செவ்வாய், 13 ஜூலை, 2021

மாலும் மாரியும் ( திருமால், மாரியம்மன்).

 திருமாலும் மாரியம்மனும் தெய்வங்களாக வழிபடப் படுபவை. இந்த இடுகையில் இவர்களிடையே உள்ள சொல்லமைப்புத் தொடர்பினை ஆய்வினுக்கு எடுத்துக்கொள்வோம்.  தொன்ம வரலாற்றில் இவர்களுக்கிடையில் உறவுமுறைகள் உள்ளன.  அவற்றை விரித்துரைக்கும் நூல்களும் இடுகைகளும் இணையத்திற் கிட்டுவன ஆதலின் ஈண்டு நாம் அவற்றினை எடுத்துரைத்தலில் ஈடுபடுதல் வேண்டாதது  ஆகும்.

மால் என்பது திருமாலைக் குறிக்கும்.  இவர் பலரால் விரும்பிப் போற்றப்படும் தெய்வம்.  திருமாலுக் கடிமைசெய் என்பது  தமிழில் ஆட்சிபெற்ற ஒரு வாக்காகும்.  இவருக்கு இந்திரைகேள்வன் என்ற பெயரும் உளது.  இதன்பொருள் இலக்குமியின் கணவர் என்பதாகும்.  உலகளந்தான் என்றும் பெயர் கூறுப.  சிறுபாணாற்றுப்படை (205).  "கடவுள் மால்" என்று வருணிக்கின்றது.  கருடவாகனன் என்றும் பெயர் சொல்வர்.  கருடனில் ஆர்ந்து1 ஊடுசெல்பவர் ஆதலின் கருடாரூடன்2 என்றும் போற்றுவர்.  கார்வண்ணன்3 என்பது பலரும் அறிந்த பெயர்.  இவர் கருநிறம் உடையவர் என்பது இச்சொல்லின் பொருள்.  சக்கர முடையவராதலின் சக்கரதாரி, மற்றும் திகிரியான்.  சுந்தரத் தோளன்.  அழகிய தோள்கள் உடையவன்.  மறுமார்பன். செல்வமுடையான்  ஆதலின் திருவன்.  தெய்வச்சிலையான்.  நெடியோன்.

இவர் ஐம்படைக்கையர். ( பஞ்ச ஆயுதம்).  புணரியிற்றுயின்றோர்.4

மால் பற்றிய  மேன்மை பலவாதலின்,  மாலிமை என்ற சொல் "கௌரவம்"  "மதிப்பு" என்ற பொருட்களைப் பெறுவதாயிற்று.

எனினும், மால் என்பது கருப்பு என்றே பொருள்தரும்.  கருப்பு நிறமுடைமையின் இவர் ஆரியக்கடவுள் என்பது புனைவு.  கருப்பரான இவர் கருப்பர்களின் கடவுளே ஆவார்.   ஆகாயமும் கருமையே.( விண்ணின் நிறமும் இதுவே.  )  மீனவரால் வணங்கப்பட்டுப் பின்னரே இவர் ஆயர்களால் வணங்கப்பெற்றிருத்தல் கூடும்.  பரதவர் என்பது மீனவரைக் குறிக்கும் சொல், இறுதியில் பாரதம் கூறும் வரலாற்றுக் கதைக்கு வழிசெய்தது. பரதவர்> பாரதம்.  பரவை - கடல்.  பர + அது + அம் > பாரதம்,  முதனிலை நீண்ட தொழிற்பெயர்.5  கிருஷ்ணன், கிருட்டினன், கிஷன் என்பனவும் கருமை நிறம்பற்றிய பெயர்களே ஆகும்.

இவர் கடல்மேவிய,  வானமேவிய செல்வம்.  இது இயற்கையைப் பற்றிய சமயக் கோட்பாட்டையே அடிப்படையாக நமக்குக் காட்டுகிறது.

மால் என்பது லகர ரகரத் திரிபினால் மார் என்றும் மாறும் சொல். இதில் இகரப் பெண்பால் விகுதி சேர்ந்தே மாரி என்ற சொல்லும் அமைந்தது.  மாரி என்பது மழை என்றும் பொருள்படுவதால்,  இவ் வம்மை மழைக்கடவுளும் ஆகும்.

மால்  > மார் > மாரி.

இவ்விரு தெய்வங்கட்கும் தொடர்பு கூறும் புராணத்தில் உண்மையுள்ளது, பெயர்களில் அமைப்பினால்.

சுந்தர மூர்த்தி நாயனார் கூறுவதே உண்மை:

ஊனாய்உயிர் ஆனாய்உடல்    

  ஆனாய்உல கானாய்    

வானாய்நிலன் ஆனாய்கடல்    

  ஆனாய்மலை ஆனாய்

என்பார் அவர்.   6


 இவைகளிற் கடவுளை உய்த்துணர்ந்து, பின்னர் அவரை வணங்கியது

இம்மதம் ஆகும்.


தொன்ம வரலாற்றை அவற்றுக்குரிய நூல்களிற் கண்டுகொள்க. இது பெயர்பற்றிய இடுகையே ஆகும்.

அறிக மகிழ்க.

குறிப்புகள்:

1   ஆர்ந்து  -  உட்கார்ந்து  ( உள்+கு+ ஆர்ந்து> உட்கார்ந்து)

2   கல > கலுழன் > கருடன்.  நிறக்கலப்பு உடைய பறவை

3   கரு> கார்  [ கருப்பு ]

4   புணரி - கடல். புணரியில் துயின்றோன்.  (பாற்கடலில் பள்ளிகொண்டோன்)

5   தொழிற்பெயர் :  A noun formed from a verb.   e.g.  govern > government.  விகுதி - suffix. Here - ment is the suffix.

6   தழலாய் நின்ற தத்துவனே பாழாம் வினைக ளவைதீர்க்கும் பரமா 





மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை: