செவ்வாய், 3 ஜூன், 2014

உலகம், உகம், இகம்.

உலகம் என்ற சொல், தலையிழந்து லோகம் என்று திரிவதும், வேறு மொழிகளில் லோக் என்று குறுகுவதையும் நீங்கள் அறிவீர்கள்.

இப்போது அதே உலகச் சொல், வேறு திரிபுகளை அடைவதை அறிந்து இன்புறுவோம்.

எல்லாம் என்பது  கவிதைகளில் "எலாம்" என்று வருவதை அறிவீர்கள்.  இதை இடைக்குறை என்று கூறுவோம். தொகுத்தல், இடைக்குறை முதலியவற்றுக்குள் இருக்கும் வேறுபாடு இப்போது பேசத் தேவையில்லை.

உலகம் என்பது  உகம் என்று  குறையும். லகரம் இதில் மறைகிறது. உலகம், உகம் என்று மாறி, அதே பொருளைத் தந்து நிற்கும்.

சில வேளைகளில் இங்ஙனம் எழுத்து(க்கள் ) மறையும்போது, பொருள் சற்று மாறுபட்டுவிட்டதுபோல் தோன்றுவதும் உண்டு.

நண்பர் >  ந(ண்)பர் > நபர். தோழன் என்ற பொருள் மாறி, வெறுமனே "ஆள்" என்ற பொருளில் வரும். தோழர் என்ற சொல்லும் இப்படி மாறாமலே பொருளிழந்து வருவதுண்டு. "அந்தத் தோழர் கடைக்குப் போய்விட்டார்." இப்படி இச்சொல்லைப் பொது நிலையாகப்  பயன்படுத்துவோருக்கு எல்லோரும் தோழர்தாம்.

நிற்க, உலகம் உகம் என்றாகி,  மீண்டும் முதற்குறைந்து "கம்" ஆகி, தனியே நிற்காமல், இகம் ஆகிறது.  இ= இந்த; கம் = (உல)கம். இது முதற்குறைந்த சொல் ஆதலின் "க் " என்ற வல்லெழுத்துத் தோன்றவில்லை போலும். அன்றியும் சொல் அமைப்புகளில் ஏனைப் புணர்ச்சிகளில்போல் வல்லெழுத்து தோன்றாமலும் வரும் .

இகபர சுகம்,  இக பர மிரண்டிலும் நிறைவான ஒளியே!  ........என்பவற்றைக் காண்க.

உலகம், உகம், இகம். அறிந்தின்புறுக.

உலகம் என்பதில் கம் மட்டும் பிரிந்திடுமாயின்,  அது உண்மையில் கு+அம் அன்றோ? அப்படியானால், இ+கு+அம் = இகம்! இஃது உண்மைதான் என்றாலும், இத்திரிபுக்குக் காரணம், மேற்கண்டபடி என்பத‌றிக.

இவ்வுலகம் >   இ(வ்வுல)கம் >  இகம் எனினுமாம். This is an expertly abbreviated word.  

கருத்துகள் இல்லை: