புதன், 14 ஜூலை, 2021

தாமரையும் முண்டகப் பூவும்!

 தாமரை என்பது ஒரு பெரிய பூவாகும்.  இன்னும் சிறிய பூக்களெல்லாம் பூவிதங்களில் அடங்குகின்றன என்பது நீங்கள் அறிந்தது. தாமரை ஒரு பனித்துறை மாமலர் என்று நம் சங்க இலக்கியம் கூறுகிறது.  ஆனால் தாமரைக்கு அப்பெயர் வந்ததற்கு என்ன காரணம் தெரிகிறதா?  அது நீருடன் தாழ்ந்து, நீரை மருவிக்கொண்டு நின்று அழகு காட்டுகிறது.

தாழ்+ மரு+ ஐ >  தா + மர் + ஐ > தாமரை  ஆகும்.

மர் என்ற சொல் இவ்வடிவில் தமிழில் இல்லை. அர் கர் உர் மர் என்று நாம் பேசுவதில்லை.  ஆயினும் இலக்கணப் பெரும்புலவரான பாணினி,  இவ்வாறு ஆழ்ந்துசென்று சொற்களின் அடியைக் கண்டுபிடிப்பது சரி என்று கருதுகிறார். அதன்படி சென்றால்:

மர் > மரு

உர் >  உரு 

என்று மொழியைக் கற்பிப்பது சரியென்று கொள்ளவேண்டும். உலகில் சரியென்றும் தவறு என்றும் எதுவுமில்லை.  ஒப்பமுடிவது  எது, ஒப்பவியலாதது எது என்று வேறுவகையில் சொல்லலாம்.  இன்னும் சொல்லப்போனால் எது வசதி என்பது தான் கேள்வியாகும்.  மக்கள் கூட்டம் சிலவற்றில் அர் மர் என்று பேசுவது மிக்கச் சரி.  நம் சிற்றூரில் அது சரியன்று.  அவரவர்களுக்கு எது  வசதியோ அதுவே ஒப்புக்கொள்ளப்படுகிறது. 

அர் உர் மர் என்று எம்மிடம் ஒருவன் கூறினால் யாம் அதன் பொருள் யாது என்று எண்ணிப்பார்த்து,    அர் : அவர்,  உர் - ஓர் உருவை;  மர் > மருவினார் என்று பொருள்கண்டுபிடித்து உணர்ந்து ஏற்றுக்கொள்வோம்.  மர் என்பதில் விகுதி இல்லை, எப்படி நீர் ஒத்துக்கொண்டீர் என்றால்,  உலகில் பல மொழிகள் விகுதிகள் இல்லாதவையாக உள்ளன.  அம்மொழிகளைப் பேசுவோரிடம் சென்று, உம்மொழியில் விகுதி இல்லை,  வெறும் முண்டமான சொல் மட்டும் இருக்கிறது, அதைப் பேசாதே என்று சொல்லிப்பாருங்கள்:  இராணுவம் வந்து சுட்டு அடக்கும் அளவிலான பெரிய போராட்டம் தொடங்கினாலும் நாம் வியப்புறுவதற்கில்லை!  அவர்களின் தருமம் அது என்று போய்விடவேண்டியதுதான். விகுதி, சந்தி, சாரியை எல்லாம் இருத்தலால் நாம் உயர்ந்தவ்ர்களுமில்லை;  அவர்கள் இன்மையால் தாழ்ந்தோருமில்லை. ஒரு மொழிக்கு ஏற்காதது இன்னொரு மொழிக்கு அமிழ்தம்.  இவற்றையெல்லாம் நன்கு அறிந்த பண்டைப்புலவர் பாணினி, அடிச்சொற்களைக் கண்டுபிடிக்க அது சரியான வழி என்று அவர்தம் இணையற்ற இலக்கண நூலில் ஓதினார். அவ்வாறாயின் அவர் புகழும் வாழ்க.

எப்படிச் சொன்னால் எளிதிற் புரியும் என்பது நம் முன் இருக்கும் கேள்வி.

சட்டியில் ஓட்டை இருந்தாலும் கொழுக்கட்டை வெந்துவிட்டால் நல்லபடியாக உண்டு மகிழலாம்.

ஆகையால்,  தா+ மர் + ஐ = தாமரை என்றோம்.

இன்னொரு மாதிரி சொல்வோம்:

தாழ் என்பதில் ழகர ஒற்றுக் கெட்டது ( விழுந்தது).  அது தா என்று ஆனது.

மருவு என்பதில் வு கெட்டு,  ரு என்பதில் உ வும் கெட்டது.  ஆக மர் என்று ஆனது.

ஐ விகுதி புணர்க்க,  தாமரை ஆனது.

இப்படிச் சொன்னால் புரிகிறதா.  சிலருக்கு இது சரியாகத் தோன்றும்.  ஆனால் புரியவைக்க வெவ்வேறு வழிகள் இவை.  சரி தவறு எதுவும் இல்லை.

எனவே நீரில் தாழ்ந்து அதை மருவி நிற்பது தாமரை என்று கண்டுகொண்டோம்.

தாமரைக்குப் பல பெயர்கள் உள்ளன.  அது அழகான மலராகையால் மனமிக மகிழ்ந்து,  மனிதன் பல பெயர்களை அதற்குச் சூட்டியிருக்கிறான்.  இன்னொரு பெயர் முண்டகம் என்பது. கேள்விப் பட்டதுண்டா? அது எப்படி அமைந்தது என்பதைத் தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

தாமரைக் கண்ணான் ( விண்ணு)  [விஷ்ணு]  உலகு என்று ஒரு குறளில் (1103) நாயனார் சொல்கிறார். நெற்றியையும் முண்டகம் என்பர்.  " முண்டகக் கண்ணா போற்றி" என்று கோயிலில் பாடும் பாட்டில் வருகிறது.  முண்டகக் கண் - நெற்றிக்கண். அல்லது தாமரை மலர்போலும் கண். எதுவென்பதை இடமறிந்து பொருள்பெற வேண்டும். 

தாமரையின் கீழ் முள் இருக்கிறது.  இப்போது முண்டகம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

முள் >  முண்.

ஆள் என்ற பெண்பால் விகுதியே ஆண் என்று திரிந்து ஆடவனைக் குறிக்கிறது. இது முன் இடுவித்த கருத்தே:

வள் என்பது வளம் குறிக்கும் ஓர் அடிச்சொல். வள் > வளம்.  இவ்வடியே வண் என்று திரிந்து, வண்ணம் என்ற சொல் உண்டானது.  அழகான நிறங்கள் இருந்தால் வளமான பூ என்று பண்டைத் தமிழர் கருதினது இதிலிருந்து தெரிகிறது.  கருத்துகள் விரியும்போது சொல்லடிகளும் விரிவு அடைகின்றன.

பள்ளு என்பது ஒரு பாட்டு.  ஆடுவோமே பள்ளு பாடுவோமே! (பாரதி).  பள் அடிச்சொல்.

பள் > பண்.  திரிபும் தொடர்பும் தெரிகிறதா?

முள்> முண் > முண் + து + அ + கு+ அம் =  முண்டகம்.  அதாவது வாக்கியமாகச் சொல்லவேண்டுமானால், அங்கு முள்ளை உடையதான மலர்.

முள்ளும் இருக்கிறது.  தகதக என்று வண்ணமும் இருக்கிறது.  எனவே,  முள்+ தக + அம் > முண்டகம்,  எனின் மற்றொரு முடிபு. இதுவும் ஏற்புடைத்தே.   இது தாமரைக்கே பொருத்தமானது.

இவ்வாறு தாமரைக்கு இன்னொரு பெயர் மொழியில் வழக்குக்கு  வந்தது. குறுந்தொகையில் :

"முண்டகக் கூர்ம்பனி மாமலர் ( குறுந்தொ. 51) "

என்பது காண்க.

தாமரை என்பதன்றி இச்சொல்லுக்கு வேறு  அர்த்தங்களும் உள்ளன. அவற்றை இன்னொரு வரைதரவில்[postt] கண்டு உரையாடுவோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

Edited 14072021 1716 

கருத்துகள் இல்லை: