வியாழன், 15 ஜூலை, 2021

பகை, பரம்பு, வரம்பு

பரம்பு  என்றாலும் வரம்பு  என்றாலும் ஒன்றுதான். இரண்டும் தமிழில் உள்ள சொற்கள்.  திரிபு விதிகளின்படி  பகரம் வகரம் ஒன்றுக்கொன்று மாற்றீடு கொள்ளும்.  இங்குப் போலி என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.  போலி என்பதற்கு நாட்டில் மோசடி செய்யும் மனிதன் என்ற அர்த்தம் ஏற்பட்டுவிட்டது. ஒன்றுக்கு ஒன்று போலி என்று  விளக்கும்போது,  அது எப்படி?  இரண்டும் போலி என்று சொல்கிறீர்?   அப்போது உண்மையான மூன்றாவது எங்கே என்று கேட்கிறார்கள்.இது வாழைப் பழக்கதை போலாகிவிடுகிறது.  சிலர் போலி என்பதை வைப்பாட்டி என்ற பொருளில் வழங்குகிறார்கள்.  இவள்தான் அசல், மற்றவள் போலி என்கிறார்கள். போலியை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. தற்காலிக நிறுத்தம்தான்.

பகை என்பது வகை எனற்பாலதை நோக்க போலித்திரிபு வகையினது,   ஆனால் போலி அன்று.  பகை என்பது எதிரித்தன்மை கொண்டோரிடம் நிலவும் சூழலைக் குறிக்கும். இரு குழுக்களாகவோ அல்லது அவற்றுக்கு மேலாகவோ பிரிந்து நிற்கின்றார்கள்,  அடிக்கடி விரோத குரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பொருள்.  பகுதல் வினைச்சொல்.  பகு> பகு+ ஐ > பகை.   பகு <> வகு,   வகு+ ஐ > வகை எனல்  கண்டுகொள்க. இதனை நம் தமிழறிஞர்கள் சென்ற நூற்றாண்டுக்கு முன்னரே எடுத்துக்காட்டியுள்ளனர். வசந்தம் > பசந்த் என்று பிறமொழிகளில் வழங்கும்.  பிறமொழிகளில் பெரும்பாலும் அம் விகுதி இராது. வ என்ற முதலெழுத்து ப என்றாகும்.  இத்தகைய  ப -வ திரிபு இந்திய மொழிகளல்லாத பிற உலக மொழிகளிலும் உள்ளபடியால் இதனை "not language specific"  என்று மொழிநூலறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். எனவே இது பன்மொழிப் புழக்கப் போலித்திரிபு  எனலாம்.

சொல்லமைப்பில் பாகுபாடு என்றுமட்டும் பொருளுடைய பகை என்னும் சொல்,  அதனினும் மேலானதும் விரிந்ததுமான பொருளைத் தரும் சொல்லாக இன்றிருப்பதால்,  அதைத் தொல்காப்பிய முனிவரின் இலக்கணப்படி, திரிசொல் என்றே சொல்லவேண்டும். பகு என்ற சொல்,  பல்கு (பல்குதல்) என்ற வினையுடன் தொடர்பு கொண்ட சொல்.  பல்கு என்பதில் ல் என்னும் லகர ஒற்று இடைக்குறைந்துவிட்டால் அது பகு  ஆகிவிடுதல் தெளிவு ஆகிறது. ஒன்று பலவாதல் உட்பகவினால் ஆவதொன்றாய்க் கொளற்கும் உரித்தாம். பாகுபாடு என்ற சொல், இரு முதனிலை த்திரிபொட்டுச் சொல் ஆகும்.

இணைந்திருங்கள். நன்றி.

உரையாடலை இன்னோரிடுகையில் தொடர்வோம்.

Edited 1746  16072021 edits lost

To be reviewed.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





 

கருத்துகள் இல்லை: