

பண்டைக் காலத்தில்,  அடுத்துச் சென்றுதான் பணம் கட்டினர்,  சந்தா என்பதற்கு அதுவே பொருள்.  வாய்தா என்பதற்கும் அதுவே பொருள்.  இடம் என்றால் அதற்கு இன்னொரு சொல்: வாய்.  இச்சொல் பலபொருள் உள்ள சொல். இடத்திற்குத் தந்தது  வாய்-தா.   தா என்பது முதனிலைப் பெயராய்த் தருபொருள் குறித்தது.

வாய்தா என்பது  :  வாய் - இடம்;  தா-  தருவது. முதனிலைத் தொழிற்பெயராய், இங்குச் சொல்லின் பகவாய் வந்தது.  நிலவரிக்கு இது பெயராய் வந்து,  இங்கு வாய் - என்பது இடம் என்று பொருள்படும் தமிழ்.   அப்புறம் வாய் என்பது வாயென்னும் முக உறுப்பையும் குறிப்பதால்,  வாயினால் கேட்டுப்பெறுவது என்றும் பொருள்பட்டது. இது அரபுக்களினுடன் ஏற்பட்ட தொடர்பினால்  அங்கும் சென்று வழங்கி,  அரபுச் சொல் என்றும் நினைத்தனர்.

பல தமிழ்மூலங்களை அரபு மொழியிலும் காணலாம்.  அல் காதிப்  என்போர் முன் காலத்தில் தமிழரிடை இருந்த காப்பியக் குடியினர் போல,  நூல்கள் ஓதும் வகுப்பினர்.   ஸ்க்ரைப்  (scribes)  என்று ஒரு குடியினர் இஸ்ரவேலரிடம இருந்தமை போலும் இது. பழைய யூத புராணத்தையும் படித்து இதை அறிந்துகொள்ளலாம்.  பாரிசிகள்,  சாதுசிகள் என்றவர்களும் இருந்தனர்.  Dead Sea Scrolls என்ற நூலையும் படியுங்கள். C J Buckle SJ  எழுதியவையும் படிக்கலாம்.

Sadusee என்ற சொல்லுக்கும்  சதை என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஏதும் நீங்கள் தொடர்பு அறிகிறீர்களா என்பதை எமக்குச் சொல்லுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 2 பிப்ரவரி, 2026

விளக்கமார் என்னும் பேச்சுச் சொல்

 விளக்கமார் என்னும் பேச்சுச்சொல் .

இந்த ''விளக்க-மார்''  என்னும் சொல்  நாம் தமிழ் பேசுகின்ற போது நாம் வழங்கும் சொல்லாகும்.  இந்தச் சொல் பிடிக்கவில்லை என்றால், இதே போன்ற பாணியில் அமைந்த ''கூட்டுமார்''  என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலா9ம். செவிக்கினிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற  கொள்கை உடையவர்களும் உள்ளனர். மனிதன் பேசும் அனைத்துச் சொற்களும் நாவிலிருந்து அல்லது அஃது இயங்கும் வாயிலிருந்து வரும் சொற்கள்தாம். அதாவது இவை நாவொலிச் சொற்கள். இவற்றை ஒலிவடிவச் சொற்கள் என்று இலக்கண நூலார் கூறுவர்.

இந்தச் சொல்லில் வரும் மார் என்ற வடிவம், மலார் என்று அகரவரிசை யுடையாரால் பதிவு செய்யப்பட்டுளது.  மாறு என்பதும் காணப்படுகிறது.  ஆகவே கூட்டுமாறு, கூட்டுமார், விளக்கமார்,  விளக்கமாறு என்று பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. மாறு என்பதும் துடைப்பத்துக்கு வழக்கில் இருந்துள்ளது. 

மலார், மலாறு, மிலாறு என்பவற்றோடு மார் என்பதையும் கூட்டியுரைக்கத் தோன்றுகிறது. மிலார் என்ற வடிவமும் உண்டு.  ''மிலார்கள் தம்மில் பொலிந்தன பவளக்காய்கள்'' என்று பாரதிதாசனார் கவிதையில் வருகிறது. இந்த வடிவமும் அகரவரிசையில் இருந்திருக்கக் கூடும்.  மாறு என்றால் துடைப்பம் என்ற பதிவும் காணப்படுகிறது. எல்லா அகரவரிசைகளையும் பார்க்குமளவுக்கு நூல்கள் கிட்டவில்லை.

மலார் என்பது சிறு கிளைகளை அல்லது குச்சிகளைக் குறிக்கும் சொல். இது மிலார் என்றும் திரியும் என்பது கூறப்பட்டது. மலார் என்றது   பேச்சில் மார் என்று திரிந்துள்ளது. பாத்திரங்களை விளக்குவதற்கு அல்லது துடைத்து அழுக்ககற்றி  வைப்பதற்கு மலார்கள் பயன்பட்டன.  இந்தச் சிறிய இணுக்குகள் மென்மையானவை.  மெல் என்ற அடிச்சொல்லினின்றே  மலார் என்ற சொல்லின் தொடர்பினதான  மில் வருகிறது.  மெல்-மல்- மலார் என்ற திரிபு காணக்கிடக்கின்றது.   அர் என்பது அரு என்பதன் திரிபு.  அரு>அர்.  அரு என்பது சிறு வடிவினவாயவற்றையும் குறிக்கும். மெல்>மில்>மிலார்.   அர் இங்கு ஆர் ஆனது.  அர்> ஆர்: வந்தனர் (அர்> ஆர்) என்பதால் வந்தார். ஆர் என்பது, பன்மையும் ஆகும்.  வந்தார் என்பது பண்டைத் தமிழில் பன்மை, இன்று ஒருமையையும் குறிப்பது  வழுவமைதி என்றனர். மிலார்கள் அருகருகில் இருப்பவை,  அதனால் பொருந்துகின்றன. மிலாறு என்பது மலார் என்றும் வந்துள்ளது.

பழைய இடுகைகளில் பல திரிபுகள் காட்டப்பெற்றுள்ளன.  மெல்>மில்>மிலார்>மிலாறு என்பவற்றோடு கூறப்பட்ட பிறவும் தெளிவாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 30 ஜனவரி, 2026

சமர்ப்பித்தல் என்பது.

 சமர்ப்பித்தல் என்ற சொல் எவ்வாறு அறிந்துகொள்வது.

அமைத்தல் என்ற சொல்லின் அடியுடன்,   அருமை குறிக்கும் அர் என்ற அடிச்சொல்லும் இனைந்திருப்பதுதான் அமர்(தல்) என்ற சொல்.  அர்> அரு> அருமை, அரிய, அரிது என்பவெல்லாம் உண்டாயின.  அர் என்ற சொல் உயர்ந்தோருக்குரிய பன்மை விகுதியாகவும் வழங்கிவருகிறது. தகுதியான முறையில் ஓரிடத்திருத்தலைத்தான் அமர்தல் என் கிறோம்.

அம் > அமை> அமைதல்.

அம்>  அம்மை> அம்மா( விளிவடிவம்).

அம்> அமிழ்.  அமிழும் போது பொருள் கீழ்நோக்கி இறங்குகிறது.    அம் > அமர்: அமரும்போது நிற்பவன் கீழ் நோக்கி உடலைக் கொண்டுபோய் உட்காருகிறான். அமையும்போது நன் கு இருப்புக்கொள்வதாக வரும் போது, அமைந்தது என்று சொல்கிறோம்.  அம் என்பதுடன் ஐ என்ற உயர்வு குறிக்கும் பழைய அடிச்ச்சொல்லும் சேர்ந்து வருவதை உணர்ந்துகொள்க.

அமர்தல் என்ற சொல்லில் அம், அர் என்ற பழைய அடிகள் உள.  அமர்ந்தால், உடல் தரைக்கு அருகில் செல்கிறது.  ஆகவே தரைக்கும் தலைக்கும் உள்ள இடம் குறுக்கமடைகிறது.   அரு> அருகுதல் என்பது குறைதலைக் குறிக்கும், குறுக்கத்தைக் குறிக்கும்.  ஆணவமுதலிய கேடுகள் குறைவதும்  இதில் குறிப்பாக  உள்ளது. உட்கார் என்ற சொல்லிலும்  ஆர் என்பதும்  அரு> ஆர் என்று திரிந்து அமைந்ததே.   உட்கு என்பது உள்+கு என்பதுதான். நிலம்நோக்கி உடல் செல்வது உட்செல்வது போன்றதே.  உள்+ கு  என்பது இக்கருத்தே. இதிலிருந்து அமர் என்பதில் வரும் அர் என்பதற்கும்  உட்கார் என்பதில் வரும் ஆருக்கும் உள்ள உறவினை நல்லபடி அறிந்தின்புறலாம்.

அமர் என்ற சொல்லே சமர் என்றபடி வருகிறது.    அமணர்- சமணர் என்பதுபோல் வரும் திரிபே இது.  சமர்> சமர்ப்பி என்பது,  ஒன்றைப் பெரியோனின் இடத்தில்  அமரும்படி  செய்வதுதான்.  அதாவது இயல்பான மொழியில் சொல்வதானால்  அமர்விப்பது.  இருப்பிப்பது.  இவ்வாறு அமைந்த சொல்தான்  சமர்ப்பித்தல் என்பதாகும்.

சமர்ப்பித்தல் என்பது அருமையான தமிழ்ச்சொல் ஆகும். இந்த  உயர்வான வழக்கில் இது பயன்பாடு காணும் சொல்லாய் இருப்பதால்,  இது ஒரு அரசவைச் சொல் ஆகும்.  பண்டை அரசவைச் சொற்கள் எல்லாவற்றையும் நாம் அறிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்வதற்கில்லை.  அதற்கு இன்னும் ஆய்வுகள் முடுக்கிவிடப்படுதல் வேண்டும்.

இச்சொல் சமகதம் அல்லது சங்கதம் என்னும் சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது.  சமஸ்கிருதம் என்ற தமிழுக்குச் சமமான ஒலிகளையுடைய மொழி என்பது பொருள். ஒலிமேம்பாடு என்று கருதாமல் அடிப்படை ஒலிகளை மட்டும் கொண்டால்  சம ஒலி மொழிதான் சமஸ்கிருதம்.  சம ஒலி என்பது பெரும்பான்மை பற்றி வந்த பெயர். எல்லாம் ஒன்றாக இருந்தால் அது வேறு மொழியாக இருக்காது.  ஆகவே வேறுபாடுகள் இருக்கும்.

மொழியின் அமைப்பு பற்றிய முழு அறிவும் திரிபுகளைப் பற்றிய தெரிவும் இல்லாத காலத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் குறையுடையவையாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இங்கு சொல்லப்பட்டதுபோன்ற தெளிவுரைகள் அப்போது எழுதிற்றிலர் என்பதையும் உணர்க. உணரவே, இங்கு சொன்னவற்றின் ஆழம் அறியலாகும்.

தமிழ் அரசாட்சி நெடுங்காலம் நடைபெற்றது என்றாலும்,  தமிழ் அரசியற் சொற்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை.  விளக்கங்கள் இன்னும் எவரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.  ஆனாலும் சமர்ப்பித்தல் என்பது ஓர் அரசியற் சொல். அதனை இங்குக் காட்டியுள்ளோம். உமக்கு இதைப்பற்றிய ஆய்வறிவு உண்டாயின் நீர் உம் கருத்துக்களை எழுதி ஒரு நூலாக வெளியிடுக. அதனால் தமிழுலகு பயன்பெறும்.

யாம் மேற்கோள் காட்டுவதற்கு தமிழ் அரசியற் சொற்கள் என்ற பெயரில் ஒரு நூலிருப்பதாகத் தெரியவில்லை.  இருந்து உமக்கும் தெரிந்தால்  அதனை எமக்குத் தெரிவிக்கவும். வெற்றுவாய் வீச்சினால் பயன் ஒன்றும் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

செவ்வாய், 27 ஜனவரி, 2026

சிறிய வீடானாலும் சிறந்த பூக்கூடை ( கவிதை)

 சிறிய வீடானாலும் 

சிறந்தபூக் கூடையிலே

நறியபூ தமைநிறுத்தி

நாற்புறமும் மின் தீபம் 

உரியகண் பார்த்திடவே

உலையாத நன் கவினாம்

அரியவித் திருநாளில்

அகமகிழ்வு பெருகுவதே.


பொருள்:-


நறிய - நறுமணம் வீசுகிற

மின் - மின்னாற்றலினால் ஆன

உலையாத -  கலையாத, அழிதலில்லாத

அரியவித் திருநாள் -  வரும் 2026 புத்தாண்டு





பொம்மைகள் அலங்கரிப்பு

சனி, 24 ஜனவரி, 2026

பிரளயம் இது பிறழ் வினையிலிருந்து.

 பிரளயம் என்ற சொல் சமஸ்கிருதமா?

பிரளயம் என்பது இயற்கை நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, அழிவும் ஏற்படுவது ஆகும்.  பிரளயங்களில்,  தினப்பிரளயம் என்பது பிரம்மனின் ஆயுளில் ஒரு நாளின் முடிவில் ஏற்படுவது  ஆகும். தினந்தோறும் நிகழ்வதால் நித்தியப்பிரளயம் என்றும் கூறப்படுவதாகும். நைமித்திகப் பிரளயம் என்பது பகல் முடிந்ததும் நிகழ்வது.  அவனது வயதில் நூறாண்டுகட்கு ஒருமுறை ஏற்பட்டால் பிர்மப்பிரளயம் எனப்படும். அழிவுகள் ஏற்படும் முறைகளை அறிந்துகொள்ள மனிதன் முற்பட்டது மிக்கப் பாராட்டுக்குரியது என்று சொல்வோம்.  நமது பண்டை மக்கள், ஆய்வு மனப்பான்மை உடையவர்களாய் இருந்து இப்படிச்  சொற்களைப் படைத்திருப்பது நமக்கும் ஒருவழிகாட்டுதல் என்றே கருதவேண்டும்.

தற்போது நடைபெற்றுவரும் ஆய்வுகளில் முற்செலவை  இம்முறை கைக்கொண்டு அவற்றுக்குரிய சொற்களைப் படைக்கும் திறத்தை நாம் பெறுவது நிகழ்தல்,  இன்றியமையாது வேண்டப்படுவதென்க.

பின்றுதல் என்ற வினைச்சொல் பின் என்பதிலிருந்து வருகிறது. பின்றுதல் என்பதற்கும் பிறழ்தல் என்பதற்கும் பொருண்மைத் தொடர்பு மிக்குள்ளது என்று அறிக, உன் செலவுகள் பின்றாமல் பேணிக்கொள் என்றால் ''பிறழாமல் பேணிக்கொள்''  என்று பொருள்.

பிறழ்தல் என்பது புரள்தல் என்றும் வருவதுதான்.  இது பேச்சுவழக்கில் நன்கு வழங்குகிறது என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.

பிறழ் என்பது பிரள்(தல்) என்று மாகும்.   பிரளயம் என்ற சொல்,  பின் காட்டிய சொல்லினின்று வந்தது ஆகும்.  பிறழயம் என்று வருதல் இல்லை யாதலால்,  பிறழ் என்பது பிரள் என்று மாறிய பின்பே பிரளயம் என்ற சொல் உருவாகும் என்பதை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 19 ஜனவரி, 2026

புராணம் என்பதென்ன

 புராணம் என்பதென்ன என்று வினவிக்கொள்கிறோம். இதற்கு நாம் கண்டுபிடிக்கும் விடையிலிருந்து  புராணம் என்ற சொல்லுக்கு  அந்தச் சொல் புனைந்த காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்று அறிந்துகொள்வோம்.

ஓர் இறைக்கதையை எடுத்துச் சொல்கிறவன்,  உரிய நிகழ்வினைக் கேட்டறிந்து கூறுகிறவனாகில், தான் அறியாமற் கழிந்தவை போக எஞ்சியவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு,  அந்தக் கதையைப் புனைந்து உரைப்பவனாகிறான்.  

புனைதல் என்பதென்ன?  புனையரணம் புராணம்.இந்தச் சொல்,  னை என்னுமெழுத்தும் யகரமும்  கெட்ட ( அல்லது நீக்கப்பட்ட) சொல்லாகும்.  இந்தச் சொல்லும் புனைவுச்சொல்லே. அல்லது தானே மக்களிடம் திரிந்த சொல்லெனினும் அதுவும் கூடுவதே. பு(னைய)ரணம்>> புரணம்>  புராணம்  ஆனது.  இது இரண்டு எழுத்துக்கள் மறைந்த இடைக்குறைச் சொல். எழுத்துக்கள் வேண்டுமென்றே விடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை என்பர்.  மூவுழக்காழாக்குத் தினைதந்தாள் என்றதை மூழாக்காழாக்கு  என்று திரித்தால், அது தொகை ஆகும். இவ்வாறு சொல்லின் முழுமையும் அறிந்தோர் தமிழரே. பிறர் சொற்பர் ஆவர்.

இனி இன்னொரு பிறப்பும் இச்சொல்லுக்குக் கூறலாம்.  இலக்கியத்தை, கவிதையை, இறைவரலாற்றை, நடந்தனவற்றை உள்ளபடி காத்து வைப்பதற்கு ஆனவற்றை  எழுதிவைக்க ,  புர+ அணம் >  புராணம் என்று சொல்லமைந்தது என்னில்,  அதுவும் கூடுவதே.  

இச்சொல்லை முன்னரே  ஆய்ந்தோ ஆயாமலோ, அமைப்புக் கூறினவர்களும் உள்ளனர். அவர்கள் பழையன காத்தல் என்ற பொருளில் புராணம் ஆகும் என்றனர்.  அதையும்  சிந்தித்துக்கொண்டால்,  இச்சொல் ஒரு பலபிறப்பி என்று கொள்ளவேண்டும். பிற கூறினோரும் உளர். அவற்றை அவர்தம் நூலிற் காண்க.

புராணம் என்றால் பழமையானது, பொய்யுரை என்ற பொருளில் இங்கு எதுவும் கூறப்படவில்லை என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 16 ஜனவரி, 2026

மூலியம், மூலிகை ( அவன் மூலியமாய்....) சிறு அலசல்.


கதிர்வேலுப் பிள்ளை என்பவர் ஒரு சிறந்த அகரவரிசைத் தொகுப்பாளர். அவரை நினைவு கூர்வோம்.

========================================================================
தமிழர் நாகரிகத்தின் பழமையான சான்றுகள் இப்போது தமிழ்நாட்டில் அகழ்வாய்வின் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சொல்:  முல் > முன்.  சொல்லாக்கங்கள்:

முல் >  முலை  (முன்னிருப்பது)

முல் > முன் ( லகர னகரப் போலி)  

முன் >  முனை ( முன்னிருப்பது). 


சொல்லின் முதல் நீளுதல்:

முல் >  மூல் > மூலம்.    மூலம் என்பதில்  அம் விகுதி வந்தது.  பழு> பழம் என்பது போலும்.

மூல் >  மூலிகை.  ( இ, கை).

மூல் > மூலியம் ( பேச்சு வழக்குச் சொல்). வழக்கு என்றால் பயன்பாடு.

(மூலியம் -  வழியாக, மூலமாக என்று பயன்பாட்டுப் பொருள்)

இது பலபொருட் சொல்.  through, means, price, payment  (see dictionary). etc.

மூலிகன் -  செடி. ( தவசி).

இப்போது மூலிகை என்ற சொல் மட்டும் வழங்குகிறது.  மூலிக்கை என்ற சொல்லும் உள்ளது. இது மருந்து மூலிகைகளைக் குறிப்பது.

மூல்+ இ+ அம் என்பவற்றில் இ - இடைநிலை, அம் - இறுதிநிலை;  இறுதிநிலையாவது விகுதி.   மிகுதி =  விகுதி  ( மி - வி  திரிபு).

விகு - விகுத்தல் என்ற சொல் இருக்கலாம் என்றாலும் பழைய நூல்களிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  விஞ்சு > < மிஞ்சு திரிபு எனில் அமையும்.

வியாழன், 15 ஜனவரி, 2026

அகஸ்துமாத்து, அல்லது அகஸ்மாத்து

 காரணம் இல்லாமல்  என்பதை அகஸ்துமாத்தாக அல்லது அகஸ்மாத்தாக  என்பர்.

ஒரு காரணம் என்பது  எப்போதும் மனத்தில் இருப்பது.  அந்தக் காரணத்தை,  காரியத்தைச் செய்பவன் அல்லது காரியத்தினால் பாதிப்புற்றவன் வெளியில் சொன்னால்தான் பிறரும் அதை அறிந்துகொள்ளவேண்டிவரும்.  நடப்பிலிருந்து ஊகித்துக் கொள்வதாய் இருந்தாலும் ஊகித்தவன் வெளியிட்டாலன்றி பிறர் அறிதல் கடினம்தான்.

இந்தச் சொல்லில் மாற்று என்பது  மாத்து என்று வந்தது,  மக்கள் பயன்படுத்தும் முறையில் சொல்லமைந்ததைக் காட்டுகிறது. காரணம் இருக்கும் என்னும் மனத்தினருக்கு அதற்கு மாறாக சம்பவம் நடந்ததையே இது காட்டுகிறது.

அகத்து -  உள்ளமைந்த காரணம் உண்டென்று எதிர்பார்ப்பவருக்கு,  மாத்து =  மாற்றமாக  ( நடந்தது  என்பது_.

அகத்து என்பதே அகஸ்து என்று வந்துள்ளது. பேச்சுத் திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

துவைத்தல் ஏசுதல் இரண்டையும் வைத்து ஒரு சொல் புனையமுடியுமா?

 சொல்புனை  பயிற்சி ஒன்றை இப்போது நடாத்தி, தமிழை மேலும் அறிந்துகொள்வோம்.

துவைத்தல் என்பதொரு சொல். இதைச் சொன்னவுடன் துணியைத்  துவைத்தலென்பதே நினைவுக்கு வருகிறது.  இந்தச் சொல் ஒலி எழுப்புதல் என்பதையும் குறிக்கும்.   ஒலி எழுப்புதலைக் குறிக்க மட்டும்  ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுடன் துவைத்தல் என்பதும் சேர்ந்து தமிழ் வளம் காட்டுகின்றது. உலகில் மிகப் பழைய மொழி,  உலகின் மிக்கச் செழுமையான மொழி என்பதில் எந்த ஐயப்படுமில்லை.

ஒலித்தல் - அரற்றல், அரம்பல், அலறல், அழுங்கல், அர்த்தல், ஆலல், இசைத் தல், இடுத்தல், இமிர்தல், இமிழ்தல், இயம்பல், இரங்கல், இரட்டல், இரைத்தல், இணைத்தல், உறற்றல், உறைத்தல், உலம்பல், உழம்பல், உளைத்தல், ஏங்கல், கதித்தல், கரைதல், கலித்தல், கறங்கல், களைத்தல், குமுறல், குரைத்தல், குளிறல், சலித்தல், சிதைத்தல், சிம்பல், சிரத்துதல், சிலம்பல். சிலும்பல், சிலைத்தல், ஞெள்ளல், தழங்கல் , துவைத்தல், தெவிட்டல், தெழித்தல், தொளித்தல், நரலல், நரற்றல், பயிறல், பிளிறல், பிறங்கல், புலம்பல், முரவல், முரற்றல், முழங்கல், விம்மல்.

மொழியைப் பண்படுத்தி வளமாக்கி வைத்துக்கொள்வதற்கு வேண்டிய அரசியல் நிலைத்தன்மையும் ஆட்சி ஒழுங்கும் தமிழ்மக்களுக்கு இல்லாதிருந்தால் இந்த வளத்தை எட்டிப் பிடித்திருக்க இயலாது.

அரட்டுதல் என்ற சொல் ஒலிஎழுப்புதலுடன் அதை அதிகாரத்துடன் செய்தலையும் குறித்ததால்,  ஆட்சியாளனைக் குறிக்கும் அரசன் என்ற சொல் அதிலிருந்து வந்தது.  அரட்டன் என்பது அரசனுக்குத் தமிழில் பழைய பெயர். அதிலிருந்து உலகின் பல மொழிகளில் அரசனுக்கான பெயர்கள் அமைந்தன. ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் இதிலிருந்து வந்தது.   ராணா,  ராணி என்பவையும் இதிலிருந்தே வந்தன.  ராவ் என்ற பட்டப்பெயருக்கும் இதுவே அடிப்படை. ராவ் என்பதும் ராய் என்பதும் இவற்றினின்று புறப்பட்டன.

சரியான தண்டனை போல ஒருவனைப் புடைத்து ஒன்றைத் தெளிவாக்கினால் வெளுத்துக் கட்டிவிட்டார் என்று சொல்வது வழக்கமாய் உள்ளது. துவைத்தல் என்பதும் இப்படி ஒருவனைத் தண்டிப்பது போல் அறிவுறுத்துவதைக் குறிக்கும்.  ஆனால் அத்துடன் அவனை ஏசவும் செய்தால், அதற்கு இன்ன்னொரு சொல் வருகிறது.  துவேசித்தல் என்பது அது.  ஏசித்தல் என்பதை ஏச்சினையும் சேர்ப்பித்துக்கொள்வதைக் குறிக்கும்.  துவை+ ஏசித்தல் > துவேசித்தல் என்ற சொல் இதற்கு வருகிறது..  இச்சொல் சமஸ்கிருத ஒலியமைப்பில் நன்கு ஒளிசெய்கின்றது என்பதைக் காணலாம்.

துவை + ஏசுதல் >  துவை+ ஏசித்தல் > துவேசித்தல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 9 ஜனவரி, 2026

அதிசயம் என்பது தமிழ்?

 அதிசயம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

பொருள்கள் உலகில் தோற்றமளிப்பது மூலப்பொருள்கள்  அல்லது ஆக்குவதற்குரிய பொருள்கள் இசைந்து அல்லது இணந்து  சிறத்தலாலேதாம்.

தண்ணீரில் தீ எரிவது ஓர் அதிசயம்  ஆகலாம். அது நடைபெறுவதற்கு எவ்வெப் பொருள்கள் சேர்ந்தன அல்லது கலந்தன என்பதே கேள்வி ஆகும்.

அதி + இசை(வு) +  அம் >   அதி + இசை+ அம் >  அதிசயம்  ( திரிபுச்சொல்).

அதி +  சை + அம் >  அதிசயம்  ஆகும்.

அதி இசை என்பதில் உள்ள இகரம்  ஒழிந்தது.

சை என்பது ச என்றானது ஐகாரக் குறுக்கம்.

அதிகம் என்ற சொல்லும் தமிழ்தான்.   அது இகத்தல்  என்றால் அது மீறுதல் அல்லது  கூடுவது.   மிகுதியாவது.  அது இக >  அதிக.

இது குறைச்சொல்லாய்  அதி என்று முன்னொட்டாகும்.   சொற்களிலும் வரும்.

தமிழ் இயன் மொழி.  மிக்கத் திரிசொற்களை  சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிடுவது இயன்மொழிக்கு உயர்வு தரும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது.  ஆனாலும் தொல்காப்பியர் காலத்திலே திரிசொற்கள் புகுந்துவிட்டன. 

இயற்சொற்கள் மட்டுமே கொண்டு மொழி நடைபெறுமானால் அஃது நல்லதுதான்.  தனித்தமிழ்   இனிமை மேலோங்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.


செவ்வாய், 6 ஜனவரி, 2026

குஞ்சு, கிராமம், சமஸ்கிருதத் தொடர்புகள்.

 தலைப்பில் கண்ட ''குஞ்சு''  என்ற சொல்.

ஓரெழுத்து ஒருசொல் என்று யாம் இங்குக் குறிக்க விரும்பும் சொற்கள் பெரும்பாலும் நெடில்  ஆனவை.   வா,  தா , போ முதலிய ஓரெழுத்துச் சொற்கள் இவற்றுள் அடங்கும்.  நாம் குறித்தவை.  நீ என்ற சொல்லும் இத்தகு சொல்லே எனினும், இது வினையன்று.  பதிற்பெயர் ( pronoun )  ஆகும்.  முன்னிலைப் பதிற்பெயர் என்றும் கூறுதற் குரியது இச்சொல். நான் என்பது ஒரு பதிற்பெயர் என்றாலும் இரண்டு எழுத்துக்கள் உண்மையால், அதைத் தனியாகச் சொன்னோம். நான் என்பது இப்போது பேச்சில் மூக்கொலியாக வந்து, ஓரெழுத்துச் சொல் போலவே ஒலிக்கும்.

சங்கதத்தில் பதில் என்பது  தன் இறுதி மெய்யை இழந்து,  பதி என்றாகி,  முதலெழுத்தாகிய ''ப''  என்பது  ''ப்ர''  என்றாகும்.  இறுதியில் ''ப்ரதி''  என்றாகும்.  இதைத் தமிழாக்க விழைந்தால் பிரதி என்னலாம். படி என்பதுதான் ப்ரதி என்றானது என்றும் சொல்வதுண்டு. எனவே ப்ரதி என்ற சங்கதம், சமவொலிச்சொல்.

சங்கதம் அல்லது சமஸ்கிருதம் என்பது சமவொலிச்சொல் என்றால்,  அது ஒரு தனிமொழிச் சொல்  என்பது பொய்மையே. ஆகவே பண்டிருந்தவர்கள், இதை ஒரு வேற்றினத்தவரின் பேச்சு என்று கருதவில்லை. ஒரே இனத்தாரின் வெவ்வேறு வகையான ஒலிப்பு முறை என்று கருதினர் என்பது தெளிவு. ஆகவே சமஸ்கிருதம் எனபது வெளியாரின் மொழி அன்று. அது வெளியாரின் மொழி என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்ட புளுகல். இதை நம்பியே மறைமலையடிகள்,  தேவனேயப் பாவாணர் முதலானோர் தங்கள் வரலாற்று ஓட்டத்து உரைகளை அமைத்திருந்தனர். அப்போது அவர்கள் இருந்த நிலையில் வெள்ளைக்காரன் புளுகிலிருந்து மேலெழுந்து  உரைபகர அவர்களாலும் இயல்வில்லை.  அவர்கள் நிலையில் நாமிருந்திருந்தால் நாமும் அந்தக் கதையில் தான் ஆழ்ந்திருந்திருப்போம்.

ஓரெழுத்து ஒருசொல்,  பல நெடிலானவை.  தனிக்குறில்களும் ஓரெழுத்தாகவே நின்று,  தனிப்பொருள் தரும்.  எடுத்துக்காட்டாக இங்கு கு எனற்பாலதைக் காண்போம்.  கு என்பது குறுக்கம் என்று பொருள்படும்.  கு என்பது சமஒலிச் சொல்லாக ( சங்கதம் அல்லது சமஸ்கிருதம்)  குறுக்கம் என்று கூறினோம் அல்லோமோ?  குக்கிராமம் என்ற சொல்லின் கு என்பது  ஒரு முன்னொட்டாக நின்று '' மிக்கச்சிறிய'' சிற்றூர்  என்று பொருள்படும்.  கிராமம் என்பது பழந்தமிழில் கமம் என்று வரும். கமம் என்பது பல்பொருளொரு சொல். தற்போது கமம் என்பது வேறுசில மொழிகளில் எவ்வாறு வருகிறது என்பதைப் பிற்பாடு கூறுகிறோம்.  கமம் ஒன்றிருந்தால் விளைநிலங்கள் நடந்து சென்றடையும் தொலைவில் அருகிலே இருக்கும். மலாய்மொழியில் கம்-போங் என்ற சொல்லில் கம் - கமம் உள்ளது. கம் என்ற ஆங்கில முன்னொட்டில் கமத்தின் தாக்கம் உள்ளதா?

குன்று என்ற சொல்லிலும் இந்தக் குறுக்கம் உள்ளது.   குன்> குனி என்பதிலும் இந்தக் குறுக்கம் உள்ளது  (குனிதல்).

குன்> குன்+சு >  குஞ்சு  வயதுக் குறுக்கம். உடற்குறுக்கம்.

விரிந்து நில்லாமல் கூடி நின்றாலும் இதுவும் ஒரு குறுக்கம்தான்.  கும் > கும்மி.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.













சனி, 3 ஜனவரி, 2026

உற்பத்தி :

 உற்பத்தி என்னும் சொல்.

இயற்கையில்,  ஒரு கரு தாயின் கருப்பையில்  '' உள் பற்றி'' யபின்  வளரத் தொடங்குகிறது.   இதனை ஆய்ந்துணராமல்,  உற்பத்தி என்பது தமிழன்று என்று மயங்கியோரும் உளர். சரியான சிந்தனை செய்யாமையே காரணம் ஆகும்.  உற்பத்தி என்பது இந்த இயற்கை விதியை அறிந்த சிற்றூரான் அமைத்து வழங்கிய சொல். 

இதையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். https://sivamaalaa.blogspot.com/2013/11/blog-post_20.html.

இதற்கு வேறு வகைகளிலும் அமைப்பு அறிவிப்பாருண்டு.  எனினும் இதுவே இதன் உண்மைப் பொருளை நன்கு  அறிவிக்கும் விளக்கமாகும்.

விதைகள் கொட்டைகளிலும் உள் பற்றிய பின்புதான் வளர்ச்சி உண்டாகிறது.

சிலர் வெளியில் பற்றியபின் வளர்வனவும் உண்டு என்னலாம்.   சில நுண்மிகள் ஒன்றன் வெளியில் பற்றியபின் வளர்கின்றன என்னலாம்.  வழக்கில் வெளியில் பற்றுதலும் உற்பத்தியில் அடங்கும். இதைத் தனியாக விளக்கவேண்டின் ''வெளிவளரி''  என்று ஒன்று வழங்கிக்கொள்ளலாம்.  ஏற்புழி அவ்வாறு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.