புதன், 11 ஜூன், 2014

ரங்கசாமி ரங்கன்

பழங்காலத் தமிழர்களுக்கு  ர ரா ரி ரீ வரிசையில் சொற்கள் தொடங்கக் கூடாது.  இது ஏன் என்று தெரியவில்லை. சொல்லுக்கு முதலெழுத்தாக எந்த எந்த எழுத்துக்கள் வரலாம் என்று விதிகள் செய்து அவற்றை அவர்களின் முன்னோர் பின்பற்றி வந்தனர் என்பது காரணமாக இருந்தாலும் அது வரலாற்றுக் காரணமே தவிர அறிவு அடிப்படையிலான காரணமன்று. இப்படிப் பல விதிகளை வைத்துக்கொண்டு தமிழ்ப் புலவன் தள்ளாடிக்கொண்டிருந்ததால்,  தமிழ்ப் புலவனைச் சமாளிக்க, பல சொற்களைப் பிற மொழிகளில் சேர்க்க வேண்டியதானது மட்டுமின்றி,  பல புதிய மொழிகளையும் மாறுபட்டு நின்றோர் படைத்துக்கொள்ளத் தலைப்பட வேண்டியதாயிற்று.

இத்தகைய விதிகள் இனி மாறுபடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

ரங்கன் என்ற பெயர் கண்டு மேற்கண்டவாறு எழுதுகின்றேன். அந்தச் சொல்லை இப்போது  அணுகி  ஆய்வோம்.

சீரங்கம்  என்று சொல்லப்படும் கோவில், ஆறு இரண்டாகப் பிரிந்து இடையில் இருக்கும் நிலத்தின்மேல் அமைந்துள்ளது.  இவ்விடம் ஓர் அரங்கு மாதிரியானது. அங்கு குடி கொண்டிருக்கும் ரங்கன் உண்மையில் அந்த அரங்கின்மேல் எழுந்துள்ளான்,   அவனை அரங்க சாமி என்றது   மிக்கப் பொருத்தமானது. அரங்கசாமி என்பதை  அரங்கண்ணல் என்றும் பெயர்த்துக் கூறுவர். சாமி என்பதும் அண்ணல் என்பதும் .நிகரானவை.  "அண்ணலும்  நோக்கினான்  அவளும் நோக்கினாள் "  என்று கம்பர் கூறல் காண்க.

நாளடைவில் அது தலையிழந்து ரங்கசாமி  ரங்கன் என்றானது.

சீர்அரங்கம்  (சீரரங்கம்) என்பது தன்  இரு ரகரங்களில்  ஒன்றை இழந்து   சீரங்கம் ஆனது.   பின் இது  ஸ்ரீரங்கம்  என்று அழகாய்  அமைந்தது. 

சென்ற நூற்றாண்டுத் தமிழ்ப்  புலவர்கள் தலைபோன  சொற்கள் சிலவற்றை அறிந்து கூறினர். அவர்களுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். முறையாகச் சிந்திக்காமல்  தமக்குப்  புலப்படாதவற்றையெல்லாம் தமிழல்ல என்றனர் சிலர்.  நிற்க :

அரங்கசாமி  ரங்கசாமி ஆனதை விளக்கியுரைத்தவர் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்பட்ட  மறைந்த அறிஞர்  கி. ஆ பெ  விசுவநாதம் அவர்கள்.

அறிந்து இன்புறுவோம்.


கருத்துகள் இல்லை: