ஞாயிறு, 18 ஜூலை, 2021

கவலையைத் தீர்ப்பது இறைப்பற்று,

உங்களுக்கும் எத்தனையோ வேலைகள்.  இந்நிலையில்,  கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்று வாதிட்டு நேரத்தை வீணாக்கவேண்டாம்.  உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள்,  ஆனால் வேலைகளக் கவலைகளாக மாற்றிக்கொள்ளவேண்டாம்.  கடவுள் இருப்பதாகவே பாவித்து,  சூடன் சாம்பிராணி கொளுத்திக் கும்பிட்டுக் கொண்டிருந்தாலும்,  நல்லதுதான்.  செலவு ஊதுபத்தி சாம்பிராணிக்கு!அந்த நேரத்தை அப்படிச் செலவிடாமல் வெளியில் போய்ச் சண்டைகளிலும் கொரனாத் தொற்றுத் தொடர்புகளிலும் ஈடுபட்டு ஏன் துயரத்தை வரவழைத்துக் கொள்கிறீர்?  சூடன் சாம்பிராணிக்குச் செலவு என்றால் வேறுவழிகளும் உள்ளன.  தியான வழிபாடு செய்யுங்கள். (ஊழ்குதல்). செலவு ஒன்றுமில்லை.  ஆனால் புகை இல்லை என்றால் கொஞ்சம் கொசுத்தொல்லை ஏற்படலாம். பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் மதப்படி பின்பற்றுங்கள். நன்மை உங்களுக்குத்தான்.  இறையுணா  [ பிரசாதம் ]  உட்கொள்ளுங்கள் ( நீங்களே சமைக்கலாம், நேரமிருந்தால்.).  மனம் என்பது கவலைகளின் வங்கியாக மாறிவிடக்கூடாது.  நீங்கள் செய்வது எதுவும் உங்களுக்கு நல்லதாக அமையவேண்டும்.  அதன் பலன் உங்களுக்குத் தானே வருகிறது.  குடித்துவிட்டு ஆடும் இடங்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் வாழ்வு மலரவேண்டும்.

இதுதான் இந்த வரிகளை எழுதக் காரணம். இதைத்தான்  இவ்வரிகள் முழங்குகின்றன.



கடவுளைக் காணாய்நீ -- -- -  அதனால்

கவலை  ஏனுனக்கு,     --- மனிதா!

அட எத்  தனைகவலை ----  சேர்த்தே

இந்தக் கவலையும் வேண்டுவதோ?


இருப்பதாய்ப் பாவிக்கிறாய் ---  பணிந்தபின்

எழுந்து இன் சோறுனக்கே ,

பருப்புடன் சமைத்ததுவோ  ---- ஆன்மப்

பசிக்கும்  உணவதுவே.


பழங்களால்  மாலையிடு ---  பலவும்

பாடுக   பாராட்டி.

வழங்கி வண்மைதரும் ---  உள்ளம்

வந்துவிடும் உனக்கே. 


கவலைகள் காப்பகமாய் ---- உன்மனம்

காசினியில் தவித்தால்

உவகை தருவாழ்வினை ----  நீயும்

ஒத்து நுகர்வதெங்கே?


சோடனை செய்வது எப்படி?  தெரிந்துகொள்க





அரும்பொருள்:


பாவிக்கிறாய் -  பாவிக்கவேண்டும் என்பது

இறைவன் நாமம்  -  பாவன நாமம்.  இறைமை  மறைவாக உள்ளது.  கண்ணுக்குத் தெரியவில்லை. காதுக்கும் கேட்கவில்லை.  உற்றும் அறியமுடியவில்லை.  நறுமண வடிவில்லை - மூக்கினை எட்டவில்லை.  நாவிலும் இனிதா, கசப்பா என்று அறியமுடியவில்லை.  ஐம்புலன்களுக்கும்  அப்பால் உள்ளது அது.  இறைவனின் ஐந்தொழிலில் " மறைத்தலும் " ஒன்று.   மறைவாக இருக்கிறது.

இருக்கிறது என்று தொழுவதில் உனக்கு நட்டம் விளக்கு, ஊதுபத்திச் செலவுதாம்.  எப்படியானாலும் போகும் காசு போய்த்தான் தீர்கிறது.

இதில் மிச்சம் பிடித்தேன் என்பான். அவன் வாழ்க்கையை
ஆராய்ந்தால் கடனில் இருப்பான்.

சிவன் நாமம்,  முருகன் நாமம்,  அம்மையின் நாமம் எல்லாம் பாவன நாமங்கள்.  நாமம் ஒன்றும் அவனுக்கில்லை என்கிறது சைவசித்தாந்தம்.  இந்த நாமங்கள் கடவுளை அறிதற்கு நம் மொழியில் நாம் பயன்பாடு செய்யும் நாமங்கள்.

நாவில் பயில்வது நாமம்.

பாவன நாமத்தை ஒரு பொழுதாவது பாவனை செய்வீர்.

நன்மையே நல்கும் அது.


.
வண்மை -  வளம்

காப்பகம் -  பொருள் அடையும் இடம்.

காசினி - உலகம்.

நுகர்தல் - அனுபவித்தல்

 

கருத்துகள் இல்லை: