வாசுகி என்பது பெண்ணின் பெயராய் தமிழில் வழங்கி வருகிறது. இந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு விளக்கங்கள் பற்பல உள்ளன. இவற்றில் ஒன்றாவது நீங்கள் உகப்பதாய் இருக்கலாம். அவ்வாறாயின் இருக்கட்டும். எமது ஆய்வின்படி இங்கு ஒன்றினை யாம் வெளியிடுகின்றோம்..
வாசுகி என்ற பெயரில் வள்ளுவருக்கு மனைவி இருந்தாள் என்ப. இதை யாம் இங்கு தொடவில்லை. வாசுகி என்ற சொல்லை ஆய்வதன்றி வேறு குறிக்கோள் யாதுமிலது.
இந்தச் சொல்லில் வாய் என்பதும் உகம் என்பதுமாகிய இரு உள்ளுறை சொற்கள் உள்ளன.
வாய் எனில் பல், நாக்கு முதலியவை அடங்கிய உறுப்பு. இதற்கு இடம் என்ற பொருளும் உள்ளது. தோற்றுவாய் என்ற சொல்லில் வாய் என்பது இடம் என்ற பொருளைக் கொண்டுள்ளது.
உகம் என வேறு சொற்களும் உள்ளன. அவை: உகம் = யுகம்; உகம் - உலகம்; பூமி; உகம் - பாட்டு; இவை இங்கு கருதப்படவில்லை.
உகத்தல் வினையில் உக என்பது விரும்பு எனும் பொருளது. உகி என்பது விரும்பும் ஒருவரைக் குறிக்க வழங்குதற்குரியது. உக+ அம் > உகம், உகம்+ இ > உகி. அம் கெட்டது.
வாய்+ உகி > வாயுகி> வாசுகி ஆகிறது.
யகர சகர வருக்கத் திரிபு. யு>சு
ஒப்பு நோக்க, எ-டு: வாயில் - வாசல்.
பேச விரும்புகிற பெண் என்பது பொருளாய்க் கொள்ளலாம். வாழ்ந்த இடத்தை விரும்பிய பெண் என்பதும் ஏற்புடைத்தே ஆகும்.
பெண்ணின் பேச்சில் சுவை காண்போரும் உளர். ஆதலின் இப்பொருளும் ஏற்றதுதான்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக