புதன், 15 ஏப்ரல், 2020

கடிகாரம் அதன் உள்பொதிந்த காலவிரைவுக் கருத்து.

கடு என்பது ஒரு தமிழ் அடிச்சொல்.  அது அடு என்பதனுடன் மிக நெருங்கிய சொல்லென்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா? ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கி அடுக்கப்பட்ட எதுவும்  அந்த அடுக்கிய நிலையில் இருந்து நழுவாமல் நிற்குமானால் அது "கடு "  ஆகிவிடுகிறது. அதாவது தன் நெகிழ்தன்மை, நழுவலின்மை  அது கடு  ஆகின்றது.     இதை

அடு >  கடு

என்று குறிப்போம். அடு ( அடுத்துவரல்) என்பதிலிருந்த நெகிழ்தன்மை கடு என்பதிலில்லை.  கடு கடுமை ஆகும். கடுமையுடைய பொருள்களைத் தொகுத்துக் கூறி அவற்றின் தன்மை விளக்குவிக்க வேண்டின்,  அதனைக் "கடு+ இனம்" என்று உருவாக்கிக் "கடினம்" என்கின்றோம். கடினப்படுதல் என்றால்  கடுமை என்று வகைப்படுத்தப்படும் தன்மை உடையதாதல்  என்று விரிக்கலாம்.

இவ்வாறே  மெல்லவோ இயல்பான நிலையிலோ அடுத்தலை -  அதாவது அடுத்துச் செல்லுதலை விடுத்துச் சற்று முயன்று விரைந்து அருகிற் சென்றால் அது  கடுகுதல் ஆகின்றது.  கடுகுதல் எனற்பாலது   முயன்று விரைதலைக் குறிக்கும்.   எப்படியும் கடுகுதலில் ஒரு சிறிய கடின முயற்சியாவது இருக்கவேண்டும்.   அதுவே கடுகுதல்:   இதிலிருக்கின்ற உள்ளுறைவு கடின முயற்சியுடன் கூடிய விரைவான முற்செலவு  ஆகும்.

இப்படி வினைச்சொல்லான கடுகுதல் என்பது, பெயரானால் கடுகு என்ற தாளிக்கப்பயன்படும் விதையைக் குறிக்கும். இப்போது கிடைக்கும் கடுகுகளில் காரம் எதுவும் தென்படவில்லை. அதை எண்ணெயில் இட்டுச் சூடாகி வெடிக்கையில் ஏற்படுவதைத்தான் " கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" என்றனர்போலும்.  நீங்கள் கடுகுபற்றி அறிந்தவராய் இருக்கலாம். இந்தப் பழமொழியை விளக்குவீராக. கடுகில் வெண்கடுகும் உண்டு. மனிதருள் வெண்டோலர் இருத்தலே போல். கடுகு சிறுத்தல் பருத்தல் அறியோம். யாம் அதனைக் கொஞ்சமே வாங்கி விரைவில் முடித்தலின்! கடுகுமணி அணிதற்கு அதனைச் சென்று வாங்கி வந்தாலே இயலும்.

ஏன் இப்படிக் கூறுகிறேம் என்றால்,  காரம் என்ற சொல்லோ கரு என்பதனடிப் பிறந்தது.  கொஞ்சம் கருகலானால்தான் காரம் என்ற சொற்பொருட்குப்  பொருந்தும்.  அப்போதுதான் வாசனை மிகுதல் உண்டாகும்.

கரு + கு = கருகு > கருகுதல்.
கரு + அம் = காரம்.  கரு என்பது அகரமுன் கார் ஆனது. இது ஒரு என்பது உயிர்முன் ஓ என்று நீண்டு (ஓர்) ஆவதுபோலுமே.

காரம் என்ற சொல்லமைந்த இளநாட்களில் கருகலால் கிளம்பிய மணத்துடன் கலந்த காற்றினை எண்ணியே செயல்பட்டனர் எனினும் இந் நுண்பொருள் பின்னர் (பிறபதங்களிற் போலவே)  இழக்கப்பட்டு,   காரம் என்பது கருகலாலன்றிப் பிற முறைகளில் எழுந்த கடுமையான மணத்தையும்  குறித்துப் பொதுமை அடைந்தது என்பது உண்மையாகும்.

ஆனால் கடிகாரம் என்பதில் என்ன காரம் உள்ளது,  கூறுக. கடிகாரம்.  அது காரத்துடன் கடிப்பதுமில்லை. கடிமணம் போலுமோர் பதமோ காண்போமே!
கடி என்பது விரைவு, புதுமை ஆகியனவுமாகும்,     அம்பு கடிவிடுதல் என்றால் வேகமாக அது விடுதலென்பது.[சங்கத்துச் சொற்றொடர்]

 வேகமாகச் சென்று முடிந்து  விடுவனதம்மில் , மணிநேரம் என்பது முன்மை வாய்ந்தது ஆகும். போயின் வாராதது நேரம் என்பது.  நாழிகை என்றும் இஃது பொருள்படும்.  நாம் எதிலேனும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற காலை, அது போவது தெரிவதில்லை. நாம் அறியாமல் அது சென்று மறைவதனால், அதன் விரைவு வியத்தற்குரியது ஆகும்.

அறியாது அடைவு கொள்வதால்

கடி ( விரைவு) +  கு ( சேர்வு அல்லது அடைவு) + ஆரம்

ஆனது.  ஆதலின் பண்பின் காரணமாய் இப்பெயர் அமைகின்றது.


விரைந்தோடுவதென்னும் பொருளில் கடுகு+  ஆரம் = கடுகாரம் > கடிகாரம் எனினும் அதுவே.  ஈற்று  உகரம் இகரமாகும்.  கடு> கடி.  மூலம் கடுவென்பதே.

கடி என்பது கூர்மைப் பொருளும் உடையது. மற்றும் முகூர்த்தம் என்று அர்த்தமும்  தரும்.  கடிகை என்பது நேரம் அமைய மங்கலம் பாடுதலையும் சுட்டுவது.

கடு, கடி, கடுகு(தல்),  என்பவை தொன்றுதொட்டு  நேரகாலத்துடன் தொடர்பு பட்டவை என்பதை ஊன்றிப் பற்றிக்கொள்க. முகூர்த்தம், மங்கலப்பாடல் முதலியவை அவற்றோரன்ன வானவை. விரைவு என்பது செயலிற் காலக்குறுக்கமன்றி வேறில்லையாதலின் வேறு விரித்தல் வேண்டாமை உணர்க.

ஆர்தல் - அணிதல், பொருந்துதல்.

ஆரம்  =  அணி, பொருந்துபொருள்.

காலவிரைவு காட்டும் பொறி,  கடிகு ஆரம் >  கடிகாரம் ஆயிற்று.

கடு - கு எனற்பாலது  காலவிரைவு அல்லது காலச்செலவு குறித்தாலும்  இதில் காலம் என்பது தொக்கது. நாற்காலி என்பது சொல்லமைப்புப் பற்றி நாலுகால் உள்ள நாய் பூனை உட்பட அனைத்தையும் குறித்தல் கூடுமெனினும்  அது வழக்கில் இருக்கை என்றே பொருடருதலின், காரண இடுகுறி ஆனது போலவே கடிகாரமென்பதும் காரண இடுகுறி என்று உணர்க. எனினும் கடு>கடி என்பதிற் பிறந்த சொற்கள் பல கால நேரப் பொருண்மை உடையனவாய் இருத்தலின்,  இஃது காரண இடுகுறியே ஆயினும் நாற்காலி என்பதினும் சற்று மேனிலைப்பட்டு நிற்றலை உணர்ந்து இறும்பூது எய்தவேண்டும்.

இது பின் அயலிலும் சென்று கொடிநாட்டிய சொல்.

இப்போது காலக்கருவி குறிக்கும் சொற்கள் பல இருப்பினும் இது முந்து ஆக்கம் ஆயிற்று என்றுணர்க.

கடிகை = நாழிகை:  

கடிகை+ ஆரம் > கடிகாரம்,  கை என்றவீற்றில் ஐ கெட்டது, ககர ஒற்றில் ஆகரமேறிற்று.  கடிகை என்பதிற் கை விகுதி,  கு அன்றி க் என்று குன்றி ஆ என்னும் வரு விகுதி முதலுடன் இணைப்புற்றது.  ஆரமென்பது வட்டு வளையமென்று போதருதலின், நாழிகைவட்டில் என்று கொள்ளவும் தக்கசொல் இது.  அவ்வட்டில் கழிந்து மணிப்பொறி வாழ்வினுட் புக்க காலத்து அஃது மணிப்பொறி குறித்து புதிதுபுகுந்ததையும் உணர்த்திற்று. இவ்வாறு இதனை விளக்கினும் ஏற்புடைத்தே  ஆம். மரப்பட்டை குறித்த சீரை என்ற சொல் இன்று நூலாலும் நெகிழியாலும் ஆனவற்றையும் குறித்தல்போலும் இதுவாகும்.

அறிவீர், மகிழ்வீர். மகுடமுகி என்னும் கொரனாவினின்றும் தப்புதற்குரிய அனைத்து வழிகளையும் விடாது பற்றித் தொடர்க.  நீடுவாழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.

 





கருத்துகள் இல்லை: