அனு என்ற முன்னொட்டு, அணுகுதல் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு திரிபு ஆகும். இதில் ணுகரம் மாறி, னுகரம் ஆயிற்று. இது எதையும் மறைப்பதற்காகச் செய்யப்பட்ட திருட்டுத்தனம் என்று நினைக்கவேண்டாம். அப்படி நினைப்பதால் சொல்லியல் ஏதும் சிகரத்தில் ஏறிவிடுவதில்லை. அணுகு என்பது மற்ற வடிவங்களுடன் இணைந்து சொல்லாகும்போது, முன்னொட்டு வடிவத்தில் நின்று, இருசுழியுடன் திரிவதால், சற்று இலகு நிலைபெறுகிறது. அணு என்ற சொல்லின் பொருளையும் அணுகு என்ற சொல்லின் பொருளையும் நினைவுக்குக் கொணர்ந்து மூளைக்குச் சுமை ஏற்றாமல், புதிய சொல்லாக்கத்தின் புதுப்பொருளை முழுமையாகப் பெறுவதற்கு நல்ல வழியை வகுக்கின்றது என்பதை உணரவேண்டும்.
அனுமான் என்ற சொல்லில், அணுகு> அனு- (முன்னொட்டு). இது கூறினோம். மான் என்பதில் மகன் என்ற சொல்லானது, மான் என்று திரிந்தது. இதற்குரிய சொற்பொருள்: அணுக்கமான மகன் என்பது. பிறப்பு என்ற பொருளுடைய மக என்ற அடிச்சொல்லிலிருந்து உண்டாவதால், அணுக்கப் பிறப்பு என்று பொருள். பழங்காலத்திலே, இவர் மனிதனுக்கு மிக நெருங்கிய உருவமைப்புடன் சிறக்கப் பிறந்தவர் என்ற நற்பொருள் கிடைக்கிறது. அனுமான் என்பது உயர்வுப் பன்மை பெற்று, அனுமார் என்றபடி வந்திடினும், இச்சொல்லை இழிவாக நோக்குவதற்கு எந்தச் சரியான காரணமுமில்லை. இராமபிரானுக்கு மிக நெருக்கமான அவர், மனிதருடன் நெருக்கமான உறவுடையார் என்க. இராமருக்கு நெருக்கமுடையார் ஆதலின், இறைப்பற்றினால் எந்த மனிதருக்கும் முன்னே உள்ளவர்.
மான் என்னாமல் மன் எனினும், மனிதன் என்பதன் அடிச்சொல் அதுவாகும். மனிதப் பிறவிக்கு நெருங்கியவர்.
அனுமானம் என்ற சொல்லிலும், அனு என்பது அணுக்கமே பொருளாகக் கொண்டது. மானம் என்பது அளவு என்ற பொருள் உடையது எனினும் ஒருவன் ஒன்றை அணுகி உள்ள தகவல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பொருண்மை அல்லது கருத்தளவு ஆகும். அனு என்பது அணுகுவதே.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக