வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஆத்திகம் ஒரு மறு‌ நோக்கு

ஆத்திகம் என்னும் சொல்லை இன்று மறுநோக்கினுக்கு உட்படுத்துவோம்.

முன் வெளியிட்ட இடுகையில் ஆசு திகம் என்னும் இருசொற்களால் இக்கூட்டுச் சொல் ஆக்கப் பெற்றதென்று கூறியதில் மாற்றமொன்றில்லை.
ஆனாலும் ஆசு என்பதன் அடிச்சொல் ஆக்கம் குறிக்கும் "ஆதல்" என்ற வினைச்சொல்லே
.
ஆசு என்னும் தொழிற்பெயரைப் பயன்படுத்திச்‌ சொற்புனவைக் காட்டாமல்,  ஆ என்னும் வினையைக் காட்டினும் விளைவு ஒன்றேயாகும். ஆத்திகம் என்றே உருக்கொள்ளும். உலகின்கணுள்ள பல்வேறு ஆக்கங்களில் பற்றுக்கோடும் ஒன்றாதலின் அவ்வாறு சொல்வனைதலும் ஏற்புடைத்தே ஆகும். ஈண்டு இறைப்பற்றையே நாம்  பற்றுக் கோடு என்று முன்கொணர்தலின் சொல்லின் மையக் கருத்து அதுவே‌ என்பதனைக் கவனத்தினின்றும் குறுக்கிவிடலாகாது.

திகம் என்பது   திகைதல் என்ற சொல்லினின்று வருகிறது.  திகைதலாவது தீர்மானப்படுதல். உறுதிப்பட்டு நிலைத்தல்.  " விலை திகைந்தது" என்ற வாக்கியத்திற் காண்க.  திகை+ அம் = திகம் என்பதில் ஐ மறைந்தது (கெட்டது என்பர் இலக்கணியர்).  (திக்) + அம் = திகம் ஆகும்.

ஆஸ்தி = சொத்து.    ஆஸ்திகம் (ஆத்திகம்) என்பது ஆஸ்தி  என்பதிலிருந்து வந்ததென்பது பொருந்தவில்லை.

சொத்துச்சேர்ப்பதும் ஆக்குவதே.  ஆஸ்தியுடையான் ஆக்கம் உடையான் என்பதறிக.   ஆக்கு > ஆக்குதி > ஆ(க்கு)தி >  ஆ(ஸ்)தி   என்ற சொற்புனைவே அது.

மற்ற சொற்கள்: திகம் என்னும் ஈறு அறிக.

திகு > திக்கு ( திசை).
திகை > திசை.  க- ச போலி.  இதுவும் திசை என்னும் பொருள்.
திகு > திகழ் > திகழ்தல் ( ஒளிவீசுதல்)
திகு + அள் = திங்கள்  ( நிலா).  ஓளிவீசுவதான நிலா.  மெலித்தல் விகாரம்.
திகு > திகிரி  ( சூரியன் , ஒளிவீச்சு)  பல்பொருட் சொல்,
திகு > திகை > திகைதி  ( நாள் தீர்மானித்தது),  திகைதி> திகதி > தேதி.
திகு> திகை > திகைத்தல் (  திசையைத் தேடுதல்,  ஆகவே  மயங்குதல்).

திகு என்ற அடிச்சொல் பல்வேறு நுண் பொருட் சாயல்களைத் தன்னுட் கொண்டது.  இவற்றுள் ஒளி என்ற பொருட் சாயலை மேற்கொண்டு திகு + அம் = திகம் எனினும்  " ஆக்கத்தின் ஒளி"  (தரும் வழி ) என்று பொருளுரைக்கினும் அதுவும் ஏற்புடை த்து என்று வாதிடுதல் கூடும்.  இதேபோல் திகு = திசை என்று கொள்ளினும் "ஆக்கமுடைய மார்க்கம்" என்ற பொருள் தந்து   நலமே காணக் கிட்டுவ தாகும்.  ஆகவே பொருள் மலிந்த
ஈரடிச் சொற்களை ஈண்டு நாம் எதிர்கொள்கின்றோம் என்பதை மனத்      துக்கண்     நிறுத்தவே இஃது ஒரு பல் பிறப்பிச் சொல் என்பது தெளிவு பெறும்.


நாளடைவில் சொற்கள் பொருள்விரிவடைவது இயல்பு.  காரணங்கள் உளவாக, பொருள்விரியும்.  எ-டு: திகழ்வது சூரியன்;  சூரியன் வட்டம், ஆகவே வட்டமென்பது பெறுபொருள். (derived meaning).

இதுவும் காண்க.

ஆத்திகம் http://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_28.html

தட்டச்சுப் பிறழ்வுகள் காணின் சரிசெய்யப்பெறும்.
You may also help by pointing out. 

திருத்தங்கள்: பெறும் என்பது பேறும் என்று பிறழ்ந்தது --
திருத்தம் செய்தோம்.  29122020




.

கருத்துகள் இல்லை: