புதன், 22 ஏப்ரல், 2020

மாயனார் குயவன் - மண்ணுபாண்டம் (பொருள்).

இதை எப்படி விளக்குவது?

மாயன்  குயவன் எனின் விளக்குவதில் கடினமிருக்காது.  மாயன் என்பதும் ஆண்பால் ஒருமை.  குயவன் என்பதும் ஆண்பால் ஒருமை.

ஆனால் பாடலில் மாயனார் குயவன் என்றன்றோ வருகிறது?  ஆர் என்ற பணிவுப்பன்மை விகுதியும் இணைந்திருப்பதால், வியப்பு காரணமாக வந்த வழுவமைதி என்று இலக்கணம் கூறலாம்.  இதனினும் சிறந்த விளக்கத்திற்கு வர இயலுமா என்று பார்ப்போம்.

ஒரு வழி:

1.  மாயன்  ஆர்குயவன் என்று பிரிக்கலாம்.  உலகனைத்திலும் பல மாயங்களை உள்வைத்து இயக்கிக்கொண்டிருப்பதால்  இறைவன் மாயன் என்பது பொருத்தமே.  படைப்புத் தொழிலைச் செவ்வனே செய்திருப்பதால்
இறைவன் இயல்பாக எங்கும் காணப்படும் குயவன் அல்லன்  "ஆர் குயவன் ". நிறைவு பொருந்தித் திகழும் வேறுவகைக் குயவன்.  மனிதக் குயவனிலும் வேறுபட்டு நிற்பவன்.

இவ்வாறு விளக்கலாம். இதில் ஆர் என்பது விகுதியாகக் காணப்படாமல் தனிச்சொல்லாக இயல்கின்றது.

இறைவன் மேலான குயவன் எனினும் அவன் தந்த தேகம்  தேய்ந்தழிதலை உடையது.  மண்ணுபாண்டம் உடைந்து இறுதியில் மண்ணாகவே உதிர்ந்துவிடுதலைப் போலவே  தேகமும் தேய்ந்தொழிகிறது.
எனவே தேகம் என்பதும் தமிழ்ச்சொல்லே.  மிக்கப் பொருத்தமாக அமைந்த சொல்லென்பதை பன்முறை கூறியுள்ளோம்.

2 இன்னொரு வழி:

மாயன் என்பது மாயம் என்ற சொல், அதில் வரும் அன் என்பது ஆண்பால் விகுதியன்று என்பது இன்னொரு விளக்கம்.

அறம் -  அறன்;
மறம் -  மறன்.
திறம் - திறன்.
அகம்  - அகன்

மகரனகர ஒற்றுப் போலி.

இவைபோல்  மாயன் என்றிருந்தாலும் அது மாயம் தான் என்று முடிக்க.

மாயனார் குயவன் என்பது மாயம் ஆர் குயவன்.
பல மாயவேலைகள் செய்யும் குயவன் என்பதாம்.

கண்ணிற் படாது காரியங்களாற்றுபவர் எனற்பொருட்டு என்றும் கூறுப.
ஐந்தொழிலில் மறைத்தலும் ஒன்று.

3 மற்றொன்று:

மயம் என்பது மகிழ்வு முதலிய குறிக்கும்  பல்பொருளொரு சொல். இது எதுகை நோக்கி மாயம் என்று திரிந்தது என்று கொள்வதும் கூடும்.  ஆகவே மயனார் என்பதே மாயனார் என்று நீண்டுவந்தது எனினும் ஒக்கும். இவ்வாறு கண்டு பொருளுரைத்துக்கொ:ள்க.

காயமாவது, காய்ந்து அழிந்துவிடுவது.  மனிதன் இயற்றும் தீமைகளே அவனைக் காய்ந்து அழிக்கின்றன என்க.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

இஃது வள்ளுவனார் வாய்மொழி.  அறம் காய்ந்து கொல்லற்குக் குறியாதலின் காயம் எனினுமது.

உரையாசிரியர்கள் தம்முள் வேறுபடுதல் உலக நடப்பில் உள்ளதுதான். குறளுரையில் மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர்,  எல்லோரும் ஆங்காங்கு  வேறுபட்டுள்ளனர். (பேதம்).

பேதமாவது, உரையிற் பெயர்ந்து வேறு கூறுதல்.

இவ்வாறு பொருள் கூறாமல் " மாயனார் குயவன் "   வியப்பு, பணிவு காரணமாக வந்த ஒருமை பன்மை மயக்க வழுவமைதி எனலும் ஆகும்.

பாடிய சித்தர் அருகிலிருந்தால் கேட்டுவிடலாம். இல்லையே.
பொருந்துமாறு காணின் அறிந்துகொண்டு செல்க.


காயமே இது பொய்யடா,
காற்றடைந்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணுபாண்டம் ஓட்டா.

அங்கம் என்ற சொல்   காற்று அடங்கியது;   அடங்கு+ அம் = அடங்கம், இடைக்குறைந்து அங்கமாயிற்று,  அது தமிழ் என்று கொள்க.  அன்றி, உள்ளுறுப்புகள் அடங்கியதான உடம்பு எனினும் அமைவதே. இவ்விரண்டாவதையே இங்குள்ள இடுகையில் கூறியுள்ளோம்.

சொல்லமைப்பும் பொருளமைப்பும் ஒன்றுக்கு மேற்பட்டவாறு கூறுதல் கூடுமென்பது இயல்பு ஆகும்.


குறிப்புகள்:

தேகம் :  https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_3.html

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும்.


கருத்துகள் இல்லை: