வெள்ளி, 6 ஜூன், 2014

சாம்பிராணி

பழைய தாள்களை வீசுவதற்காக எடுத்துக்கொண்டிருக்கையில், 2008ல் எழுதிய எனது குறிப்பு ஒன்று கிடைத்தது. அது சம்பிராணி பற்றியது.
இதை முன் ஓர் இணையதள வலைப்பூவில்  எழுதியிருக்கிறேன்.

சாம்பான்  என்பவன் பிணம் எரிப்பவன்.  இதன் வினைச்சொல் "சாம்புதல்" என்பது. அதாவது எரியூட்டுவது, புகை எழுப்புவது.  சாம்பார் என்பதும் நன்கு  குழைய வேகவைத்த பருப்பு.  இனி  சாம்பு சாம்பு என்று சாம்பிவிட்டேன் என்று சொல்வதுண்டு.  குழைந்து வீழும்படி உதை அடி கொடுத்தேன்  என்று பொருள்படும்.  சாம்புதல் :  வேக வைத்தோ, எரித்தோ, தாக்கியோ செய்வதைக் குறிக்கிறது.

சாம்பு + அரண் + இ = சாம்பரணி , இது பின் சாம்பிராணி  ஆயிற்று. எரிக்கும் போது, அல்லது தணலில் குழைவித்துப் புகை கிளப்பும்போது ஈ, கொசு, எறும்பு முதலியனவும் பிறவும்  அண்டாமல், அரணாக விளங்குவது என்பதே பொருள்.

புகையிலை போயிலை என்று திரிந்தாற்போல சாம்பரணி சாம்பிராணி  ஆகிவிட்டது. சாம்பிராணியில் பிராணி எதுவும் இல்லை.

சாம்புதல் எரித்தலையும் குறிக்கும் என்பதை சில அகரவரிசைகள் தவறவிட்டுவிட்டன.  சாம்பல் என்ற சொல், இன்னும் நம்மிடை வழங்குதலை மறந்தனர். எரித்து வருவதே சாம்பல்.

கருத்துகள் இல்லை: