வெள்ளி, 23 ஜூலை, 2021

முன்றில், முற்றம், பாகவதர்

 ஒரு வீட்டின் முன்பக்கத்தைக் குறிக்க ஒரு சொல் தேவைதான். இல்லாவிட்டால் வீட்டின் முன்பக்கம்,  இல்லத்தின் முகம்  என்று வேறு மாதிரி சொல்லி அதைக் குறிக்கப் பேசுவோர் முயற்சி செய்வார்கள்  ஒரு மொழியைக் கூடுமான வரை இடர்ப்படாமல் பயன்படுத்த வசதிகள் செய்து தருவது கற்றோர் கடன். இல்லாவிட்டால் மக்களே புலவர் உதவியின்றிச் சொல்லாக்கம் செய்ய வேண்டிவரும்.  இப்படி மக்களால் படைக்கப்பட்ட சொற்கள்  ஒன்றிரண்டு இங்குத் தரப்பட்டுள்ளன 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_10.html  சொல்:  (இ)டற்பம்.

இவ்வாறு மக்களால் அமைந்த சொல் இன்னொன்று:   (இ)டப்பா என்பது ஆகும்.

இந்த டப்பாக்கள் முதலில் மருந்து முதலியன இட்டு அப்பிவைக்க உண்டான சிறு உள்ளடைப்பிகள்.  இந்த இடு+அப்பிகள்,  இடப்பி என்று அமைந்து டப்பி என்றாயின.  அடைப்பிகளும் டப்பி என்று திரிதல் கூடுமாதலால் இது ஓர் இருபிறப்பி ஆகும்.

மீண்டும் முன்றிலுக்கு வருவோம்.  இதில் முன் உள்ள சொல் முன் என்பதேதான்.

முன் + து + இல் >  முன்றில்.

இச்சொல் பின் வல்லொலி பெற்று,  முற்றில்  ஆனது.

இன்னொரு விளக்கம். 

முன் என்பதன் மூலச்சொல் முல் என்பது.   முல் என்றாலும் முன் உள்ளது என்பதே.

முல் + து + அம் >  முற்றம்.

முல் + து + இல்  >  முற்றில்.

இவற்றில் து என்னும் எழுத்து இடைநிலையாய் வந்துள்ளது.

து (துகரம்) இடைநில்லாமல்  முகு+ இல் >  முக்கில் என்று அமைத்திருக்கலாம். முக + இல் > முகவில் என்றும் அமைந்திருக்கலாம். இவ்வடிவங்கள் அமையவில்லை ஆதலின்,  இனிப் புதிய அறிவியல் பொருட்களுக்கோ அல்லது புதிய புழக்கப் பொருட்களுக்கோ பெயர்களாக அமைக்கச் செயலிடம் உள்ளது.  முகு+ அம் > முகம் என்பதும்   முன்+ சி >  மூஞ்சி (முன்> மூன்>மூஞ்சி முதனிலை நீட்சிப் பெயர்), மூஞ்சூறு  (  மூஞ்சியானது உறுதல்,  உறுதலாவது மிகுதலே) என்பதும் முன்னரே அமைந்துவிட்ட பெயர்கள்.  ஒருவீட்டுக்கு முன் பாகம்  நீண்டிருந்தால் மூஞ்சூறு  என்று பெயர்வைப்பது சொல்லமைப்புப் பொருள் என்ற அளவில் சரியானது ஆயினும் வழக்குடன் ( அதாவது நடப்பில் உள்ள பெயருடன்) மாறு கொள்தலால் அது கூடாமை உணர்க. (கொள்தல்  > கோடல்).  நாலுகால் உள்ள ஒரு புதிய விலங்கு கண்டுபிடிக்கப் பட்டால், அதை நாம் "நாற்காலி" என்று பெயரிடுதல்  தவறு. காரணம் வேற்று வழக்குண்மைதான்.

து இடைநிலையாக வருவதுபோல  அது, இது உது என்பனவும் சொல்லாக்கத்தில் இடைநிலைகளாக வரும்.   எடுத்துக்காட்டு:  பருத்தல் என்ற வினையிலிருந்து,  பரு  + அது + அம் =  பருவதம் ( மலை).

இனிப் பாகவதர் என்ற சொல்லிலிலும் அது வந்துள்ளது.  ஒரு நீண்ட சமயச் சரிதையைப் பல  அல்லது சில பாகங்களாகப் பிரித்துப் பாடி மக்களுக்கு அல்லது மன்னர்களுக்கு / பிறர்க்கு உணர்த்துகிறவர்.

பாகம் +  அது + அர் >  பாக + அது + அர் >  பாகவதர். அதர் ( அது அர்) என வரவேண்டியது, ~வதர் என்று வருவது புணர்ச்சியினால் .  ( வகர உடம்படுமெய்).  இது விட்ணு கதை சொல்வோருக்கு வந்து, இப்போது பிற தெய்வ வணக்கத்தினருக்கும் பயன்படும் சொல்.

பாகவதம் என்பதினின்று வந்த சொல் இது என்பாரும் உளர்.  

[ து, அது முதலிய சொல்லாக்க இடை நிலைகள் இந்தச் சொற்களில் கருதப்பட்டன.  ]


பாகவதம் என்பதும் பாகங்கள் பல உள்ளதுதான்.

பகவானும் மன்னுயிர்க்கு வேண்டியதைப் பாகங்களாக்கி அவரவர்களுக்கும் உரித்தானதை வழங்குபவன் தான். (பகவு அன்,  பகவு ஆன்).

எப்படிச்சொன்னாலும்  பகு > பாகம்  (முதனிலை நீட்சித் தொழிற்பெயர்). ஓடமுடியவில்லை இதிலிருந்து.


பொழிப்பு:

இடு அப்பி  >  இடப்பி   டப்பி > டப்ப > dabba

அடைப்பு >  அடைப்பி > டப்பி >  dabba




அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை: