ஞாயிறு, 25 ஜூலை, 2021

உட்கார்தல் தொங்கிருக்கை. குரிச்சி.

 ஒரு சட்டிக்குள் இருக்கும் குழம்பை அகப்பையால்  சுற்றிவிட்டு   அந்தச் சட்டிக்குள் சிறு  அலைகள் போல் எழும்படி கிண்டிவிட்டுக்கொண்டிருந்தால் அதைத் திராவுதல் என்பர்.  இச்சொல்  தமிழ்ப் பேரகராதியில் காணப்படவில்லை. கடைகளில் சட்டி கிண்டுகிறவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்தக் கேட்டிருக்கிறோம். ஆனால் எல்லாக் கடைகளிலும் இச்சொல்லை அறிந்திருப்பார்கள் என்று யாம் எதிர்பார்க்கவில்லை.  சென்னையில் உள்ள ஓர் உணவகக்காரர்க்குப்  பொட்டலம் கட்டுதல் என்பது புரியவில்லை.  நீங்கள் வாழும் நாட்டிலிருந்து இன்னொரு நகருக்குச் சென்றால் அப்போது பொட்டலம் என்ற சொல்லுக்கு  "பார்சல்" என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவரும்.  எனவே சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் எந்த உணவகத்திலும் யாம் திகைகவேண்டியதில்லை என்பதை யாம் உணர்ந்தோம்.  தமிழில் பேசித் தமிழனுக்கு "விளங்காமல்" போய் அல்லல் உறுவதினும் சீனனிடம் சீனன்பாசையிலேயே பேசி எதையும் வாங்கி வந்துவிடலாம். இங்கு அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

ஒரு மலேசியப் பட்டணத்தில் உந்துவில் போய்க்கொண்டிருந்த போது பசி வந்துவிட்டது. ஒரு மலாய்க்காரர் பொரித்த வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்தார்.  இந்த உணவு இந்தியாவில் எங்கும் கிடைக்காது. வாழைப் பழத்தைக் கரைத்த மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் இட்டுப் பொரித்து வெளிக்கொணர்ந்து  கொஞ்சம் ஆறியவுடன் கடித்து உண்ண நன்றாக இருக்கும்.  முக்கியெடுத்தல் என்றால்  முழுக்கி எடுத்தல். எண்ணெயில் மூழ்குவித்துப் பொரித்தல்.  சைவ உணவு கிட்டாத இடங்களில் இந்த மாதிரியான மலாய்ச் சைவப் பலகாரங்களை உண்டு  சில மணிநேரங்களையாவது சமாளிக்கலாம்.  இவற்றில் கவிச்சுப் பொருள்கள் இல்லை. என்ன நடந்தது என்றால்,  "கோரேங்  பிசாங்"  ( மேற்படி பொ.வா)  வேண்டுமென்று கேட்க,  அந்தக் கடைக்கார மலாய்ப் பெண்,  அது "பிசாங் கொரேங்க்"  எனவேண்டும் என்றாள்.  அப்புறம் விளையாட்டாகவே கொஞ்சம் இலக்கணம் பேசி மகிழ்ந்தோம்.  இறுதியில் எல்லாம் ஒன்றுதான் என்று அவளே சொல்லி முடித்தாள்.  நீங்கள் எங்கே மலாய் படித்தீர்கள் என்று கேட்க, எம்  ஆசிரியர் பெயரையும் படித்ததையும் சொன்னோம்.  மீண்டும் வந்து வாங்கும்படி கேட்டுக்கொள்ள,  விடைபெற்றோம்.  பொட்டலத்தை  "புங்குஸ்" என்று யாம் சொல்ல, புரிந்துகொள்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை.. 

தமிழ்நாட்டில் பார்சல் -----. சிங்கப்பூரில் பார்சல் என்றால் அஞ்சலகத்தில் அனுப்பப்படும் பெட்டிகளில் அடைக்கப்பட்டவைகளையே அது குறிக்கும்.

ஆனால் உட்கார்தல் என்ற சொல் இங்கும் தமிழ்நாட்டிலும் ஒருமாதிரியாகவே பொருள்கொள்ளப்படுகிறது.   இது உண்மையில்  உட்கு  ஆர்தலாகும்.  ஆர்தல் என்பதற்குத் தங்குதல் என்ற பொருளும் உள்ளது.  ஒரு வீட்டுக்குள் போய் உள்ளே ஆர்தலென்றால்  உள்ளே தங்குதல்.  அமர்தல் என்பதும் இவ்வாறு பொருள்கொள்ளப்படுதல் கூடும்.  மலையாளத்தில் "இரி" எனப்படுகிறது.  கன்னடத்தில் "குளித்துக்கொள்ளி" என்பர்போல் தெரிகிறது.  ( நம் நேயர்கள் இதை விரிவாக எமக்கு கருத்துரையிட்டுத் தெரிவிப்பார்களாக. அதற்கு முன் கூட்டியே நன்றி.

உள் + கு >  உட்கு.  இதில் ஆர்தல்  என்பதை இணைக்கவேண்டும்.  இந்தச் சொல் உளுக்கார்தல் என்றுமாகும்.   உள்+கு  என்பது உட்கு என்றும் உளுக்கு என்றும் இருவகையாகவும் முடிபு கொள்ளும். இந்த வழக்கமான செயலுக்கு ஏன் இருசொல்லொட்டாகச் சொல் அமைந்தது என்று தெரியவில்லை. வீட்டிற்குள் வந்தவரை  அமரவைக்கும் வழக்கம் அவ்வளவாகத் தமிழரிடம் இல்லையென்று முடிவு செய்யலாமா? .  தமிழன் விருந்தோம்பலில் மன்னன் என்பர்.  சொல் இருந்து தொலைந்துவிட்டது போலும். இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன் என்று பாடுகிறார் எம்.எம், மாரியப்பா!  சைவ அடியார்களையும் வைணவ அடியார்களையும் அமரவைத்துத்தானே அமுதிட்டு விருந்தோம்புதல் கூடும்?

நாற்காலிகளும் வெள்ளைக்காரன் வந்தபின் வழக்குக்கு வந்தவையோ?  கல்வெட்டில் இச்சொல் (நாற்காலி) கிடைத்துள்ளது.  குரிச்சி என்பது உருது என்றனர். ஆனால் முன் காலங்களில் வீட்டில் உள்ளே அமர்வதற்குப் பலகையுடன் தொங்கும் இருக்கைகள் இருந்தன. இவை மேலுள்ள சட்டத்தில் கட்டப்பட்ட தொங்கிகள். ஊஞ்சல் என்றும் சொல்லலாம்.   பின்னர் கால்கள் இணைக்கப்பட்டு நாற்காலிகள் அமைந்தன.  மேலே கட்டு இருந்த நிலையில் அவை "குயிற்சி" கள் ஆயின.   குயில் என்றால் கட்டு என்பது பொருள். கட்டித் தொங்கும் இருக்கை.  குயிற்சி என்பது பின்னர் குரிச்சி என்று அமைந்தது  என்பதே சரியான விளக்கமாகும். உருது மொழி அமைந்த பிறகு இது அங்குப் பரவிய சொல்லாகும்.  நேரமிருந்தால் இதை விரிவாகப் பின் அறிவோம்.

விர் >< விய்.   அதுபோல் குர் .>< குய்.  குரங்குதல் என்ற வினைச்சொல் தொங்குதல் பொருள்.  குர்  அடிச்சொல்.    குய்+ இல் > குயில்.  (பறவை அன்று).  குர் + சி > குர்ச்சி > குரிச்சி என்றும் இதை அறியலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை: