சனி, 20 ஜனவரி, 2024

தெய்வமாகிய இராமபிரான்

இராமன் அரசனாய் இருந்து தெய்வநிலை எய்தியவர். நிறத்தில் கறுப்பர்.  தமிழ்நாட்டினோடு தொடர்புடையவர். அவரைப் போற்றும் வரிகள் இவை: 

எப்படி அவர் தெய்வம் என்பதை இவ்வரிகள் விளக்குபவை: இவர் அவரும் அவர் இவரும் ஆவார்,  காரணம் இராமர் எங்கும் உள்ளவர். எனவே அவர், இவர் என்று இரண்டும் அவரைக் குறிக்கும்.


இராமன்என்ற,  நாடாண்ட தியாகச் செம்மல்

அரண்காட்டில் வனவாசத்  தடங்கி வாழ்ந்தார்

இராஇருளாம் இவற்றில்இர அடிச்சொல்  தன்னில்

இருந்தஇருள் நிறத்தைத்தான்  அறிந்தீர் அல்லீர்

பொருமனத்து வெள்ளையனா  ரியனே  என்றான்

போக்கற்றான் பொய்யினையே ஏற்றுக் கொண்டீர்

இராமனைநீர் பராவுதலை ஒழித்தீர் உண்மை

இவர்கறுப்பர் உறவாளர் தமிழர்க் காமே.


வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்தார் தெய்வம்

வள்ளுவர்சொல் அமுதாகும் தள்ளப் போமோ?

தெய்வமான அரசரொரு  பொய்யாச்  செல்வம் 

தேயமெலாம் மேவிடுதே  ஒப்பிச்  செல்வீர்

தொய்வதொரு வழுவாகும் கனியிற் கொய்யா,

துலையற்ற  தொல்சிறப்பின் தோன்றல் இன்னார்

வையவெழும் நாவினுக்கும்  தொய்யும் தேகம்

வெய்யபகல் காய்புழுவாய் வேண்டீர் யாரும்.


தமிழ்நாட்டின் அண்டையிலே அரசு செய்தார்

தமிழ்நாட்டின் உறவாளர் என்ப  தாலே

அமிழ்த்திடுதல்  ஆகாதே அவரை நாமும்

அறந்தாங்கி அவர்பாதம் வழியில் தாங்க

இமிழ்முந்நீர் இராமேசு  வரமே சென்றார்

இதுசான்றாய் ஒளிசெய்ய, வதையொன் றில்லை

தமிழீழம் பின்னாளில் அமைந்த தண்டைத் 

தமிழர்க்கே  புலத்தொடர்பு தந்த  வாறே.


அவர்தரித்தார்  மானிடனாய்  அவத ரித்தார்

அவர்சிறந்த ஒண்மனிதர் பின்தெய்  வம்தான்

அவர்நாமம்  நாவிலெனின் அருள்செய் கின்றார்

அலையுமிடம் எங்கெனினும் காவல் ஆவார்

சுவர்ப்படத்தில் நம்தாத்தா பாட்டி எல்லாம்

சொருகிக்கொண் டனரேமேல் சொர்க்கம் தன்னில்,

இவர்கள்போல் அவரும்மோர்  தேவன் தானே.

அவர்கடவுள் எனிலடுத்த படிமேல்  அன்னார்.


இராமநாமம் வாழ்க



கருத்துகள் இல்லை: