உங்களுடன் வணிகத் தொடர்பும்* வரத்தக உறவும்** வைத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், தொடக்க அணுகுதலுக்குப் பின் வேண்டாமென்று நகர்ந்து விடலாம்; அல்லது ஒரு சிறு தொகையைச் செலுத்தி அவ்வணிகத்தைத் தொடரலாம். ஓர் ஒப்பந்தம் தொடங்கி விட்டதா என்பது சட்ட ஆய்வுக்கு உட்பட்டது.
*தொடர்பு என்பதை ஒருமுறையே நிகழும் ஒன்றுகூடலையும் **உறவு என்பதை பல உடன்படிக்கைகளில் ஈடுபடும் நெடிய செயல்தொகுப்புகளையும் சுட்டுமாறு இங்கு எழுதியுள்ளோம்.
மேற்கூறிய இந்தச் சிறு தொகையை நம் தமிழில் அச்சாரம் என்போம்.
அடுத்துச் சேர்வது அல்லது சார்வது என்பதுதான் அச்சாரம். சேர்><சார். இச்சொற்கள் ஒரு பொருளன.
அடுச்சாரம் என்பதில் டுகரம் வீழந்தது. வல்லின எழுத்து களைவுண்டது. இதற்கான காட்டுக்கள் முன் இடுகைகளில் காண்க.
நம் முன்னோர் ஒப்பந்தச் சட்ட நுணுக்கங்களை அறிந்திருந்தனர் என்பதையே இது காட்டுகிறது.
அச்சாரம் என்பது உடன்பாடு நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்று (evidence) ஆகும். உடன்பாடு என்பது இரு சாராரிடமும் ஏற்பட்டுள்ள சட்டவியல் உறவுமுறையை உணர்த்தும் ஓர் மனவொருமையைக் குறிக்கும். கொடுக்கப்படும் அச்சாரம் இதைக் காட்டும். அச்சாரம் என்பதை அடுத்துத் தொடர்தல் என்று பொருள்விரித்தல் ஏற்புடைத்தாகும். இதனால் அடு+ சாரம் என்பது பொருட்பொதிவுள்ள சொல்லாகிறது. அடு என்பது முதனிலைத் தொழிற்பெயர் ஆகும். அதாவது விகுதி ஏலாமல் பெயராவது. சார்+அம் என்பது சார்தல் என்று பொருள்தரும் அம் விகுதித் தொழிற்பெயர். டுகர மறைவு இடைக்குறை ஆகும். தமிழர் என்போர் இறப்பிலும் பாடித் தன் இரங்கலை உணர்த்தும் பண்பாட்டினர். இன்று நாணம் காரணமாக யாரும் ஒப்பாரி வைப்பதில்லை. சொற்களை நீட்டுதலும் குறுக்குதலும் பாவலர்க்குத் தொல்காப்பியமுனிவர் வழங்கிய உரிமம் ஆகும். இஃது அவர்கள் அமைத்த சொற்களிலும் காணக்கிடக்கின்றதென்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
குறிப்பு:
அச்சாரம் ( இன்னொரு முடிபு) https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_3224.html பார்க்க. ( also அச்சகாரம்).
(ஆக, இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கப்படலாம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக