செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கொன்றொழிக்கும் கொரனா நட்பு.

ஆவீதி சென்றறி யார்க்குநற் பால்கொடாது
நாய்வீதி யில்பிறரை நண்ணாது கண்டீரோ
கோவீது நுண்மியோ கொல்நட்புக் கொள்ளுமே
தாய்வீடே  ஆமிவ் வுடல்.


பொருள்:

கொட்டிலில் நிற்கும் பசு வீதிக்குச் சென்று முன்பின்
அறியாதவருக்குத் தன்மடியைத் தடவவிட்டுப் பால்
கொடுப்பதில்லை.  வீதியில் நிற்கும் நாய் அறியாதவரிடம்
செல்லாது. இவற்றுக்கெல்லாம் அறிமுகம் தேவை.

கோவீது ( கோவிட்19 என்னும் ) கிருமியோ கொன்றுவிடும்
நட்புக் கொள்கிறது.  அறிமுகம் தேவையில்லை.  மனிதனின்
அல்லது மற்ற உயிரின் உடலைத் தன் தாய்வீடு போல்
ஆக்கிக்கொண்டு பெற்றுப் பெருக்கம் அடைந்துவிடுகிறது.
இக் கிருமி யார் எது என்று பாராமல் ஒட்டிக்கொள்வது
ஆகும். ஒட்டியபின் ஒட்டிய இடத்தில் அழிவு ஏற்படுத்துவதால்
அது கொல்நட்பு என்போம்.

இது இன்னிசை வெண்பா.  இதில் கண்டீரோ என்ற சொல்லை
எடுத்துவிட்டு " நோய்தரும்" என்ற சீரைப் புகுத்தினால் அது
நேரிசை வெண்பா ஆகிவிடும்.

நோய் வராமல் தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள்.
நலமே நடக்கட்டும். உலகு பழைய நன்னிலைக்கு
மேவுக. நெருங்கிச் செல்வதைத் தவிர்க்கவும்.

நண்ணுதல்  -  அடுத்துச் சென்று ஒட்டுதல்.
நுண்மி  (வைரஸ் பாக்டீரியா முதலிய நுண்மங்கள்.)
 

கருத்துகள் இல்லை: